திங்கள், 24 நவம்பர், 2014

அய்யா கால்நாட்டிக் கொடுத்த கடம்பன்குளம் நிழல்தாங்கல்

அய்யா வைகுண்ட சுவாமி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் இறைவனை வழிபடவும், ஏழை எளியோருக்கும், நடந்து செல்லும் வழிப்போக்கர்களுக்கும், தாகத்தால் தவித்து வரும் மக்களுக்கும், பசியோடு வரும் மக்களுக்கும் தண்ணீரும்,அன்னதர்மமும் செய்து தர்மம் செழிக்க நிழல்தாங்கல் என்ற பெயரில் வழிபாட்டு தலங்களை அமைக்க எண்ணினார்.அங்கு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுவழிபாடு செய்து, விழாக்கள் நடத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

அதன் விளைவாக உதித்த முதல் தாங்கல் கடம்பன்குளம் தாங்கல் ஆகும்.அதன் படி தானே அத்தாங்கலுக்கு கால் நாட்டி கொடுக்கவேண்டும் என்று எண்ணி அய்யா கடம்பங்குளம் நோக்கி நடக்கலுற்றார். வரும் வழியான பாம்பன்குளத்தில் அய்யா அமர்திருக்கும்போது, அய்யா வந்ததை அறிந்த கடம்பன்குளத்தை சார்ந்த மாடக்கண் நாடார்,ஒருசிலருடன் சென்று அய்யாவை கடம்பன்குளதிற்கு அழைத்தார்.அதன்படி அங்கே சென்று மறுநாள் காலை 4 மணிக்கு குருத்தோலை நட்டு பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று அய்யாகூறி பணிவிடைகள் செய்ய அரும்பத்த பண்டாரம், அறிவுள்ள பண்டாரம், அஞ்சாதே பண்டாரம் மூன்று பேரையும் நியமித்தார்.மாடக்கண் நாடார் மீது அய்யாவின் பூரண அருள் இறங்கியது. தாங்கலை நிறுவி ,தாங்கலில் பனிவிடை முடிந்த பின் அய்யா கடன்பங்குளத்தை விட்டு சாமிதோப்புப் பதிக்குச் சென்றார்.

அதன்பின், மாடக்கண் நாடார் மகன் யாமக்கால நாடார் காக்கரை என்ற ஊருக்குப் தாங்கலுக்காக பிச்சைக்கு(தர்மம் வேண்டி) சென்றார். அந்த ஊர்ப் பண்ணையார் "இந்த ஊரில் கொஞ்ச காலம் மழை இல்லை,அதனால் பிச்சைப்போடுவதற்கு மக்களிடம் வசதியுமில்லை.உங்கள் ஊருக்கு வந்த அய்யா வைகுண்டசாமி என்பவர் குருத்தோலை நாட்டி திருவிழா நடத்தச் சொன்னாராமே. அப்படி உறுதியுள்ள சாமியாக இருந்தால், இந்த ஊரில் மழையை பெய்ய வைத்துவிட்டு நீர் பிச்சைக்கேளும் தருகிறேன்" என்றார். யாமக்கால நாடார் அவர்கள் அய்யாவை வேண்டி அங்கேயே நின்றார்கள்.

சிறிது நேரத்தில் மேகங்கள் கருத்தன. அந்த ஊரில் உள்ளவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் மழை வேகமாகப் பெய்துவிட்டது. யாமக் கால நாடார் கேட்டப் பிச்சையை காக்கரைப் பண்ணையார் வழங்கினார். இதே அற்புதம் பண்டாரகுளம் ஊரிலும் நடைபெற்றது. அய்யா வந்த காலம் கடம்பன்குளம் ஊரில் 34 குடும்பங்கள் வசித்து வந்தனர். சாமிதோப்பு பதிக்கு அய்யாவை கடம்பங்குளத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சென்றிருந்தார்கள். அப்போது சாமிதோப்பில் அய்யாவுடைய திருநாளை எப்படிக் கொண்டாடுவது எத்தனை நாள் கொண்டாடுவது என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது, சாமி தோப்பு வந்திருந்த அன்பர்கள் அனைவரும் நம் அய்யாவுடைய திருநாளை பத்து நாட்கள் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
பத்து தினங்கள் திருவிழா நடத்த வேண்டும் என்றால் கொடி கம்பம் நட்டு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது வசதிபடைத்த ஒரு நபர் எத்தனை திருவிழா இங்கு அய்யா நடத்தினாலும் அத்தனை திருவிழாவிற்கும் கொடியேற்ற தங்கக்கயிறு நான் தருகிறேன் என்று அய்யாவிடம் சொன்னார்.ஆனால் அதை ஏற்காத அய்யா கடம்பன்குளத்தைச் சேர்ந்த என் மக்கள் நூல் கயிறு கொண்டு வந்து கொடியேற்றத்திருநாளை நடத்தித் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். கொடிமரவேலை மிக விரைவாக சிறப்பாக நடைபெற்றது. பத்து தினங்கள் திருவிழா நடத்தத் தீர்மானித்து அய்யா அப்போது சொன்னது போல் கடம்பன்குளம் அன்புக்கொடி மக்களை கொடிகயிறு கொண்டுவரச் சொல்லி சுவாமி தோப்பிலிருந்து அழைப்புச் சொல்லி விட்டார்கள். அன்று முதல் இன்றுவரை ஆண்டுக்கு மூன்று திருவிழாவான தை, வைகாசி, ஆவணி திருவிழாக்களுக்கு கொடிக்கயிறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, தாங்கலில் மாசித்திருவிழா, ஆனித் திருவிழா, கார்த்திகைத் திருவிழா மற்றும் மாதம் முதல் ஞாயிறு, பணிவிடை, அன்னதர்மம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அய்யாவுடைய தாங்கல் பெயருக்கு பக்கத்தில் உள்ள சொத்துக்களை அய்யாவுடைய அன்புக்கொடிமக்கள் நன்கொடையாக வாங்கிக்கொடுத்ததும் உண்டு. தாங்கலுடைய வரிக்காரர்கள் சார்பாக வாங்கப்பட்டதும் உண்டு. முதல் ஞாயிறு அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல அன்பர்கள் தாங்கலில் வந்து அய்யாவுக்கு பால் வைத்தும், சுருள் வைத்தும் வழிபட்டுச் செல்வார்கள். எத்தனையோ காலகட்டங்களில் பல வழிகளில் வறுமையும், சோதனையும் ஏற்பட்டகாலத்திலும் கூட அய்யா வழிபாட்டைத் தவிர அய்யா வந்தது முதல் பிறவழிபாடே இல்லாமல் கடம்பன்குளம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அது அய்யாவுடைய சிறப்பே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக