ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

சான்றோர் திருமணம்*****
அப்போது பெண்ணார் ஆதி பிறவி எல்லாம்
செப்புகிறோம் என்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு 
கேளாய் நீ என்று கிருபையுடன் ஏதுரைப்பான்
நாளான நாளதிலே நல்ல தெய்வ லோகமதில்
தெய்வேந்திரனார்க்குச் சொல் ஏவல் செய்திருந்த
நெய் நெடிய கன்னி நேரிழைமார் ஏழுபேரும்
வேலை இன்னது என்று விரிக்கக் கேள் மாகாளி
---------
உரை
---------
உடனே, நாரதர் காளிதேவியை வணங்கி, "தேவியே, அந்த மணப் பெண்களின் முன் பிறவிமுதல், எல்லா விவரங்களையும் சொல்லுகிறேன், நீ கேட்பாயாக. ஒரு சமயம் தெய்வ லோகத்தில் தெய்வேந்திரன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்து வந்த பெண்கள் இவர்கள் ஏழுபேரும் ஆவர். அவர்கள் வேலை எத்தகையது என்று இனி விரிவாகக் கூறுகிறேன், கேள். ... ...
---------------------
அய்யா உண்டு
---------------------



சான்றோர் திருமணம்*****
நாள் இட்டு நாரதரும் நல்ல மாகாளியுட
தாள் இணையைப் போற்றித்தான் உரைத்தார் அம்மானை 
மாகாளி உன்றனுட மக்கள் ஏழுபேர்களுக்கும்
வாகான மன்னன் வாய்த்த நிருபனுட
மக்கள் ஏழு பேர்களையும் மாலை மணம் சூட்டுதற்கு
மிக்க நாள் இட்டு மேவி வந்தேன் மெல்லியரே
என்று முனி சொல்ல ஏற்ற மாகாளி சொல்வாள்
நன்றுநன்று மாமுனியே நான் வளர்த்த கண்மணிகள்
தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்
பேசி வந்த பெண்ஏழும் உற்பவம் சொல் மாமுனியே
உய்த்து வந்த பெண்ஏழும் உற்பவம் சொல் மாமுனியே
மெய்வரம்பு உள்ள மெல்லியரைச் சொல்லு என்றாள்
---------
உரை
---------
நாரதர் காளியிடம் திரும்பி வந்து அவள் பாதங்களை வணங்கித் துதித்து, "மாகாளி பெண்ணே, உன்னுடைய ஏழு மக்களுக்கும் ஏற்ற நிருபத ராசனுடைய பெண் மக்கள் ஏழுபேருக்கும் திருமணம் செய்விக்க நல்ல நாள் குறித்து விட்டு இங்குத் திரும்பி வந்தேன்" என்று கூறினார்.
அதை அமைதியாகக் கேட்ட மாகாளி, "நல்லது நாரதரே, நான் வளர்த்த கண்மணிகள் தெய்வத் திருமாலின் பிறவி அல்லவா? எல்லாத் திசைகளிலும் சென்று வெற்றி பெற்ற சான்றோர்களுக்குத் திருமணம் பேசி வந்த பெண்களின் குலம், கோத்திரம், பூர்வப்பிறப்பு ஆகியவை என்ன? அப்பெண்களின் உற்பத்திக்குக் காரணமான தாய் தந்தை யார்? கட்டுப்பாடான உடம்பைப் பெற்ற அப்பெண்கள் யார்? என்பவற்றைப் பற்றிச் சொல்லுவாயாக, மாமுனியே" என்றாள்.
---------------------



சான்றோர் திருமணம்*****
ஆனதால் பெண்ஏழும் அவர்க்கேதாம் அல்லாது
மான முனியே மற்று எவர்க்கும் ஆகாதே 
என்று நிருபதனும் ஏற்ற முனியோடு உரைக்க
நன்றுநன்று என்று நாரதரும் சம்மதித்து
மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில்
சொன்ன பிள்ளை ஏழும் சிறந்து இருக்கிறார் எனவே
அந்த மன்னரான ஆண் பிள்ளைகள் ஆனோர்க்கு
இந்த முகூர்த்தம் யான் கேட்க வந்தேன் என்று
சொல்ல முனி மன்னவனும் சோபிதமாய் மகிழ்ந்து
நல்ல முகூர்த்த நாள் இட்டான் அம்மானை
---------
உரை
---------
(நிருபத ராசன் நாரதரிடம்.....) எனவே, நாரதரே, என் பெண்கள் ஏழுபேரும் அச்சான்றோருக்கே உரியவர்களாக இருக்கிறார்களே அல்லாமல், வேறு ஒருவருக்கும் கொடுக்கும் நிலையில் நான் இல்லையே" என்று கூறினார். இதைக் கேட்ட நாரதர், "மன்னவனே, நல்லது, அது சரியே" என்று சம்மதம் தெரிவித்து விட்டு, மீண்டும் மன்னனை நோக்கி, "மன்னா, நீ கேட்பாயாக, மாகாளியிடம் நீ இப்பொழுது கூறிய ஏழு ஆண் பிள்ளைகளும் சிறப்பாக வளர்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்யவே பெண் கேட்கவந்தேன்" என்று சொன்னார்.
உடனே, நிருபத மன்னன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவர்களின் திருமண நாளை நிச்சயப்படுத்தி நாரதரிடம் கூறினான்.
---------------------
அய்யா உண்டு 
---------------------



சான்றோர் திருமணம்*****
அப்போது ஈசுரரை அடியேன் மிகப்போற்றி
இப்போது என்றனுக்கு இரணமுடிவு ஆகுகையில் 
கொள்ளி வைக்கப் பிள்ளைஒன்று கொடுவும் என்றேன்
தெள்ளிமையாய் ஈசர் சொன்ன மொழிகேளும்
தெய்வச் சான்றோர்கள் திருவான மாகாளி
கையதுக்குள் வாழ்ந்து உன்கன்னி ஏழுபேர்களுக்கும்
மாலை இட்டு உன்றனக்கு வரும் ஆபத்தை எல்லாம்
மேலவராய்க் காத்து மேதினியோர்தாம் அறிய
உன்றனக்கு நல்லஉதவி மிகச்செய்வதற்கும்
வந்து அங்கு இருப்பார் என வகுத்தாரே ஈசுரரும்
---------
உரை
---------
அப்பொழுது நான் (நிருபத ராசன்) ஈசுரரின் பாதங்களைத் துதித்து வணங்கி, 'ஈசுரரே, எனக்குக் கடைசிக் காலக் கர்மக்கடன் செய்யும்போது கொள்ளி வைக்க ஆண் பிள்ளை ஒன்றும் கொடுத்தருளும்' என்றேன்.
அதற்கு ஈசர் தெளிவாகச் சொன்ன பதிலை நாரதரே நீர் கேட்பீராக.
'மன்னனே, தெய்வச் சான்றோர்கள் என்பவர்கள் அழகான மாகாளி பாதுகாப்பில் வளர்ந்து வாழ்ந்து வருவர். அவர்கள் உன் ஏழு கன்னிப் பெண்களுக்கும் மாலையிட்டுத் திருமணம் புரிந்து உனக்கு வரும் ஆபத்தை எல்லாம் வராதவண்ணம் பாதுகாவலராய் இருந்து காத்து, இந்த உலகத்தோர் அறியும்வண்ணம் உனக்கு நிறைய உதவிகள் செய்வதற்கு அங்கு வந்திருப்பர்' என்று விதி வகுத்துக் கூறினார் ஈசர்.
---------------------


சான்றோர் திருமணம்*****
சாற்றுமொழி இசைய தான் உரைக்கும் மாமுனிவன்
நீதமுள்ள நல்ல நிருபத ராசனிடம் 
பெற்ற மதலைதமைப் பெண் கேட்கப் போயினனே
மாமுனிவன் கேட்க மன்னன் அதிசயித்து
தாமுனிந்து ஏதோதான் உரைப்பான் அம்மானை
நல்ல முனியே நான் உரைக்க நீ கேளு
செல்ல மகவும் தேவிக்கும் என்றனக்கும்
இல்லாமலே அனேக நாள் இருந்தோம் தவமாக
நல்லான ஈசர் நாட்டமுடன் இரங்கி
ஆண்பிள்ளை உன்றனக்கு ஆகமத்தில் இல்லை என்று
பெண்பிள்ளை ஏழு பிறக்கும் என்று சொன்னார்கான்
---------
உரை
---------
சொல்லும் செய்தியைப் பிறருக்குப் புரியும்படி எடுத்து உரைக்கும் நாரதர் நேரே நல்ல நீதியுள்ள நிருபதராசனிடம் அவருக்குரிய ஏழு பெண்களையும் பெண் கேட்கப் போனார்.
நிருபத ராசனிடம் நாரதர் சென்று, "மன்னனே, உன்னிடம் பெண் கேட்க வந்துள்ளேன்" என்று தாம் வந்த விபரம் கூறினார்.
உடனே, நிருபதராசன் சிறிது கோபமடைந்து, "நாரத மாமுனியே, நான் கூறுவதை நீர் கேட்பீராக, எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை இல்லாமல் பல காலம் தவசு இருந்தோம், ஈசர் எங்களுக்காக இரங்கி, 'ஆண் பிள்ளை உனக்கு இல்லை என்னும் விதியே ஆகமத்தில் இருக்கிறது. ஆனால், உனக்குப் பெண் பிள்ளைகள் ஏழு பிறக்கும்' என்று சொன்னார்.
---------------------
அய்யா உண்டு 



சான்றோர் திருமணம்*****
அப்போது நல்ல ஆக்கமுள்ள பாலருக்கு
இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணும் என்று 
பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி
நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை
அழைத்து நல்ல மாகாளி அந்த முனியோடு உரைப்பாள்
விழைத்து நல்ல புத்தி விபரம் இட்டுச் சொல்லுகின்ற
மாமுனியே என்றன் மக்கள் ஏழுபேர்களுக்கும்
நீ முயன்று பெண்ஏழு நிச்சயிக்க வேணும் என்றாள்
நல்லதுதான் என்று நாரத மாமுனிவன்
வல்ல வகையாலும் உன் மக்களுக்குப் பெண்ஏழு
பார்த்து வருவேன் எனவே பகர்ந்து முனி போயினனே
---------
உரை
---------
நல்ல வீரப் பராக்கிரமமான சான்றோர்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்று மாகாளி நினைத்தாள்.
அதன்படி நன்கு திசைகளிலும் விசாரித்தாள். மணப்பெண் கிடைக்காது போகவே, நாரத முனியை அழைத்து, "நல்ல கருத்துக்களோடு தெளிவான புத்தியுடன் விபரமாக நடப்பவற்றைக் கூறுகின்ற நாரதரே, என்னுடைய பிள்ளைகள் ஏழுபேருக்கும் திருமணம் நிச்சயிக்க வேண்டும். அதற்கு நீ முயல வேண்டும்" என்றாள்.
உடனே, நாரத முனி, "நல்லதுதான்; பல வழிகளிலும் உன் ஏழு மக்களுக்கும் ஏழு பெண்களைப் பார்த்து வருவேன்" என்று கூறி விடைபெற்றார்.
---------------------
அய்யா உண்டு
---------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக