வியாழன், 26 ஏப்ரல், 2018

வெயிலாள் அம்மை கண்டக் கணவு

மகாபரனார் செயலால் மாதாவின் கண்ணதிலே
சொர்ப்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே உத்தரவு
உர்ப்பனம் போல் கண்டு உற்றவர் மாதாவும்
வி=மகா விஷ்ணுவின் கருணைப் பார்வையால் முத்துக்குட்டியின் தாயார் வெயிலாள் அம்மையார் கனவில்
கனவு காண்பதுபோல் தரிசனமாக சுவாமி கண்கள் முன்னால் வந்து காட்சி அளித்து கட்டளை இட்டுச் சென்றார்
உண்மையாகவே நேரில் கண்டதைப் போல் கண்டு மிகவும் நம்பிக்கைக் கொண்டவராக தாய் வெயிலாள்
==
மகனே இன்று இரவில் மனஞ்சடைந்து நான் வாடி
அகம் வைத்த எண்ணம் அறிந்து சிவ நாரணரும்
வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளுமென்று
வி=என் என்பு மகனே
நான் இன்று இரவு தூங்கச் செல்லும் போது உன்னை நினைத்து மிகவும் மனவேதனையோடு படுத்தேன்
நான் என் மனதில் கொண்ட துயரத்தை அறிந்த சிவஞானம் பெற்ற நாராயணர் கனவில் காட்சி தந்தார்
மகாவிஷ்ணு என் கனவில் வந்து சொன்ன கட்டளையை நான் சொல்கிறேன் கேள் என்று கூறத் தொடங்கினாள்
==
விந்து வழிக் கிளையோர் மிகவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறார் அந்தச் சொற்பனத்தை அன்போரே
வி=சான்றோர் குல மக்களாகிய முத்துக்குட்டி சுவாமியின் உறவினர்களும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தனர்
அவர்கள் முன்னிலையில் வெயிலாள் கண்ட கனவை நேரடி காட்சி போல் கண்டதைக் கூறினாள் அன்பர்களே
==
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவார் அன்போரே
வி=நல்லெண்ணம் கொண்ட உறவினர்களே நல்லதொரு செய்தியை கேளுங்கள் என்று கூறத் தொடங்கினாள் அன்பர்களே
==
ஆயிரத் தெட்டு ஆண்டிது நாள் இவ்வருசம்
வி=தமிழ் வருடக் கணக்குப்படி ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த நல்லதொரு ஆண்டில் நடந்தது

மாசியென்ற மாதமிது வாய்ந்த தியதி பத்தொன்பது
இம்மாதம் இத்தியதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணை கொடி ஏற்றி நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
வி=தமிழ் மாத கணக்குப்படி மாசி என்கிற மாதத்தில் நல்லதொரு நாளாக கிடைத்த பத்தொன்பதாம் தியதி
இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாசி மாதத்தில் பத்தொன்பதாம் தியதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில்
எங்கள் மேல் ஆணையாகக் கூறுகின்றேன் திருச்செந்தூர்
கோவிலில் கொடி ஏற்றப்பட்டு நல்லபடி திருவிழா நடக்கும்
திருவிழா நடக்கும் போது நீ உன் மகனை திருச்செந்தூருக்கு கூட்டிக் கொண்டு நம்பிக்கையோடு வருகைத் தந்தால்
==
எங்குள்ளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்லபேறும் கொடுப்போம் நம்மாணை தப்பாது எனச்
வி=உலக மக்கள் அனைவரும் அறியும் படியாக உன் மகனுக்கு ஏற்பட்டுள்ள நோயைத் தீர்த்து விடுவோம் என்றும்
உன் மகனுக்கு உலகம் எங்கும் புகழடையும் நற்பேர் அருளுவோம் எங்கள் மேல் ஆணையாக கூறுகின்றேன் பொய்யாகாது என்றார்
==
சொல்லவே கண்டேன் சுவாமி கருமேனி நிரம்
நான்கண்ட சொப்பனந்தான் நழுவி மிகப்போகாது
வி=என்னிடம் சத்தியம் செய்து சத்திய வாக்காக சொல்வதைக் கண்டேன் சொன்ன நாராயணர் கருமை நிறத்துடன் காணப்பட்டார்
மேதுவாக நான் காணும் கனவுகள் பலிக்கும் எனவே இந்த கனவும் பலிக்காமல் போகாது என்று கூறினாள்
==
தெண்கண்டாப் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந்து அங்கே போய்
வந்து அல்லாதே பிணியும் மாறவகை இல்லையல்லோ
வி=இனிய சுவையை உடைய தேனை கண்டது போல் தன் மனகசப்பு மாறி உள்ளம் பூரித்தவளாக சந்தோசம் அடைந்து
நான் கண்ட இந்த சொப்பனத்தின்படி உடனடியாக நாம் எல்லோரும் இங்கிருந்து புறப்பட்டு அங்கே சென்று
இறைவனை வழிபட்டு வராமல் இவனுக்கு இந்த நோயானது தீர்வதற்கான வேறு வழி இல்லை அல்லவா என்றாள்
==


என்றுரைக்க எல்லொரும் இன்பமுடனே மகழ்ந்து
நன்று நன்று போவதற்கு நடைக் கோப்பு கூட்டு மென்றார்
வி=இவ்வாறு வெயிலாள் அம்மையார் திடமான முறையில் சொல்ல உறவினர்களுக்கு நல்ல செய்தியைக் கேட்டு சந்தோசத்துடன்
மிகவும் நல்லது நல்லபடியாகவே நடக்கட்டும் நாங்களும் வருகிறோம் நடந்து சொல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்
==
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாம் சேகரித்து
வி=நடைபயணத்தின் போது சாப்பிடுவதற்கான உணவு வகைகளை பலவிதமான முறையில் கெட்டுப் போகாதபடி தயார் செய்தனர்
பழைய கருப்புக்கட்டி முதல் கட்டுச்சோறு வரை தேவைப்படுகின்ற பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார்
==
தான தர்மம் செய்ய தனங்கள் மிக எடுத்து
தீனம் ஆனவரைத் திடமாகக் கூட்டி வந்து
ஆனை சேகரித்து அகல நல்லத் தொட்டில் வைத்து
நாளைக் கடத்தாமல் நடக்க வழி கொண்டனராம்
வி=ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வதற்குத் தேவையான பணத்தையும் பொருளையும் அதிகமாக எடுத்துக் கொண்டனர்
நோய் பிடித்த நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தவரை திடமனதோடு திருச்செந்தூருக்கு அழைத்து வருவதற்கு
உறவினர்களை ஏற்பாடு செய்து முத்துக்குட்டி சுவாமி படுக்க வைத்து தூக்கி வருவதற்கு நல்ல தொட்டில் உருவாக்கி
நாட்களை கடத்தாமல் கனவில் கண்ட அதேநான் போய் சேர்வதற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டார்கள்
==
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிக நிறுத்தி
இருந்த பதியும் விட்டு ஏற்ற ஒரு காதம் விட்டு
வி=தாய் வெயிலாள் அம்மையாரும் மகன் முத்துக்குட்டி சுவாமியும் முக்கியமான உறவினர்களோடு எல்லோருமாகச் சேர்ந்து
நீதிமானாகிய நாராயணருடைய பாதக் கமலங்களை மனதில் நினைத்து சிவ சிவா அரகரா என்ற கோஷத்தோடு
தன்னுடைய ஊரில் தன்னுடைய வீட்டுக்கு வெளியே கிளம்பி நடைபயணத்தால் பத்து மைல் தூரத்தைக் கடந்த போது
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக