ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
அப்போது நல்ல ஆதிசிவம் உரைப்பார்
எப்போதும் பாலருக்கு இவர் உண்ணும் அமிழ்தம் எல்லாம் 
கொடுக்கும் படியாய்க் குருக்க வையும் என்றுரைத்தார்
அடுக்க நின்ற தேவர் அது கேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்து எடுத்துச் சாபமிட
---------
உரை
---------
உடனே ஆதி சிவம், "திருமாலே, எப்பொழுதும் இந்தப் பிள்ளைகள் உண்ணும் அளவு அமிழ்தம் முழுவதும் கொடுக்கும்படியாக இவர்களைப் பனை மரங்களாய் உருவாக்கும்" என்றார். இதைக் கேட்ட திருமால், அவர்கள் பக்கம் வந்து கைகளைத் தூக்கி, "பனை மரங்களாக மாறுங்கள்" என்று சபித்தார்.
அந்தணன், ஈசரைப் பார்த்து "இறையவரே, இப்போது திருமால் இட்ட சாபமானது எப்போது முடிவடையும்" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு 



அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
வானோர்கள் பார்த்து வாய்த்த அமிழ்தம் காணாமல்
ஏனோ இது மாயம் என எண்ணி மிகப்பார்ப்பளவில் 
கொண்டாடி நின்ற கூர் மறையவன்தனையும்
பொண்டாட்டியான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னும் முன்னும் தள்ளிமிக
அடித்துச் சிவன் முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டு வந்துவிட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுதல் இன்றுவரை பாய்ந்த அமிழ்தம் எல்லாம்
தின்று கொண்டு தேகம் திமிர்த்து மிகப்பாளை வைத்து
வண்டு உறுக்கி மிக்க வலுப் பேசினான் எனவே
சொல்லிடவே வானோர் திருமால் அதுகேட்டு
நல்லதுதான் என்று நாடிச் சிவனோடு உரைக்க
---------
உரை
---------
இதை அறியாத வானோர்கள் அங்கு உருவாகும் அமிர்தத்தைக் காணாமல் "இஃது என்ன மாயமோ?" என்று எண்ணி, அதிசயித்தனர்.
அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தனர்.
அப்பொழுது, அமிழ்தத்தை அருந்தி மகிழ்ச்சியுடன் கூத்தாடிக் கொண்டிருந்த அந்தணனையும், அவன் மனைவியையும் கண்டனர்.
உடனே, அவர்களைப் பிடித்து இழுத்து, பின்பகுதியிலிருந்து தள்ளியும், முன்பகுதியில் நின்று இழுத்தும், அவர்கள் வரமறுத்தபோது, அடி கொடுத்தும் கூட்டிக் கொண்டு வந்தனர். இவற்றையெல்லாம் அச்சுதர் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களைச் சிவன் முன்பாக நிறுத்தி, வானோர்கள் ஈசரைப் பார்த்து, "ஈசரே, இவர்கள் இருவரும் அமிழ்தம் தோன்றியதிலிருந்து இன்றுவரை பாய்ந்த அமிழ்தம் முழுவதையும், தாமே உண்டு தேகம் முழுவதும் பருத்துக் கொழுப்பு உருவாகி, எங்களிடம் கடுமையான மொழிகள் பேசினர். எனவே இவர்களை இழுத்து வந்தோம்" என்றனர். இதைக் கேட்ட திருமால் "நல்லதுதான்" என்று கூறிச் சிவனிடம் "இவர்களை என்ன செய்வது?" என்று ஆலோசனை கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 



அமிழ்தம் கொணர வானோரை அனுப்புதல்*****
ஆருரூபம் இல்லா ஆகாசம் மேல்வழியே
சீருரூபமான சிவகயிலை ஆனதிலே 
பாயும் அளவில் பல சாத்திரங்கள் கற்ற
வீயும் மறை வேதியனும் விழிநுதலாள் தேவியுமாய்
அமுதமதை எல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்து மிகப்பாளை வைத்து
தேகமது நிமிர்ந்து தேவியும் மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
---------
உரை
---------
எந்த உருவமும் இல்லாத ஆகாசத்தின் மேல் பகுதியில், சிறப்பான அமைப்பையுடைய சிவகயிலையிலிருந்து அமிழ்தம் பாய்கின்ற பொழுது, பலசாத்திரங்களும் உயர்வான வேதங்களும் கற்ற அந்தணனும், அவன் மனைவியும் அமிழ்தம் முழுவதையும் விரும்பிக் குடித்து எஞ்சியதைத் தலைமேல் போட்டு, உடம்பில் கொழுப்பு உருவாகி, நிமிர்ந்து அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆரவாரம் செய்து கொண்டு நின்றனர்.
---------------------
அய்யா உண்டு 




அமிழ்தம் கொணர வானோரை அனுப்புதல்*****
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருஅமிழ்தம்
சேனை மிகஊட்டுதற்கும் செல்வம் உண்டாவதற்கும் 
வானத்து அமிழ்தம் வருத்தி மிகஈயவென்று
கயிலைதனில் இருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதில் பாயும் ஆகாய ஊறலதை
வருத்திக் கொடுக்க என்று மாயவரும் ஈசுரரும்
பொருத்தமுள வானோரைப் போய் வேண்டி வாரும் என்றார்
அப்படியே வானோர் ஆகாயம் மீது ஏகிச்
செப்பமுடன் அமிழ்தம் சென்று அவர்கள் பார்க்கையிலே
---------
உரை
---------
மனம் பொருந்திய பிள்ளைகள் நன்றாக வளரவும், சேனையாக ஊட்டுவதற்கும், செல்வம் உண்டாவதற்கும், வானத்தில் உருவாகும் அமிழ்தத்தினை வருத்திப் பிள்ளைகளுக்குக் கொடுக்க ஈசரும் மாயவரும் எண்ணினர்.
எனவே, கயிலையில் வாழும் உயர்வான தேவர்களுக்கு உண்பதற்காக வைகுண்டத்தில் பாயும் ஆகாய அமுதத்தை இங்கே வருத்தி இப்பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று திருமாலும், ஈசுரரும், அதைக் கொண்டு வரப் பொருத்தமுள்ள வானோர்களைப் பார்த்து, "அமிழ்தத்தை எடுத்து வாருங்கள்" என்று கூறி அனுப்பினர். அக்கட்டளைப்படி வானோர்கள் ஆகாயம் மீது சென்று அமிழ்தத்தை தேடினர்.
---------------------
அய்யா உண்டு 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக