ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

சான்றோர்க்கும் நாட்டிற்கும் வறுமையும் கேடும் வந்த விதம்*****
வர்மம் வந்த ஞாயம் வகுக்கக் கேள் ஒண்ணுதலே
சீரங்கம் ஆனதிலே சீரங்க நாதருந்தாம் 
பாரெங்கும் மெய்க்கப் பள்ளி கொண்டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாள் பிடித்த செய்திதனைக்
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்த துண்டம் ஆறதிலே
அன்னே கேள் அஞ்சு துண்டம் அவனிதனிலே பிறந்து
ஆதிதனை நினைத்து ஆளாமல் அவ்வுயிர்கள்
நீதி கெட்ட மோச நீசனைப் போல் தானாகி
முற்பிறவியோடு ஆறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி ஆறும் அழித்து அதன்பின் ஆயிழையே
---------
உரை
---------
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன் உலகெல்லாம் அதிசயிக்கத் தக்க வகையில் பள்ளி கொண்டிருந்தார்.
அப்பொழுது நாட்டு மக்கள் எல்லாருக்கும் கேடான காலம் பற்றியது எவ்வாறு? என்பதைக் கூட்டுக் கிளியே, அன்பையுடைய இலட்சுமிதேவியே, நீ கவனமாகக் கேட்பாயாக.
"முன்பு குறோணியை அழித்தபோது, உருவாகிய ஆறு துண்டங்களில் ஐந்து துண்டங்கள் பூலோகத்தில் பிறந்து ஆதியாகிய சிவனை நினைத்து அரசாளாமல் அந்த உயிர்கள் நீதி இல்லாத மோசமான நீசனைப் போன்று ஆகி, முன் தோன்றிய ஆறு பிறவிகளிலும் முதலோனாகிய சிவனைப் போற்றாத காரணத்தால் அந்த ஆறு பிறவிகளையும், மாயன் அழித்து விட்டார், பெண்மயிலே."
---------------------
அய்யா உண்டு
---------------------




சான்றோரைச் சோழன் கௌரவித்தல்*****
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டார் அம்மானை
சோழனுடன் எதிர்த்துச் சூது செய்த மன்னரையும் 
வேழமுடி மன்னர் வெற்றி கொண்டு ஆண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருது பெற்று
அட்டாள தேசம் அடக்கி அரசாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை ஆண்டிருக்க
அப்படியே சீமை அவருக்குள்ளே ஆக்கி வைத்து
தர்மமுடன் பூமிதான் ஆண்டு இருக்கையிலே
---------
உரை
---------
ஏழு சான்றோர்களும் இவ்வாறு எல்லாம் பெற்று "மன்னர்களாக" ஆட்சி புரிந்து வந்தனர். சோழனுடன் எதிர்த்துச் சூது செய்த மன்னர்களையும், வேழமுடி மன்னராகிய சான்றோர்கள் வெற்றி கொண்டனர்; அழிக்க முடியாத படைகளைக்கூட அழித்து வெற்றி விருது பெற்றனர். இப்படிப் பல அடக்க முடியாத தேசங்களை அச்சான்றோர்கள் அடக்கி அரசாண்டனர்.
இப்படியாகச் சான்றோர்கள் நாட்டைத் தமக்குக் கீழ்த் தரும நீதியுடன் அரசாண்டு கொண்டிருந்தனர்.
---------------------




சான்றோரைச் சோழன் கௌரவித்தல்*****
சோழன் அதை அறிந்து தெய்வச் சான்றோர்களுக்கு
வேழம் பலகொடுத்து மிகுகற்பமும் கொடுத்து 
நல்ல மன்னர் என்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்ல மன்னரான தெய்வச் சான்றோர்களுக்கு
அடிக்கல் எழுதி ஆயிரம் பொன் கொடுத்து
முடிக்கு முடிசோழன் முத்து முடியும் கொடுத்து
வீரவிருது வேழம் பரி கொடுத்துப்
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
---------
உரை
---------
தெய்வச் சான்றோர்களின் சகலகலா வல்லமையைச் சோழ மன்னன் அறிந்து அவர்களை அழைத்து யானைகளும், பல பனை மரங்கள் அடங்கிய சொத்துக்களும், "நல்ல மன்னர்கள்" என்னும் பட்டமும் கொடுத்தான்
கல்லில் அவர்கள் புகழை எழுதி அறிவித்தும், ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொன் கொடுத்தும், முத்துக்கள் அடங்கிய முடிச்சுகள் கொடுத்தும், வீர விருதுகள், யானைகள், குதிரைகள் ஆகியவை கொடுத்தும், அந்த நல்ல தேசத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தும், அதில் அரசாட்சி புரிய அனுமதித்துக் கிரீடம் கொடுத்தும் சோழன் அவர்களைக் கௌரவிதான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக