ஞாயிறு, 8 மார்ச், 2020

சீவாயுமார்கள் - சீவாயு மேடை - பஞ்ச தேவர் உற்பத்தி .

 முதலில் பஞ்ச தேவர்கள் யார் அவர்கள் எப்படி பட்டவர்கள் எனக் காண்போம்.இந்த பஞ்ச தேவர்கள் சிவனால் படைக்கப் பட்ட ஐந்து துஷ்ட தெய்வங்களாவார்கள். இவர்கள்  பின்வரும் பெயரில் அழைக்கபட்டனர்.

1.பையன்

2.அக்கினியேறி

3.மாயபலவேசம்

4.அத்திவாக்கன்

5.காத்தவராயன்.

                    இவர்கள் உலகில் தமக்கு பயந்து மாமிசத்தை படைத்து பூசை செய்வோரை  காத்தும்,தம்மை வணங்காதவர்களை கொன்றிடவும் செய்தனர். இவர்கள் வீராதி வீரராகவும், பல மாய சக்திகளை பெற்றும் விளங்கினர்.இவர்கள் உலகில் பல மாய சொரூபங்களை எடுக்க வல்லவர்கள்.உலகில் எல்லா இடங்களிலும் இருப்பவர்கள்.கண்மூடி முழிப்பதற்குள் பதினான்கு உலகினையும் சுற்றி வரும் ஆற்றல் கொண்டவர்கள்.கொடுமையான அக்கினியில் குளிக்கும் திறன் கொண்டவர்கள்.பல்வேறு வேடங்களில்(சுடலைமாடன்,மாடன்........................) இவ்வுலகில் வாழ்பவர்கள்.தீயவர்களை கொல்லும் திறமையில் இவர்களை மிஞ்ச எவருமிலர்.இத்தகைய கொடிய சக்திகளை கொண்டவர்கள் இந்த ஐந்து துஷ்ட வீரர்கள்.


        எவ்வாறு இவர்கள் அய்யாவின் ஏவல் வீரர்கள் ஆனார்கள் என பார்ப்போம்.வைகுண்டர் அவதாரமாகி செந்தூரில் வரும்போது தனக்கு துணையாக ஐந்து பேரை படைத்து தருமாறு சிவனிடம் வேண்டினார்.சிவன் வைகுண்டரிடம் ஐந்து துஷ்ட தேவர்கள் பற்றி சொல்ல வைகுண்டர் மனம்வருந்தி,இத்தகைய தீய சக்திகள் எனது தரும வழிக்கு எதிரானாதாக இருப்பதால் இவர்களால் எனது நோக்கம் சீரழியும்.எனவே அவர்களை மாற்றி அவர்களுக்கு புதிய வரம் கொடுத்து தனக்கு தருமாறு வேண்டினார்.உடனே ஈசர் அவர்களை காண திருசெந்தூரில் நடக்கும் முருகனின் எட்டாம் திருனாளைக் காண சென்றனர்.


            அங்கு முருகனின் தேரானது மக்களால் இழுக்க பட்ட போது வைகுண்டர் மாயமாக தேரின் உச்சியில் ஏறி அமர்ந்து கொள்ள தேர் நகராமல் நின்றது.அதனைக் கண்ட மக்கள் தடையை நீக்க துஷ்ட தெய்வங்களுக்கு பல பலிகளை கொடுத்தனர்.அதனை ஏற்று கொண்ட துஷ்ட தெய்வங்கள் தேரினை இழுக்க முயன்றன. அப்போதும் தேரானது நகரமுடியாமல் நிர்ப்பது கண்டு மனம்வருந்திய துஷ்ட வீரர்கள் தங்கள் தாயை போன்றவளாகிய காளியிடம் முறையிட்டனர்.வைகுண்டரின் செயலை அறிந்த காளி ,அவர்களிடம் கலி அழிக்க நாராயணர் வைகுண்டமாக வந்துள்ளார்.கலி அழியும் நேரமானதால் அவரிடம் சரணடைந்து அவரின் வலப்பக்கம் வாழுங்கள் என கூறி அனுப்பினாள்.


பின்னர் வைகுண்டரை பனிந்த ஐந்து பேரும் புதிய வரங்களை பெற்று வைகுண்டரின் ஏவல் சீவாயிகளாயினர்.அவர்களின் புதிய பெயர்கள்

1.கருடராசன்

2.சிமிழராசன்

3.தேர்த்தகன்

4.குட்டிவீரன்

5.தேர்க்குடையோன்

ஆவர்.

      இவர்கள் பூமியில் உள்ள வைகுண்டரின் பதிகளுக்கு காவலாளிகளாகவும்,அய்யாவின் உபதேசங்களை மனதில் ஏற்று வாழும் மக்களை காக்கவும் வைகுண்டர் வரமளித்தார்.மேலும் தனக்கு வலது பக்கத்திலேயே அவர்களுக்கு இடமளித்து பெருமை செய்தார்.

 அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக