வியாழன், 26 ஏப்ரல், 2018

அய்யா துணை

யுகா யுகங்கள் தோறும் தர்மம் குன்றி அதர்மம் ஆட்சி செய்யும் போதெல்லாம் அவதரிப்பவரே அய்யா நாராயணர். அப்படியே இந்த கலியுகத்திலும் கொல்லம் ஆண்டு 1008, மாசி 20ல், நமக்காக மும்மூர்த்திகளும் ஏக மூர்த்தியாக அய்யா வைகுண்டர் என்னும் திருநாமத்தில் அவதரித்தனர். அவருக்கு சேவை செய்ய வேண்டி பஞ்ச பாண்டவர் ஐவரும் பிறந்து பணிவிடை செய்து அய்யாவுக்கு சீசர்களாக இருந்தனர். அவர்களில் வேதம், சகல ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகிய அனைத்தும் அறிந்த சகாதேவன் அரிகோபாலன் என்னும் பெயரோடு அய்யாவின் அன்பு சீசராக இருந்தார்.




1016 ஆண்டு, கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, வெள்ளி கிழமை அரிகோபாலன் சீசர் அவர்கள் தோத்திரம் என்று சாமியை தொழுது இராத்திரி தூக்கத்தில் இருக்கும்போது நாதன் நாராயணன் நலமாக அவர் அருகில் வந்திருந்தது சீதமுடன்(அன்பாக) சீசரை எழுப்பி உலக மக்கள் அனைவரும் வைகுண்ட அவதாரத்தை அறியும்படியும், தர்மயுக வாழ்வை பெறவேண்டியும் இறுதி வேதமான அகிலத்திரட்டு அம்மானையை எழுதும்படி கூறி, "ஏரணியும் மாயோன்" என்கின்ற முதல் சீரையும் எடுத்துக்கொடுத்தார். மேலும் எம்பெருமான் நாராயணர் அரிகோபாலனிடம் " மகனே நீ எழுது நான் உன் அகம் அமர்ந்து எல்லவற்றையும் பார்த்துக்கொள்வேன் " என்று கூறி அவரின் சிந்தையில் நாராயணர் அன்னை மகாலஷ்மிக்கு ஆதி முதல் தர்மயுகம் வரை உள்ள அனைத்தும் நிகழ்வுகளையும் கதை போல் சொல்லுவதை காட்டினார். அதனை அப்படியே அகிலத்திரட்டு அம்மானையாக அரிகோபாலன் சீசர் ஏட்டில் எழுதினார். நாராயணரின் வாக்கான இந்த அகிலத்திரட்டு அம்மானையை அனைவரும் படித்து, அதன்படி நடந்து, பாவத்தினை நீக்கி தர்மயுக வாழ்வினை பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக