திங்கள், 24 நவம்பர், 2014

கலியை பற்றி அகிலத்திரட்டு அம்மானை

கலி என்றால் எலி அல்லவே கணையாழி வேண்டாமே
வலி மாய நினைவு மாய்மாலம் என்மகனே
ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே"

என்று கூறுகின்ற இப்பாடலில் கலி என்பது "வலி மாய நினைவு மாய்மாலம்"என்று வரையறை கூறுவதை பாருங்கள்.
அதாவது, வலிமை பொருந்திய மாயதன்மையுள்ளதும், நினைவுகளினால் உருவாகின்றதும் ஆகிய தீய சக்தி ஆகும்.இங்கு மாலம் என்னும் சொல் பேய் என்னும் பொருளைக் கொடுத்துத் தீய சக்தியைக் குறிப்பிட்டு நிற்கிறது.மாய்ந்து போகக் கூடிய வலிமை பொருந்திய இந்த தீய சக்தியை அத்வைத தத்துவம் மாயை என்கிறது.இந்த மாயை எப்படி உருவாகிறது?
நம் என்ன அலைகள், நினைவுகள் தான் இந்த மாய விளையாட்டுக்கு காரணம் ஆகும். அவை எங்கிருந்து தோன்றுகின்றன?என்னும் கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டிருந்தால் மாயை தோன்றாது. எதை என்னுவோமோ அது ஆவோம். எனவே மாயை ஆய்வு இல்லாத நமது நினைவின் உள்ளிருந்து தோன்றுகிறது.
பேய் ஒன்று இருப்பதாக நினைத்தால் அவனை பொறுத்தவரை அவனுக்கு பேய் உண்டு. அது அவனது ஆய்வு இல்லாத நினைவினால் உண்டானது.நோவு உண்டு என நினைத்தால் அவனுக்கு நோவு உண்டு.அது அவன் நினைவினால் உண்டானது .
இதுபோல எதை மனதில் உருவாக்குகிறானோ அதுமயமாகின்றான் மனிதன்.நாம் காண்பது ,நினைப்பது எல்லாம் உண்மையில் இல்லாதது ஆகும்.அது மாயையின் மாய்மாலம் ஆகும்.
அப்படியானால் எது உண்மையான பொருள்?அதுவே பரம்பொருள்.அது,நினைவுக்கும்,வாக்குக்கும்,அறிவுக்கும் எட்டாத பொருள் ஆகும்.அதை மனிதன் எட்டும் போது பரம்பொருளில் ஐக்கியமாகின்றான்.

இதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது..
"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொம்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவால் என்றார்"

இதன் பொருள் உலகில் வாழும் மக்களே ,பொய்,பிசாசு,பில்லிவினை,நோய்,நோவு,நொம்பலம்,தொய்வு,இறைகள்(இங்கு பரம்பொருளை குறிப்பிடவில்லை). இவுலகம், குற்றம் இவைகள் எல்லாம் மாயைகளாகும் .இவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட எண்ணங்களாகும்.
இறைவன் இல்லை என்ற வாக்கியத்தை கண்டு அதிர வேண்டாம்.இதன் அர்த்தம் மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட இறைவன் கூட மாயையே ஆகும்.இதையும் தாண்டி அடைவதே மாயை அற்ற பரம்பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக