ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

முச்சூரனோடு ஆறு யுகமும் உயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்து அந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்சடலக் கூட்டை மிகக்களைந்து 
ஆண்டிருந்த குண்டம் அவர் அடைந்தார் கண்டீரே
முச்சூரன் துண்டம் ஒன்று உண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறுஒன்று ஈரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையும் என்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பம் செய்து நின்றான்
---------
உரை
---------
பிறகு அச்சூரனோடு ஆறுயுகங்களையும் அழித்து விட்டார். அச்சூரக் குலத்தை அழித்த மாயவரும் தமது பொய்ச்சடலக் கூட்டைப் பர்வதாமலையில் விட்டு விட்டுத் தாம் முன்னர் ஆண்டிருந்த வைகுண்டம் சென்றடைந்தார். குறோணியின் துண்டங்கள் ஆறில் எஞ்சிய துண்டு ஒன்று உண்டு. எனவே, ஈசுரரே, அந்தக் குறோணியை எண் சாண் உடம்பு உள்ளவனாக ஆறாம் யுகத்தில் பிறவி செய்ய வேண்டும்" என்று மாமுனிவன் ஈசரிடம் விண்ணப்பித்தான்.
---------------------
அய்யா உண்டு 




குறோணியின் ஆறாவது துண்டப் பிறப்புப் பற்றிய ஆய்வு*****
வாசமுள்ள நேசா மற்று ஒப்பில்லாதவனே
ஈசரே நானும் ஒன்று இயம்புகிறேன் கேளுமையா 
குறோணி அவன் உடலைக் கூர்மையுடனே பிளந்து
சுரோணித மாயன் தொல் புவியில் விட்டெறிய
அச்சுதரம் உயிரும் அவனிதனில் பிறந்து
பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையும் எண்ணாமல் மதமாய் இருந்ததனால்
ஆயன் அந்தச் சூரரையும் அழித்தார்காண் ஈசுரரே
---------
உரை
---------
வாசம் பொருந்திய நேசனே, மற்றவர்க்கு ஒப்பில்லாதவரே, ஈசரே, நான் ஒரு முக்கிய காரியம் பற்றிச் சொல்லுகிறேன், நீர் கேட்பீராக.
குறோணியின் உடலைக் கோபத்தால் இரத்தச் சிவப்பான மாயன் கூர்மையான ஆயுதத்தால் ஆறு துண்டங்களாகப் பிளந்து பழமையான பூமியில் விட்டெறிந்தார். மாயனும் குறோணியின் உடல் துண்டங்களும் உலகில் பிறந்தனர். இளம் பிறையைச் சூடும் சிவனைப் போற்றித் துதிக்காதது மட்டுமல்லாமல் மாயனையும் தனது சிந்தையில் சிறிதும் எண்ணிப் பாராதவண்ணம் ஆணவத்துடன் இருந்த காரணத்தால் திருமால் அச்சூரனையும் அவன் குலம் முழுவதையும் அழித்து விட்டார் என்பதைக் காண்பீராக ஈசுரரே.
---------------------
அய்யா உண்டு 


குறோணியின் ஆறாவது துண்டப் பிறப்புப் பற்றிய ஆய்வு*****
குரு முனிவனான கூர்மையுள்ள மாமுனிவன்
அரு முனிவனான ஆதிமுனியை நோக்கிச் 
சிவன் எனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவச் சங்காரவனே
முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண்டாக உடல் பிளந்து
தன்னை உயிரோடு ஐந்துசெய்தும் சுவாமியுனை நினையாத அதனால்
வன்ன திருமால் கொலை அடக்கி வந்தார் சடலம் இழந்து குண்டம்
இன்னம் பிறவி ஒன்றுண்டு அல்லவோ இறந்த குறோணி அவன்தனக்கே
---------
உரை
---------
குருமுனிவனாகிய கூர்மையான அறிவு படைத்த மாமுனிவன், அருமை முனிவனான ஆதிமுனியை (ஈசரை) நோக்கி "சிவனே" என்று போற்றிக் கூறலுற்றான்.
"தவமே, தவப்பொருளே, தாண்டவ சங்காரவனே, முன்பு பிறந்த குறோணியை ஆறு துண்டுகளாகப் பிளந்து அவற்றில் ஐந்தினை உயிரோடு பிறவி செய்தும் சிவனாகிய உம்மை நினையாத காரணத்தால் வல்லமை பொருந்திய திருமால் அவனை அழித்து, அவன் செய்து வந்த கொலை பாதகச் செயல்களை இல்லாமல் ஆக்கி, தமது பொய் உடலைப் பர்வதா மலையில் போட்டு விட்டு வைகுண்டம் ஏக நினைத்தார், இறந்த குறோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டு வழியாக அவனுக்கு இன்னும் ஒரு பிறவி இருக்கிறது அல்லவா?
---------------------
அய்யா உண்டு 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக