திங்கள், 24 நவம்பர், 2014

அய்யா வைகுண்டா் அவதாரம்


அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது

வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்

இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்

பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை

தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை

மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர்நடக்கும் கலியுகத்தை அழித்து ரின்ப நிலையான தர்மயுகத்தை மலரச் செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரானஅரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில்பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள்நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக