ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமம் இட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பு அணிந்து 
சத்தி உமையும் சரசுவதி பார்வதியும்
எத்திசையும் மெய்க்க எடுத்து தாராட்டுவாராம்
அமுதமது சேனை இட்டு எல்லோரும் தாம் மகிழ
குமுதமொழி மாதர் குரவை இட்டுத் தாம் மகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட உத்தரித்தாள்
---------
உரை
---------
இவ்வண்ணமாக ஈசர்முதல் எல்லாரும் அக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி, அவ்வண்ணமே அவர்களுக்குக் காப்பு அணிவித்து அமர்ந்தனர். சக்தி உமையும், சரசுவதிதேவியும், இலட்சுமிதேவியும், எல்லாரும் அதிசயிக்கும் வண்ணம் அக்குழந்தைகளை எடுத்துத் தாராட்டத் தயாரானார்கள்.
பிறகு அமுதமாகிய தேனைச் சேனையாகக் குழந்தைகளுக்கு ஊட்டி எல்லாரும் மகிழ்ந்தனர். அழகு மொழி பேசும் மாதர்கள் எல்லாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க, குளுமை பொருந்திய வெண்தாமரையில் இருக்கும் சரசுவதிதேவி அப்பாலர்களைத் தாலாட்டத் தாலாட்டுப் பாட்டுப் பாடலானாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
கர்மம் இல்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மேன்மேலும் வாழ்ந்திருக்க 
தெய்வக் குல மன்னர் என்று திருநாமம் இட்டாரே
வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்கு
சூரியகுல வேந்தர் என்று சொன்னார்காண் அம்மானை
வாசவனும் தான் மகிழ்ந்து மாயனுட பலருக்கு
வீசைவிசைய வேந்தர் என்று நாமம் இட்டார்
இப்படியே நாமம் இவர் மொழிந்ததன் பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாகவே உரைப்பார்
நாட்டுக்கு உடைய நாதனுட கண்மணிக்கு
காட்டு ராசர் எனவே கருத்தாக நாமம் இட்டார்
---------
உரை
---------
வினைகள் தீர்ந்த தேவர்கள், மெய்யுடைய இந்தப் பாலர்கள் மேலும் பெருகி வாழ்ந்திருக்க வாழ்த்தி, கரிய மாலின் குழந்தைகளுக்கு 'தெய்வக் குல மன்னர்' என்று பெயர் சூட்டினர்.
சக்தியுள்ள சூரிய பகவான் வெற்றியடைய திருமாலின் பலருக்கு 'சூரிய குல வேந்தர்' என்று பெயர் சூட்டினார்.
இப்படியாக இவர்கள் எல்லாரும் பெயர்கள் சூட்டிய பிறகு நாரதர் "நாட்டுக்குரிய நாதனுடைய இந்தக் கண்மணிகளுக்கு 'காட்டுராசன்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று மனம் நிறைந்த கருத்தோடு கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
கற்பகத்துக்கு ஒத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தர் என்று வெண்டாமரை உரைத்தாள் 
பிள்ளையார் தாமும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந்தர் எனவே
அன்று ஆனை முகத்தோன் அருளினர்காண் அம்மானை
சண்முகனும் தான் மகிழ்ந்து தவலோக மன்னர் என்று
விண்ணுலகு மெய்க்க விளம்பினர்காண் அம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாம் மகிழ்ந்து
தானான மாயவனார்தாம் பெற்ற பாலருக்கு
தர்மகுல வேந்தர் என்று சாற்றினார் அம்மானை
---------
உரை
---------
கற்பக மரம் போன்ற கன்னி சரசுவதியாகிய வெள்ளைத் தாமரையாள் 'வெள்ளானை வேந்தர்' என்று பெயரிட்டாள்.
பிள்ளையார் ஆகிய ஆனைமுகத்தோன் விருப்பத்துடன் மகிழ்ச்சியுற்று நல்ல தன்மையுள்ள 'வீர நகுலவேந்தர்' என்று உண்மையான பெயர் சூட்டினார்.
சண்முகன் மகிழ்ச்சியுற்று விண்ணவர்களும் ஆச்சரியப்படும்படி 'தவலோக மன்னர்' என்று பெயர் சூட்டினார்.
வானோர்களும், வேதத்தில் சிறந்த மாமுனிவர்களும் மகிழ்ச்சியுற்று, "எல்லாம் தாம் என்னும் நிலை ஏகிய மாயவனார் பெற்ற இப்பாலருக்கு 'தரும குல வேந்தர்' என்று பெயர் சூட்டுகிறோம்" என்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
தாடாண்மை யுள்ள சத்தி அங்கு ஏது சொல்வாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு 
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுத்தாள்
எங்கும் புகழ்பெற்று இராஜ பட்டம்தான் சூடும்
சங்கு மன்னர் என்றுதான் உரைத்தாள் சத்தி உமை
பேறு பெற்ற பாலர் என்று பிதனமுடன் மகிழ்ந்து
பார்வதி நாமம் பகருவாள் அம்மானை
சென்றஇடம் வென்று சீமை கட்டித் தானாண்டு
மண்டலந்தோறும் வரிசை பெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னர் என்று பேரிட்டாள் பார்பதியும்
---------
உரை
---------
மிகுந்த சக்தி பொருந்திய பாதங்களையுடைய சத்தி உமை, "அண்ணர் விநோத விந்துவில் அவதாரம் எடுத்த இப்பிள்ளைகளுக்கு எங்கும் புகழ் பெற்று இராஜ பட்டம் சூடும் 'சங்கு மன்னர்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று கூறி அழகு பொருந்திய அப்பெயரைச் சொல்லி வாழ்த்திக் குழந்தைகளுக்கு விடை கொடுத்தாள்.
"பேறு பெற்ற பாலர்கள்" என்று கூறி மிகுந்த அடக்கத்துடன் மனம் மகிழ்ந்த பார்வதிதேவி, "சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்று இந்த நாட்டை எல்லாம் ஒருங்காக்கி ஆட்சி புரிந்து எல்லா மண்டலங்களிலும் சிறப்புப் பட்டம் பெற்று வாழ்ந்திருக்கும் இக்குழந்தைகளுக்கு, 'பொற்பமுடி மன்னர்' எனப் பெயர் சூட்டுகிறேன்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு 



சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
நல்லதுதான் என்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன் நாதவிந்தில் வந்து தோன்றினதால் 
தோணாப் பொருளைத் தொடர்ந்து கண்ட மன்னவர்க்கு
சாணார் என நாமம் சாற்றினார் ஈசுரரும்
முதல்பேர்தான் ஈசர் மொழிந்து பின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேய் அதற்கு
சான்றோர் என நாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டார் இது உரைக்க அச்சுதரும் பின் சொல்லுவார்
நாடாள்வார் என்று நாமம் இட்டார் பாலருக்குத்
---------
உரை
---------
பிறகு ஈசர் "சரி, நல்லதுதான்" என்று நினைத்து விருப்பத்துடன் திருமாலை நோக்கி, "வல்லவனே, உனது நாத விந்துவில் இக்குழந்தைகள் தோன்றினர். எனவே, தோன்றாப் பொருளைத் தொடர்ந்து தியானித்துக் கண்டறியும் சக்தி பெற்ற இந்த மன்னவர்களுக்கு 'சாணார்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று கூறினார்.
இவ்வாறு முதலப்பெயரை ஈசர் சூட்டியவுடன் பிரம்மா 'ஞானம்' பிரகாசிக்கும் மாயமுனியின் விந்திலிருந்து தோன்றிய குழந்தை என்பதால் 'சான்றோர்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்றார்.
ஈசரும், பிரம்மாவும் இவ்வாறு பெயர் சூட்டியதும் திருமால், அக்குழந்தைகளுக்கு 'நாடாள்வார்' என்று பெயர் சூட்டினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------



சங்கமது கூடிச் சாத்திரங்கள்தாம் ஓதி
மங்கள வாத்தியங்கள் மடமட எனவே அதிர
இப்படியே சங்கம் எல்லோரும் தாம்கூடி 
அப்படியே தாம் இருக்க அருளுவார் அச்சுதரும்
பிறந்த பிள்ளை ஏழதுக்கும் பேரிட வேணும் என்று
அறம் தழைக்கும் ஈசர் முன் அவர் வைத்தார் அம்மானை
அப்போது ஈசுரரும் அன்பாய் அகம் மகிழ்ந்து
இப்போது மாயவனே எல்லோருக்கும் பொதுவாய்
நீர்தாமே நாமம் இட்டால் அதுபோதும்
பார்தான் அளந்த பாலவண்ணா என்றுரைத்தார்
கார்வண்ணரும் கேட்டுக் கறைக் கண்டரோடு உரைப்பார்
தார்வண்ணரே முதல்பேர் தாம் உரைக்க வேணும் என்றார்
---------
உரை
---------
வேத சாத்திரங்கள் ஓதப்பட்டன; மங்கள வாத்தியங்கள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.
இப்படிக் கூடி இருந்த சங்கத்தில் திருமால், ஈசரிடம், "ஈசரே, எனக்குப் பிறந்த இந்தப் பிள்ளைகள் ஏழுக்கும் பெயர் சூட்டி அருள வேண்டும்" என்று கூறி அறத்தை நிலை நாட்டும் ஈசர் முன்னிலையில் குழந்தைகளை வைத்தார்.
அச்சமயம் ஈசரும் மனம் மகிழ்ச்சியுற்று, "உலகளந்த மாயவனே, பாலவண்ணா, இப்போது எல்லாருக்கும் பொதுவாக இருந்து நீயே இக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால் அதுபோதுமே." என்றார்.
அதற்குத் திருமால், "வெண்மையான மலைகளின் நிறத்தவரே, நீவிர்தாம் முதலில் குழந்தைகளுக்குப் பேர் சூட்ட வேண்டும்" என்று வற்புறுத்தினார்.
---------------------
அய்யா உண்டு 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக