ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கன்னியர் நீரைத் திரட்ட முடியாமல் அழுது புலம்பல்*****
துகிலை எடுத்துடுத்தித் திரட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல் 
கலங்கி அழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி அழுது மண்ணில் அவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்து அழுதார் அம்மானை
---------
உரை
---------
ஏழுபேரும் தங்கள் ஆடைகளை எடுத்து உடுத்திவிட்டுக் கங்கை நீரைத் திரட்டினர். ஆனால், கங்கை நீரோ திரளவில்லை. ஆகவே அப்பெண்கள் மனம் கலங்கி அழுது அதிகமான கண்ணீர் வடித்து, மயங்கி விழுந்து, மீண்டும் எழுந்து, மண்ணின் மேல் புரண்டுபுரண்டு அழுதனர். "அய்யோ, மெய்ப் பொருளை அறியாமல் மனதைச் சிற்றின்ப நாட்டத்தில் விட்டுவிட்டோமே" என்று உடம்பில் இரு கைகளாலும் குத்திப் பூமியில் விழுந்து அழுதனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



கன்னிகள் கற்பழிந்து சான்றோர் பிறப்பு*****
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளைத்
தடம் மேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் 
வெருவிப் பயந்து விழி மடவார் எல்லோரும்
கருவி தொண்ணூற்று ஆறும் கலங்கியே தாமோடித்
---------
உரை
---------
கன்னித் தன்மை இழந்த பெண்கள் ஏழுபேரும் கருத்தரித்து உருவான குழந்தைகளைப் பூமியின் மேல் பெற்றனர். பிறகு மனம் சலனமுற்று, பயந்து ஒடுங்கி, அழகான விழிகளையுடைய அப்பெண்கள் உடம்பில் தொண்ணூற்றாறு தத்துவக் கருவிகளும் கலக்கமுற்றுத் தமது ஆடைகளை நோக்கி ஓடினர்.
---------------------
அய்யா உண்டு
---------------------




கன்னிகள் கற்பழிந்து சான்றோர் பிறப்பு*****
கன்னி ஏழுபேரும் கனலை மிகஆவ
உன்னித் திருமால் ஓங்கார மோகமதாய் 
மங்கை ஏழுபேருக்கும் வயிற்றிலுற்றது அம்மானை
சங்குவண்ண மாலோன் சச்சுருவம் கொண்டாரே
---------
உரை
---------
குளிரினால் துன்புற்ற அக்கன்னியர் அந்த அக்கினி உருவை அனைத்துக் கொண்டனர். உடனே, திருமால் அகரம் உகரம் இணைந்த ஓங்கார நிலை போல் மோகம் கொண்டவராய் அவர்களை உன்னித் தழுவிக் கருவுறும்படி செய்தார். தாம் நினைத்தது முடிந்து விடவே, அவர் அக்கினித் தன்மை மாறி சங்குவண்ணம் போன்ற உண்மையான வெள்ளை மனமான திருமாலாக அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு 



அரி ஓம் எனவே ஆடிக் கரை ஏறித்
தரி தோம் எனவே சலக்கரையை விட்டு அவரும் 
உயர வரவே உள்ளுதறத் துள்ளல் கண்டு
அயரக் கரம்கால் அங்கம் எல்லாம் தொங்கலிட
கிடுகிடு எனத் தேகம் கிளிமொழி வாய் கொட்டிடவே
திடுதிடு என அக்கினியைத் திரைபோல் வளையலுற்றார்
---------
உரை
---------
கன்னியர் 'அரி ஓம்' என்று கூறிக் கொண்டே நீராடி வீட்டுக் கங்கைக்கரை ஏறினர். தண்ணீர்க் கரையைவிட்டு அவர்கள் மேலேறி வரவர, "தரி, தோம்" என்று குளிரினால் உடம்பின் உள்ளும் புறமும் உதறித் துள்ளல் கண்டது. உள்ளம் சோர்வுற, கால்களும், கைகளும், உடம்பும், சோர்ந்து தொங்கலிட்டு 'கிடுகிடு' என ஆடி, கிளிபோல் பேசும் வாய் குளறிச் சத்தம் எழும்பியது.
அப்பொழுது, அக்கினி உருவாய் நின்ற திருமால் ஏழுபேரையும் திடுதிடு எனக் கடல் திரை போல் வளைத்தார்.
---------------------
அய்யா உண்டு 




பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றிக்
குரமாய் வருணன் குளிரத் தொளித்திடவே 
காமத் தணலாய்க் கருமேனி ஆனதிலே
வேமக் கனல்போல் விழி கொழுந்திட்டு எரிய
சாந்து அணியும் கொங்கை தையல் தெய்வக் கன்னியர்
கூந்தல் விரித்துக் கூபந்தனில் இறங்கி
---------
உரை
---------
பிரம்மாவின் மந்திர உபதேசப்படி சான்றோர் பிறப்புக்குரிய குழல் உருவாகியது. வருணன் கருமேனியனான திருமால்மேல் குளிர்ச்சி ஏற்படும்படி ஒலியுடன் நீரைத் தெளித்தார். திருமால் காமக்கனலாய்க் காட்சி அளித்தார்.
அதனால், வேமக்கருவிக் கனல்போல் அவர் விழிகளில் காமத்தீ கொழுந்து விட்டெரிந்து திருமால் இப்படித் தீத்தணலாய் இங்கு நிற்க, வாசனை பொருந்திய சந்தனச் சாந்தினை அணிந்த மார்பையுடைய தெய்வ மாமணிகளாகிய கன்னிகள் தங்கள் கூந்தலை அவிழுந்து விரித்துக் கங்கையினுள் இறங்கினார்.
---------------------
அய்யா உண்டு 





*அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
இப்படியே மேலோக ஏழு உகமதிலும்
அப்படியே நல்ல ஆக்கமுள்ள வித்தேழும் 
எடுத்துத் திருமால் இருதயத்திலே அடக்கி
கொடுத்து நின்ற தாதாவைக் குவித்துப் பதம் போற்றி
கன்னியுட கற்பதுக்குக் கருத்து ஏது செய்வோம் என்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தாராம்
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம் வேறு இல்லை என்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவம் கொண்டாராம்
---------
உரை
---------
ஆக, மேலோகம் ஏழுலோகங்களிலும் உள்ள நல்ல சக்தியுள்ள வித்துக்கள் ஏழையும் எடுத்துத் திருமால் தமது எண்ணத்தில் அடக்கி, இவற்றை எல்லாம் கொடுத்த பரம்பொருளாகிய தந்தையைக் கைக்குவித்து வணங்கித் துதித்தார். பிறகு 'கன்னிகளின் கற்பை அழிக்க என்ன வழி செய்வோம்?' என்று எண்ணி மனம் ஒருமித்து ஆய்ந்தார். கடைசியில் 'அவர்கள் கற்பினைப் போக்கத் தீத்தழலாக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை' என முடிவெடுத்தார்.
---------------------
அய்யா உண்டு 


அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
ஆகட்டும் என்று அச்சுதரும் கோபமுற்று
மேலோகமாய் இருக்கும் வேத ஏழு உகத்தில் 
சாலோகமான சத்தி பரலோகமத்தில்
ஆருரூபம் அல்லாத ஆகாசச்சத்தி ஒன்றும்
சீருரூபமான சிவலோகம் ஆனதிலே
மெய்கொண்ட வானோர் வித்து ஒன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மி ஆனதிலே
தர்மி ஒரு வித்துதான் எடுத்து வேதாவின்
சென்மித்து எடுத்தார் சிவரிஷி ஒன்று அதிலே
தபோதனராய்ச் சண்டன்தன் உகத்தில் வாழும் அவரில்
சகோதரராய் ஒன்றுதான் எடுத்தார் அம்மானை
சொர்க்க லோகமதிலே ஸ்ரீராமர் தமக்குப்
பக்குவங்களாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்ல குலமான நயனவித்து ஒன்றதுவும்
வெல் அமரர்கோன் வாழும் வெற்றித் தெய்வலோகமதில்
சத்தியுள்ள வித்து ஒன்றுதான் எடுத்தார் அம்மானை
---------
உரை
---------
"பார்ப்போம்?" என்று சவால் வீட்டுக் கோபமுற்ற திருமால்,
(1) நல்லோருக்கு வழிவிடும் உலகமான சக்தி வாழும் பரலோகத்திலிருந்து எந்த உருவமும் இல்லாத ஆகாச சக்தி வித்து ஒன்றும்,
(2) அழகான உருவம் அமைந்த சிவலோகத்திலிருந்து உண்மை அறிவு பெற்ற வானோர் வித்து ஒன்றும்,
(3) தருமிகள் வாழும் வைகுண்ட லோகத்திலிருந்து தருமி வித்து ஒன்றும்,
(4) பிரம்ம லோகத்திலிருந்து பிறவி எடுக்கும் சிவரிஷி வித்து ஒன்றும்,
(5) எம லோகத்தில் வாழும் தபோதனர் வித்து ஒன்றும்,
(6) சொர்க்க லோகத்தில் திருமாலுக்கு உகந்த வழியில் பணிவிடைகள் செய்வோரான நல்ல குலமான உயர்ந்த நயன வித்து ஒன்றும்,
(7) வெற்றி பொருந்திய தேவர்களுக்குத் தலைவனான தெய்வேந்திரன் வாழும் தெய்வ லோக சக்தியுள்ள வித்து ஒன்றும் எடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக