வியாழன், 26 ஏப்ரல், 2018

கைலையில் காளி திருமாலைச் சந்தித்துப் புலம்பல்

மாகாளி என்ற வட பத்திரகாளி
ஓகாளி என்ற உயர்ந்த பலகாரி
சென்றாள் கைலை சிவ அய்யா நாதனிடம்
வி=மகாப் பெரிய சக்திகளைக் கொண்ட மாகாளி என்கிற வடக்கே இமயமலை அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் வனப் பத்ரகாளி
ஓம் என்கிற மந்திர சக்தியை ஓங்காரமாகக் கொண்ட மிக உயர்ந்த நிலையில் சக்தியின் வடிவமாகிய ஓம் காளியானவள்
கைலாயத்தை நோக்கி மிகவும் ஆவேசமாக சிவலோகத்தில் அமர்ந்திருந்த ஆதி நாராயணரைத் தேடி வந்தாள்
==
நன்றான கன்னி நாராயணர் இடத்தில்
வந்து விழுந்து மண்ணில் அவள் புரண்டு
சந்துபயிர் மாயவரே தான்பிழைத்தேன் நான்உமக்கு
வி=தெய்வத் திருமகளாக வீற்றிருந்த மகாலெட்சுமியும் மகா விஷ்ணுவும் இருக்கின்ற தங்க மண்டபத்திற்கு வந்து
அவர்களுடைய திருவடிகளை வணங்கி திருப்பாதங்களில் விழுந்து தரையில் உருண்டு புரண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதாள்
சர்வ லோகத்திற்கும் அதிபதியாக விளங்கும் சர்வ வல்லவரே நான் உமக்குப் பிழை வரக்கூடிய அளவில் நடந்து விட்டேன்
==
உன்மக்கள் சான்றோர் உற்றமக்கள் ஏழுதிலே
நன்மையற்ற சோழன் நாடும் பழி இரண்டு ஏத்தான்
வி=உம்முடைய பிள்ளைகள் ஏழ்வரையும் என்னிடம் முழுமையான நம்பிக்கையோடு ஒப்படைத்து வளர்க்கத் தந்தீர்
அவர்களை நான் நன்றாக வளர்த்து வாழ்ந்து வரும் வேளையிலே இரக்கமற்ற கரிகாலசோழன் இருவரை கொண்டு விட்டான்
==
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுக்கு
மன்றுதனில் பன்னிரெண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழன் ஊர் தட்டழியப் பட்டுழற
வி=என் பிள்ளைகளாகப் பாதுகாத்த நான் அச்செயலைக் கண்டு கதறியபடி காரணத்தைத் தாங்கமுடியாமல் கரிகாலசோழனுக்கு
நீ ஆண்டு கொண்டிருக்கும் உன்னுடைய சோழ நன் நாட்டில் இனி பன்னிரெண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்படும் என்று
நான் வேதனைப் பொறுக்க முடியாமல் சாபம் கொடுத்து விட்டேன் சோழ நாடு தட்டுத் தடுமாறி அவஸ்தை அடைய வேண்டும்
==

பாவியவன் ஊரைப் பகல் நரி ஓட வைத்தேன்
அல்லாமல் சோழன் அக்கம் அறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன் வழி பொடிப்படவே சாபமிட்டேன்
வி=படுபாவச் செயலை செய்தவன் நாட்டில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு நாடு வனமாகி பகலில் நரி ஒடுகிற இடமாக மாற வேண்டும்
அதுமட்டும் அல்லாமல் கரிகால் சோழ மன்னனது குடும்பம் அடியோடு அழியும் படி அறம் அழியாத நான் சபித்து விட்டேன்
பொறுக்க முடியாத செயலை செய்த நீசனுடைய வம்சாவழி இனத்தவர்கள் ஒரு பொடி கூட இல்லாமல் ஆகும்படி சபித்தேன்
==
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்து விட்டு
பத்திரரின் செய்தி சொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
வி=இவ்வளவு சாபங்களையும் கொடுத்து அவர்களை அடியோடு அழித்து அலைக்கிழியும் படி செய்து முடித்து விட்டு
உம்மூடைய பிள்ளைகளின் நிலைமையை சொல்ல வளர்ப்பு தாயாகிய நான் பாவத்திற்கு புண்ணியம் கொடுக்கும் உம்மிடம் வந்தேன் என்றாள்
==
அப்போது ஆதி அய்யா நாராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
வி=பத்ரகாளியின் பரவச வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருந்த அண்ட சராசரத்தை ஆட்சி செய்யும் அய்யா வைகுண்ட நாராயணர்
செப்பு ஏட்டில் ஏழுதுவது போன்று சொன்ன சொல் மாறாத ஆதி பரமசிவனிடம் கூறுகின்றார் அதை கவனமாகக் கேளுங்கள்
==
கேட்கலையோ எந்தன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையோ இந்த ஏந்திழையாள் சொன்னது தான்
வி=பத்ரகாளி பேசிய வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கு கேட்டதா அவள் என்னிடம் புண்ணியம் கேட்கிறாள் சிவபெருமெனே
பத்ரகாளி சொல்வதைப் போல் அவளுக்கு கருணைக் காட்டி புண்ணியம் கொடுக்க இதை ஏற்று கொள்ளும்படி இருக்கிறதா
==

பிள்ளைக்கோர் தீங்கு பிழையாமல் எப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேன் நான் என்றுச் சொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டு மொழி பேசுஞ் செய்தியை நீர் கேட்டீரோ
வி=நான் அவளிடம் கொடுத்தப் பிள்ளைகளுக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் தவறுதல்கள் இன்றி இந்நாளும்
என்னுடைய பிள்ளைகளான வாரி வழங்கும் கொடையாளிகளை நல்லமுறையில் வளர்த்துத் தருவேன் என்று வாக்கு தந்து
கண்கள் மூலம் சாடைக் காட்டி பொறுப்புணர்வோடு என்னிடம் இருந்து என் பிள்ளைகளை வாங்கிச் சென்றாள் அன்று
இப்போது அவள் சொன்ன வார்த்தைகள் படி நடக்காமல் மன்னனுக்கு சாபமிட்டேன் என்று சமாளிப்பதை நீர் கேட்டீரா
==
நான் தனி அல்லவே நால் பேரு உண்டல்லவோ
தான் தனிமை ஆகிடினுந் தப்பிதமென்றே புகல்வார்
வானவருந் தானவரும் மறையவருஞ் சாட்சியதாய்
வி=குழந்தையை நான் அவளிடம் தனிப்பட்ட முறையில் கொடுக்க
வில்லை நான்கு பேர் முன்பாக அல்லவா நான் கொடுத்தேன்
நான் என் விருப்பத்திற்கு தனிப்பட்ட முறையில் கொடுத்திருந்தால் என் மேல் தப்பு என்று எல்லோரும் சொல்வார்கள்
முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி நாற்கோடி முனிவர்களும் பிரம்ம ரிஷிகளும் சாட்சிகளாய் இருக்கும்படி அல்லவா கொடுத்தேன்
==
நானவளோடே வாக்கு நவின்றல்லோ தான் கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே உண்டானால்
வி=நான் அவளிடம் குழந்தைகளைக் கொடுக்கும் போது சத்திய பிரமாணம் வாங்கிக் கொண்டு தானே அவளை நம்பி ஒப்படைத்தேன்
பிள்ளைகளை வளர்க்கும் போது கவனக்குறைவால் எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டது என்றால் பழி வாங்குவேன்
==
மிக்கச்சிறை உனக்கு மேவுமென உரைத்து
ஈந்தேன் மதலை இவள் கையிலே ஈசுரரே
வி=நீ மீண்டும் வர முடியாதபடி மிகப்பெரிய கொடுமை விளைவிக்கக் கூடிய சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சொல்லிதானே
குழந்தைகளை அவளுடையக் கையில் அவசர அவசரமாக புத்திமதிகளைச் சொல்லி அவள் கையிவ் கொடுத்தேன் ஈஸ்வரரே
==

மாய்ந்தவுடன் ஆகிடினும் வந்துரைத்தாளோ சிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோம் என்று ஏகி வந்தாள்
வி=என் அன்பு மைத்துனராகிய சிவபெருமானே பத்ரகாளி குழந்தைகளுக்கு மரணம் ஏற்பட்ட உடனே வந்து சொன்னாளா பாருங்கள்
எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதில் எந்த விதமான பதட்டமும் பயமும் இல்லாமல் இருந்துவிட்டு இவ்வளவு நாள்கள் கழித்து
அவளுடைய மனசாட்சி மனதை குத்திக்கொண்டே இருந்த படியால் என்னிடம் சொல்வதற்காக இங்கே வந்திருக்கின்றாள்
==
தன்மதலை என்றால் தலை வைத்திருப்பாளோ
என்மதலைக்கு இவள்தான் இடறி விழுவாளோ
வி=அவள் பெற்றெடுத்தப் பிள்ளையாக இருந்திருந்தால் மன்னன் தலையைக் கொய்யாமல் இவள் தலை சாய்ந்து படுத்திருப்பாளோ?
என்னுடைய பிள்ளைகள் என்பதால் தானே இவள் இவ்வளவு பொறுமையாகக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாள்
==
ஒருவர் பிள்ளைக் கொருவர் உடைமை இடுவாரோ
கருதல் விருப்பங் காணுமோ மற்றோர்க்கு
வி=ஒருவருடைய பிள்ளைகளுக்காக இன்னொருவர் தன்னுடைய உரிமைகளை இழந்து உதவிச் செய்ய வருவார்களா
தான் பெற்ற பிள்ளையை தானே வளர்ப்பது போல் மற்றவர்கள் முழுப் பொறுப்போடு நடக்க மாட்டார்கள் என்பது புரிகிறது
==
பெற்ற கும்பியல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரெண்டு ஆண்டுவரை
வி=குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயின் வயிறு அல்லவா வேதனை தாங்க முடியாமல் தீயைப் போல் பற்றி எரியும்
அடுத்தவருக்கு ஆக வேண்டியது என்ன அவர்களுக்கு மனவருந்தம் ஏற்பட்டு வயிறு குமுளி எரிந்திடீமோ
கொடும் பாவியாகிய சோழ மன்னன் என்னுடைய பிள்ளைகளை கொண்டு பன்னிரெண்டு ஆன பிறகும் கூட
==
ஆவி அறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்பன் இல்லார்போல் தயங்கினது கணடோமே
வி=இவர்களது ஆன்மா எங்க இருக்கிறது என்று ஆருக்கிறது என்று அடியேனுக்கு தெரியவில்லை யாரும் ஒருவார்த்தைகூட சொல்லலவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக