வியாழன், 26 ஏப்ரல், 2018

வைகுண்டர் திருமாலிடம் வேண்டுதல் செய்தல்

அப்போது தான் பிறந்த ஆன வைகுண்டர் உரைப்பார்
வி=திருமால் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்நேரம் மகரத்துக்குள் பிறந்த குழந்தையாகிய வைகுண்டர் திருமாலிடம் கூறுகின்றார்
==
இப்போது என் பிதாவே என்னை ஈன்றே எடுத்து
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவு பிரகாசமதாய் உபதேசம் செய்தீரே
வி=இந்நேரம் என் தகப்பனாக நீர் இருந்து வைகுண்டராகிய என்னை உம்முடைய மகனாகப் பெற்றெடுத்து என்னை
பதினாறு வயது பாலகனாக வளர்த்து பூலோகத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற நியாயங்களைச் சொல்லித் தந்தீர்
உடல் புனிதத் தன்மை அடைந்து ஒளி பெருவது வரை ஒரு தாயைப்போல் எனக்கு அறிவுரை கூறினீரே
==
தங்க முடி வேந்தே தகப்பனே நீர்கேளும்
பொங்கும் கடல் துயின்ற புண்ணியரே நீர்கேளும்
வி=தங்கத்தால் ஆன மணி மகுடத்தை தலையில் அணிந்திருக்கும் மன்னவரே
என் தகப்பனே நான்சொல்வதை நீர் கேட்பீராக
இரவும் பகலும் இடைவிடாது பொங்கிக் கொண்டிருக்கின்ற கடல் அலையில் பள்ளி கொள்ளும் புண்ணியவானே நீர் கேட்பீராக
==
என்னுடைய முத்துயரம் எல்லாம் மிகக் கழித்து
நன் அமுதமாக நலமாகச் செய்தீரே
வி=நான் பூலொகத்தில் முடிச்சூடும்பெருமாளாக இருக்கும் போது செய்த பாவ வினைகளை எல்லாம் இல்லாமல் அகற்றி
அழிவில்லாத சக்தி உடைய அமிர்தத்தை போல் என்னை நற்பேறு அடையச் செய்து வைகுண்டராக மாற்றம் தெய்தீரே
==
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போய்ச் சொல்லீரே
உன்னை அறியாமல் ஊன் கலியில் உள்ளோர்கள்
என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
வி=அப்படிப்பட்ட என்னை மீட்டும் அதே கலியுகத்திற்கு சென்று அங்கே நீ தவம் செய் என்று சொல்கின்றீரே
நீ யார் என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் மாசு படிந்து குறைபாடோடு இருக்கின்ற கலியுகத்தில் வாழும் மக்கள்
நீயா கடவுள் என்று மிகவும் வசை கூறி வாயில் வந்தபடி கீழ்த்தரமாக பேசுவார்களே கலி நீசர்களெல்லாம்
==

அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லி
பொல்லாத நீசரெல்லாம் பேசி அடிப்பனே
வி=அது மட்டும் அல்ல நான் முடிச்சூடும் பெருமாளாக இருக்கும்போது என்னைப் பெற்ற தாய் தகப்பனுடைய பெயரைச் சொல்லி
நீ அவர்களுடைய பிள்ளை தானே தீடிரென்று எப்படி கடவுள் ஆனாய் என்று பொல்லாத குணம் படைத்தவர்கள் பேசி அடிப்பார்களே
==
சூத்திர விஞ்சை தொழிலை அறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்கு தப்பி மாழ்வானே
வி=ஆதி நாராயணராகிய நீ உன்னுடைய மாய தந்திரத்தால் செய்த விஞ்சையை பற்றி அனைரும் அறிந்தும் அதை நம்பாமல்
சூத்திர விஞ்சை என்ன என்று கூட தெரியாத நீசப்பாவிகள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஒழுக்கநெறி தவறி மாண்டு போவானே
==
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மை கெட்ட நீசன் சிதற அடிப்பானே
வி=நம்முடைய இனமாகிய சான்றோர் மக்கள் நம்மைப்பற்றி கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என்று வந்தால் கூட
நல்லதைப் பற்றி தெரிந்துக் கொள்ளாத கெட்டக் குணம் படைத்த நீசன் ஒட ஓட விரட்டி அடிப்பானே அய்யா
==
ஆனதால் நம் சாதி அகல நின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
வி=கலி மன்னனுடைய மக்கள் படுத்தும் துன்பம் தாங்க முடியாமல் சான்றோர் ஒளிவு மறைவாக நின்று கண் கலங்குவார்களே
நான் கேட்ட கேள்விகளுக்கு நீர் என்ன பதில் சொல்ல போகிறீர் பதில் சொல்லும் அன் அன்பிற்குரிய நாராயணரே
==
முன் என்னைப் பெற்ற மொய் குழலார் வம்மிசங்கள்
ஏன் ஏதுவாலே இயல்பு பெற வேணுமல்லோ
வி=நான் முடிச்சுடும் பெருமாளாக இருக்கும் போது என்னைப் பெற்ற தாய் தகப்பனுடைய வம்சா வழி சான்றோர்களும்
நான் வைகுண்டராக தெய்வநிலையை பெற்று விட்டப்படியால் அவர்களுக்கு நற்கதி அடைய வேண்டும் அல்லவா
==

அல்லாமல் முன் அமைத்த அணங்கு ஒரு பெண் இணங்க
நல்லோர் மனசு நல்ல அணங்குக்கே கொடுத்து
மேலும் பதவி மிகக் கொடுக்க வேணுமல்லோ
வி=அது மட்டும் அல்ல நான் சம்பூரணணாக இருந்த போது எமலோகத்து பரதேவதை ஒரு பெண்ணாக பிறந்து என்னோடு வாழ்ந்த
பரதேவதையாகிய திருமால் அம்மைக்கு பாவவினைகளைத் தீர்த்து தர்ம சிந்தனை உள்ள நல்ல மனதைக் கொடுக்க வேண்டும்
அது மட்டும் அல்ல அவளுக்கு தெய்வலோகப் பதவியும் கொடுத்து வீடு பேறு அடைய வேண்டும் அல்லவா என்று கேட்டார்
==
இப்படியே நல்ல இயல்பு பெற அருளி
எப்படியும் என்னை வந்து ஏற்க வரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி அனுப்பு மென்றார்
வி=இது போன்று எல்லோருக்கும் நலமாக நற்கதி அடைய அய்யா அருள் புரிய வேண்டுன் என்று கேட்கிறேன் என்றார்
கலி அழிக்க வந்த என்னை உம்முடைய அன்பு கட்டளையின் படி என்னை தர்மயுகத்தை ஆட்சி செய்ய வரும் நாளையும்
தர்மயுகம் தோன்றும் நாளையும் அங்கே என்ன நடக்கும் என்பதையும் தெளிவாகச் சொல்லி என்னை அனுப்பும் என்றார்
==
பொல்லாத பேர்மாளப் போறதுவும் சொல்லு மென்றார்
அந்தவுடனே ஆதி நாராயணரும்
வி=எவ்வாறு சொல்லியும் திருந்தாமல் தீமையான வழியில் நடந்து அழியப் போகின்றவர்களை பற்றியும் சொல்லவும் என்று கேட்டார்
தன்னுடைய மகனாக அவதரித்த வைகுண்டர் கேட்ட கேள்விகளுக்கு உடனே ஆதிபரம் பொருளாகிய நாராயணர் பதில் சொன்னார்
==
சிந்தை மகிழ்ந்து திருமகனை ஆவிமிக
கட்டி எடுத்துக் கமல முகத்தோடு அனைத்து
வி=தன்னுடைய மனதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக வைகுண்டருடைய நல்லெண்ணத்தை நினைத்து மகனை கட்டி அணைத்து
மார்போடு அணைத்துத் தூக்கி எடுத்து தாமரை மலர் போன்று பூத்து மலர்ந்த முகத்தோடு முத்தம் கொடுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக