ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
பாலரையும்தாம் எடுத்துப் பரமசிவனார் அருளால்
கோலமுள்ள மாயன் கொடுத்தார் ஒருவார்த்தை சொல்லி 
சீலமுள்ள காளி என் சித்திரப் பாலருக்கு
பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடு நீ
மதலைதமக்கு ஒருதீங்கு வத்ததே உண்டானால்
குதலையே உன்றனக்குக் கொடுஞ் சிறைதான் சிக்குமென்று
சொல்லியே காளி கையில் சிறுவரையும் தாம்கொடுத்து
---------
உரை
---------
திருமால் பாலர்களைத் தமது கைகளில் தூக்கி, "ஒழுக்கமுள்ள மாகாளியே, என் அழகு பொருந்திய பாலர்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாமல் காத்து வர வேண்டும். அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், உனக்குக் கொடுமை பொருந்திய சிறைத் தண்டனைதான் கிடைக்கும்" என்று எச்சரித்தார்.
பிறகு, சிவனின் அருளினால் அழகு பொருந்திய திருமால், காளியின் கையில் பாலர்களைக் கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------



காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
உயிர்சேதம் வராமல் ஒன்று போல் என்மகவை
நெய்ச்சீதம் போலே நீ வளர்த்துத் தா எனவே 
அல்லாமல் என்மகவை ஆரொருவர் ஆனாலும்
கொல்லாமல் காக்கக் கூடுமோ உன்னாலே
அன்பான காளி அதற்கு ஏது சொல்லலுற்றாள்
என் பாலகர்தமையும் ஈடுசெய்ய இங்கு ஒருவர்
உண்டோகாண் இந்த உலகில் எனக்கு எதிரி
என்றேதான் காளி இப்படியே சொல்லிய பின்
---------
உரை
---------
2. இந்தக் குழந்தைகளை உயிர்ச் சேதம் வராமல் பாதுகாத்து எல்லாப் பாலரிடமும் சம அன்பு வைத்து, நல்ல சுத்தமான சந்தன மரம் போன்று என் குழந்தைகளை நீ வளர்த்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
3. அது மட்டுமல்லாமல் என் குழந்தைகளில் ஒருவர்கூட கொல்லப் படாமல் பாதுகாக்க வேண்டும். இஃது உன்னால் முடியுமா?" என்று கேட்டார்.
அன்பு உள்ளத்துடன் இருந்த காளி, "நான் வளர்க்கும் என் பாலர்களைக் கொல்லுவதற்கு இவ்வுலகில் ஒருவர் இருக்கின்றாரா? அத்தகைய எதிரி ஒருவர் எனக்கு உள்ளாரோ? காட்டுவீராக" என்று கூறினாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------




காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
ஞாலமுள்ள காளி நாயகியைத் தான் அழைத்து
பாலரையும் காளி பண்பாக வாங்குகையில் 
ஆலமிழ்தம் உண்ட அச்சுதரும் ஏதுரைப்பார்
அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும்
கடகரியின் தொழிலும் கந்துகத்தின் தொழிலும்
மாவேறும் தொழிலும் வாள் வீசும் தொழிலும்
பாவேறும் பாட்டும் பழமறை நூலானதுவும்
அடவு மேலான அதிக பல வித்தைகளும்
திடமும் மிகவருத்திச் சேனாபதியாக்கி
எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும்
நல்லா வருத்தி நாட்டமுடனே கொடுத்து
---------
உரை
---------
பிறகு, திருமால் அத்தேசத்திலுள்ள காளிதேவியை அருகே அழைத்துப் பாலர்களை அவளிடம் கொடுத்தார். காளிதேவி பாலர்களைக் கை நீட்டி வாங்கும்போது கடல் நீரில் உருவான அமுதத்தை உண்ட திருமால் காளியைப் பார்த்து, "காளியே,
1.என் பாலர்களுக்கு அடவுகள் பதினெட்டும், வர்மத்தின் வரிசைகளையும், பலமான யானை ஏற்றமும், குதிரை ஏற்றமும், மிருக வேட்டையும், வாள் வீச்சும், பாட்டு இயற்றுதலும், பழமையான வேத நூல்களும், அடவுக்கு மேலாக இன்னும் பல வித்தைகளும் கற்பித்துக் கொடுத்து, மிகுந்த தைரியத்தை உருவாக்கி, சேனாபதியாக்கி, எல்லா விதமான வித்தைகளும் பொருத்தமான இராக வகைகளும், அன்புடனும் விருப்பத்துடனும் நன்றாகப் புரியும்படி கற்பித்துக் கொடுக்க வேண்டும். ........
---------------------
அய்யா உண்டு
---------------------




அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
வளர்ந்து அந்த அமிழ்தமெல்லாம் மக்கள் ஏழுபேர்களுக்கும்
பழம் அந்த அமிர்தக் காயோடு பலவகையும் தாமாண்டு 
அமுதமதைக் கொஞ்சம் ஆக்கிரமம்தான் அடக்கிக்
குமுதமுடன் நீங்கள் குடித்திருங்கோ என்று சொல்லி
உங்களுக்குப் பால் அமிழ்தம் ஊறும் அல்லால் இத்தாலம்
எங்களுக்கும் இத்தாலம் இசையாது கண்டீரே
பாலருக்கு இந்த வரம் பரமயுகத்தோர் கொடுத்து
---------
உரை
---------
பிறகு எல்லா யுகத்துக்கும் நாயகனான திருமால் பிள்ளைகளைப் பார்த்து "பிள்ளைகளே, இதோ வளர்ந்துள்ள பனை மரத்தின் எல்லா அமிழ்தத்தையும், பனம்பழங்களையும் உண்டு, அதன் காய் ஓலை போன்றவற்றையும் பல வகைகளில் பயன்படுத்துங்கள். ஆனால், பனை அமிழ்தத்தின் அதிக சக்தியைச் (சுண்ணாம்பினால்) அடக்கி ஒற்றுமையுடன் சேர்த்து நீங்கள் குடித்து வாழ்ந்து வாருங்கள். உங்களுக்கு மட்டுமே இந்தப் பனை மரங்களின் பால் அமிழ்தம் ஊறுமே அல்லாது எங்களுக்குக்கூட இப்பனை மரங்கள் பால் அமிழ்தம் தரச் சம்மதிக்காது, அறிவீராக" என்று பாலர்களுக்கு வரமளித்தார்.
---------------------
அய்யா உண்டு 



அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
நீசக் குலம் அறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை ஆளுதற்கு 
அன்பு சேகரிக்க அங்கு வருவார் கண்டீர்
வம்பு மாளும்போது மாறும் உங்கள் சாபம் என்றார்
உடனே மறையோனும் ஓவியமும் உள்ளதென்று
தடம் மேலே நின்று தாலம் எனவே வளர்ந்தார்
இறையவரைப் பார்த்து ஏதுரைப்பான் மாமறையோன்
இப்போது இட்ட இச்சாபம் ஆனதுதான்
எப்போது நீங்கும் என்றே கேட்டான் மாமறையோன்
---------
உரை
---------
ஈசர், "அந்தணனே, நீசர்களின் குலத்தை அழித்து உயர்வு பொருந்திய திருமால் மாசு இல்லாத தருமபுவி ஆள வருவார். அப்படித் தருமயுகத்தை ஆளும் முன்பு அவரையே நினைவில் கொள்ளும் அன்பர்களை உருவாக்க அங்கு வருவார். அறிவீர்களாக அச்சமயம், வம்புகள் அழியும்; உங்களுடைய சாபமும் தீரும்." என்று பதிலுரைத்தார்.
இதை அறிந்த அந்தணனும் அவன் மனைவியும் இது சிறப்புதான் என்று கூறிப் பூமியின் மேல் பனைமரமாக முளைத்து வளர்ந்து நின்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக