ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
வானோர்கள் போற்றும் மாமுனியும் தான்மகிழ்ந்து
உள்ளதுதான் என்று உடனே மனமகிழ்ந்து 
வள்ளல் சிவனார்தனையும் மறைவேதனையும் அழைத்து
முப்பத்து முக்கோடி முனிவர் அவர்தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தெய்வேந்திரன் வரையும்
மூவர் முதலாய் உள்ளோரையும் வருத்தி
கிணநாதர் வேத கிம்புருடரையும் வருத்தி
குணமான தந்தி குமரனையும் வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்வதியும்
எத்திசையும் வானோர் எல்லோரையும் வருத்தி
சங்கமது கூடிச் சாத்திரங்கள்தாம் ஓதி
---------
உரை
---------
வானோர்கள் போற்றுகின்ற திருமால் மனம் மகிழ்ந்து, "காளியே, நீ சொல்வது சரியானதே" என்று கூறி, மனம் மகிழ்ந்தார். வரம் கொடுக்கும் வள்ளலான சிவனையும், பிரம்மாவையும், அழைத்தார். பிறகு, முப்பத்து முக்கோடி முனிவர்களையும், நாற்பத்து நான்கு கோடி நல்ல ரிஷிகளையும், தேவர்கள்முதல் தெய்வேந்திரன்வரையும், மூவர் முதலாய் அங்குள்ள எல்லோரையும் வரவழைத்தார்.
கிணநாதரையும், கிம்புருடரையும் நல்ல குணம் பெற்ற யானைமுகக் குமாரனையும், சத்தி உமையையும், சரசுவதியையும், இலட்சுமியையும், எல்லாத் திசையிலும் உள்ள வானோர்களையும் வரவழைத்தார். இவ்வாறாகச் சங்கம் கூடியது; ...
---------------------
அய்யா உண்டு 



திருமாலின் குழந்தைகளைக் காளி அடைதல்*****
அனைத்து உயிரும் காக்கும் அச்சுதரும் தாமறிந்து
மக்கள் ஏழுபேர்களையும் மாகாளி கைகொடுக்க 
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து
வாங்கும் அளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கி நின்று பாதத்தடி தாழ்ந்து ஏதுசொல்வாள்
வேதமுனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே இம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளி நீர் தாரும் என்றாள்
---------
உரை
---------
"தமது குழந்தைகளை வளர்க்க யாரிடம் ஒப்படைக்கலாம்" என்று அனைத்து உயிரையும் காக்கும் திருமால் வேதனையுற்று, காளியின் தவத்தை அறிந்து, தமது மக்கள் ஏழுபேரையும் மாகாளியின் கைகளில் கொடுத்தார். காளி உடனே மகிழ்ச்சியுடனும் அதிக சிரிப்புடனும் அந்தப் பாலர்களைப் பெற்றுக் கொண்டாள்.
அவ்வாறு பெற்றுக் கொள்ளும்போது குழந்தைகளை வாங்கிக் கொண்டே திருமாலின் பாதங்களைத் தாழ்ந்து வணங்கி, "வேத முனியே, வித்தைகளில் கருத்தாக நிற்போனே, பெருந்தவங்கள் கற்ற மாமுனியே, இக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டித் தந்தருள வேண்டும்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு 



*காளியின் முன் வரலாறும் தவமும்*****
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி
கற்போடு ஒத்த கன்னியே உன்றனுக்குத் 
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளியே உனக்கு
விடையாய் ஒருவசனம் விரிக்கக் கேள் ஒண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தா எனவே
தவசு மிகப்புரிந்தால் சங்கு சரத்தாமன்
விவசுதனில் பிறந்த வீரர் ஏழுபேர்களையும்
உன்னை அழைத்து உன் கையிலே தருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போ எனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுத்து
பரமானதேவி பச்சைமால் தனைதான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
---------
உரை
---------
அப்போது, ஈசர் காளியை நோக்கி, "கற்பில் சிறந்த கன்னிப் பெண்ணே, நீ கருத்தரித்து உனக்குக் குழந்தை பிறக்க விதி இல்லையே? மரித்துப் பிறக்காத மாகாளியே, அதற்குப் பதிலாகச் சில வழிகளைக் கூறுகிறேன், கேட்பாயாக.
தக்கனை அழிக்கும் படைக்காகத் திருமலை நோக்கி, 'பாலர்கள் தர வேண்டும்' என்று தவம் செய். அப்படித் தவமிருந்தால் சங்குசரத்தாமன் ஆகிய திருமாலின் விசேஷ அக்கினியால் பிறந்த குழந்தைகளாகிய ஏழு வீரர்களையும் திருமால் உனக்குக் கொடுப்பார். எனவே, முதலில் நீ தவமிருக்கப் போவாயாக" என்று கூறி ஈசர் காளிதேவிக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
அந்தக் காளிதேவி அங்கே திருமாலை நோக்கி அதிக காலமாகத் தவம் இருக்கின்றாள்.
---------------------
அய்யா உண்டு 




*காளியின் முன் வரலாறும் தவமும்*****
வேலுகந்த காளிதனை விளித்தார்காண் பதம் பணிந்து
உடன் அறிந்து மாகாளி உடையோன் பதம் பணிந்து 
வடவாக்கினி முகத்தாள் வருத்தினது ஏன் என்னை என்றாள்
தக்கன் தலை அறுத்துச் சங்காரம் செய்திடவே
மிக்க நீ போ என்று விடைகொடுத்தார் ஈசுரரும்
விடைவேண்டிக் காளி விமலன் அடிபோற்றி
படைகாரி பின்னும் ஒன்று பராமனோடே கேட்டாள்
என்னோடு உதவி இயல் படையாய்த் தான்வரவே
வன்ன புதல்வர் வகிரும் என்றாள் மாகாளி
---------
உரை
---------
ஈசர் போருக்கு ஏற்ற காளியை அழைத்து வரக் கட்டளை பிறப்பித்தார். இதை அறிந்து வந்த வடவாக்கினி முகத்தையுடைய காளி சிவனின் பாதங்களைப் பணிந்து, "ஈசுரரே, என்னை அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டாள்.
இது கேட்ட ஈசர் காளியிடம், "காளியே, தக்கனுடைய தலையை அறுத்து அழிக்க நீ விரைவாகப் போக வேண்டும்" என்று பதிலுரைத்தார்.
இப்பதிலைக் கேட்ட அதிக படையுள்ள காளி, ஈசர் பாதங்களைத் துதித்து மீண்டும் வணங்கி, "ஈசுரரே, எனக்கு உதவி செய்யும் சக்தி பெற்ற படைகளாக வல்லமையான புதல்வர்களைப் படைக்க வேண்டும்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------



காளியின் முன் வரலாறும் தவமும்*****
தேட்டமுடன் ஏழு செகல் கடந்து அப்புறத்தே
கோட்டையது இட்டுக் குறும்பு செய்து ஆண்டனனே 
தேவர்கள் சென்று சிவனார்க்கு அபயமிட
மூவர்களும் ஒத்திருந்து முழுதும் விசாரம் இட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை இல்லை இங்கே
பூணாரம் பூண்ட புட்டாபுரக் காளி
காளிப் படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கனுட சிரசு அறுப்பாள் என்று மிக
மால் உரைக்க ஈசுரரும் மறையோரும் சம்மதித்து
---------
உரை
---------
தேவர்கள் சிவனுக்கு அபயமிட, சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் சேர்ந்து தக்கனை அழிக்க நாள் முழுவதும் ஆலோசித்தனர். கடைசியில் திருமால், "தக்கனை ஆண் இனத்தினால் அழிப்பதற்கு வழி இல்லை; எனவே, நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மண்டை ஓடுகளை ஆரமாக அணிந்துள்ள புட்டாபுரத்துக் காளி அவள் படையுடன் தக்கனது கொடுமையான ஆட்சி பீடத்துக்குச் சென்றால் அவனது தலையானது அறுபட்டுப் புழுதியில் விழும்படி செய்வாள்" என்று கூறியதை ஈசுரரும், பிரம்மாவும் சம்மதித்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*காளியின் முன் வரலாறும் தவமும்*****
மாகாளி என்னும் வடபத்திர காளி
ஓகாளி என்னும் உயர்ந்த பலக்காரி 
பெண் அல்ல போர்க்குப் புருடர் மிகப்போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவள் இருக்கும் நாளையிலே
ஆணொருவர் தம்மால் அழியா வரங்கள் பெற்று
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கணியா வரங்கள் பெற்று கீழும் மேலும் அடக்கி
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல் கொண்டு
---------
உரை
---------
மாகாளி என்றும், ஓம்காளி என்றும் கூறுகின்ற வட பத்திரகாளி உயர்வான பலத்தை உடையவள்; அவள் போர் புரியும்போது பெண்ணாகவே காட்சி அளிக்க மாட்டாள். ஆண்கள் அவளுக்கு ஈடாகார். இப்படியாகத் துஷ்ட ஆங்காரம் கொண்டு மாகாளி வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது தக்கன் என்பவன் சிவனையும்,சக்தியையும் நோக்கித் தவம் புரிந்து, ஆண்களால் தன்னை அழிக்க முடியாத வரத்தையும், எண்ணரிய வேறு வரங்களையும் பெற்று வாழ்ந்து வந்தான். கீழலோகத்தையும் மேல் லோகத்தையும் அடக்கித் துணிச்சலாகத் தேவர்களைப் புழுதிப்படும்வண்ணம் வேலை வாங்கினான். மிகுந்த செல்வாக்குடன் ஏழு கடல்களுக்கும் அப்பால்வரை கோட்டையிட்டு மக்களுக்கும் தேவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.
---------------------
அய்யா உண்டு 



தான் அறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக்கு எதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப் பார் என்று எறிந்தார் அவன் பயந்து 
ஆரோ எனப் பயந்து அயிராவதத் தோனும்
போர் ஒல்கிப் போனான் பொன்னு லோகந்தனிலே
நல்லது என மாமுனியும் நளினமுடன் மகிழ்ந்து
செல்ல மகவான சிறுவர்தமை வளர்க்க
---------
உரை
---------
தெய்வேந்திரன் உண்மையை ஆய்ந்து அறிந்து தான் அறிந்ததை எல்லாம் சொல்லிப் போர் புரியவன்தான். அவனுக்கு எதிராகத் திருமால் சூலாயுதத்தை எடுத்து, "இதோ பார்" என்று கூறி எறிந்தார். அந்தச் சூலாயுதத்தைக் கண்டு, "நம்மைவிட வல்லவரான இவர் யாரோ?" என்று அயிராவதத்தையுடைய இந்திரன் பயந்து பதுங்கித் தனது இந்திர லோகத்தை நோக்கி ஓடிப் போனான். "மிகவும் நல்லது, நன்மைதான்" என்று மனம் மகிழ்ந்து தம் குழந்தைகளை வளர்க்கக் காளிதேவியை நாடினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக