வியாழன், 26 ஏப்ரல், 2018

முனிவர்கள் சம்பூரணதேவன் வரலாறு கூறுதல்

வெல்லமர்கோன் வாழும் மேலோக இவ்வுயிர்க்கு
பேர் சம்பூரணன்தான் பெரிய திறவான் காண்
ஆர் ஒவ்வாரே இவருக்கு ஆதி கிருபை உள்ளோன்
வி=தெய்வேந்திரன் வாழ்ந்துவரும் தெய்வலோகத்தில் வாழ்ந்து வந்த தேவர்களில் ஓர் உயிர் ஆகும்
தெய்வலோகப் பிறவியாக இவருடைய பெயர் சம்பூரணத் தேவன் ஆகும் இவர் மிகப்பெரிய திறமையான சக்திகளை பெற்றவர்
தேவர்களிலே எல்லோரையும் விட அதிக சக்தி உள்ளவரகா
இருந்தார் ஆதிகாலத்திலே புகழ் பெற்று விளங்கியவன்
==
அப்படியே தெய்வலோக மதிலே இருக்க
இப்படியே இவருக்கு எமலோகமானதிலே
இருக்கின்ற பெண்ணிதிலே இசைந்த பரதேவதையென்று
வி=தெய்வலோகத்து தேவர்களிலே மிகவும் பேர் பெற்றவராக தெய்வலோகத்தில் வாழ்ந்து வரும்போது
கூடு விட்டு கூடுபாயும் சக்தி பெற்ற இவருக்கு எமலோகத்தில்
வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த ஒரு பெண்
எமலோகத்துப் பெண்களிலே பார்ப்பதற்கு மிகவும் அழகான பரதேவதை என்கிற பெண் ஒருத்தி இருந்தாள்
==
ஒருகுழிலி தன்மேல் உள்ளாசையாய் இவரும்
அவளும் இவர் பேரில் ஆசையாய்த் தானிருந்து
வி=எமலோகத்து பரதேவதை மேல் உள்ளத்தில் ஆசைக் கொண்டவராக சம்பூரணத் தேவன் காணப்பட்டார்
பரதேவதையும் தெய்வலோகத்து சம்பூரணத்தேவன் மேல் ஆசைக் கொண்டவளாகக் காணப்பட்டாள்
==
இவளும் இவரும் இருந்து மிக வாழ்க்கையிலே
தேவருக்கும் தெய்வலோகம் ஏழிலுள்ளவர்க்கும்
வி=எமலோகத்து பரதேவதையும் தெய்வலோகத்து சம்பூரணனும் காதல் வசப்பட்டவர்களாக வாழ்ந்து வரும் போது
தெய்வ லோகத்திலுள்ள தேவர்களும் தெய்வ உலகமாகிய மேல் உலகத்தில் உள்ள ஏழு உலகத்தவர்களும்
==
யாவருக்கும் ஓர்பிறவி ஆகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்ன உன்செய்தி என்றார்
வி=எல்லோரும் பூலோகத்தில் ஓரு பிறவி எடுத்தே ஆக வேண்டும் என்கிற இக்கட்டான சமயம் உருவாகியது அப்போது
திருமால் சம்பூரணத் தேவரையும் தன்னிடம் வரவழைத்து பூலோகத்தில் பிறக்க உன் விருப்பம் என்ன என்று கேட்டார்
==

அவருடைய ஆசையினால் அல்லஎன்று தான் மறுத்து
இவளையும் என்னோடு இயல்பாய்ப் பிறவி செய்தால்
குவளை அணி மாயவரே குணம் எனக்கு ஆகும் என்றார்
வி=சம்பூரணத் தேவன் பரதேவதையைக் விருப்பிய படியால் நான் பூலொகப் பிறவி எடுக்கச் சொல்லமாட்டேன் என்று மறுப்பு கூறினார்
மறுப்புக் கூறிய சம்பூரணத்தேவன் பரதேவதையை என்னோடு எனக்கு ஏற்றவளாக நீர் பிறவி செய்தால் மட்டுமே
குவலயத்தை தனக்குள் அணிந்த ஏரணியும் மாயோனே நீங்கள் நினைக்கிறபடி நான் நடந்து கொள்கிறேன் என்றான்
==
அப்போது நாதர் அந்தத் தேவன் தனக்கு
செப்பமுள்ள புத்தி செப்பி மிகப் பார்த்தனரே
வி=சம்பூரணத்தேவன் கூறுவதைக் கேட்ட ஆதி நாராயணர் தெய்வலோகத்து சம்பூரணத் தேவனுக்கு புத்திமதிகளைக் கூறினார்
செம்மையான நல்ல புத்திமதிகளை எல்லாம் நன்றாக புரிந்துக் கொள்ளும்படி சொல்லிப் பார்த்தீர்களே
==
அப்போது இவர் கேளாமல் அதுதானதுதான் என்றார்
மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயன் அப்போது அவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
வி=அன்று நீங்கள் சொன்னதை எல்லாம் சம்பூரணத்தேவன் கேட்காமல் பரதேவதை வேண்டும் வேண்டும் என்று கூறினார்
சம்பூரணத்தேவனின் கீழ்த்தரமான வார்த்தையைக் கேட்ட உம்முடைய மனதில் கோபம் மிகவும் அதிகமாக விட்டது
சம்பூரணன் மேல் கோபம் கொண்டு ஆயன் பெருமாள் சம்பூரணத் தேவனுக்கு வீடுபேறு அடைய சில உபதேசங்களைக் கூறினார்
==
நல்லது நீ கேட்ட நியாயம் ஈடேற்றமதாய்
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்கள் இருபேர்க்கும் இன்னம் பிறவியிலே
வி=சம்பூரணனே நீ ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னது நல்லதுதான் நீ சொல்லியபடி நடந்து ஈடேற வேண்டும் என்றால்
வல்லமைப் பொருந்திய தவப்பொருளாகிய ஈஸ்வரனை ஒரு மனதாய் நினைத்து பரதேவதையும் நீயும் இருபேருமாக
எங்கள் இரண்டு பேருக்கும் பூலோகத்தில் பிறக்கப்போகின்ற மானிடப்பிறவியில் ஒன்று சேரும் பாக்யம் வேண்டும்
==

மங்கையும் புருசனென மறவாமல் ஆவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றி
பரந்தாண்டி கண்டு பலன் பெறுங்கோ என்று சொல்லி
வி=எமலோகத்து பரதேவதை என்கிற பெண்ணுக்கு கணவராக மறந்து விடாதபடி சேர்ந்து வாழ்வதற்குரிய உரிமையை
அடியவர்களாகிய எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று மனதில் ஒரே நினைவாக மனதை ஒருநிலைப்படுத்தி
பரநிலையைத் தாண்டி சென்று பரமசிவனைக் கண்டு நீங்கள்
கேட்டப் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றீர்
==
தவசிருக்க விட்டீர் காண் சங்கரரே நீர் கேளும்
சிவசிவா வென்று தவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம் பார்க்க ஈசுரரும் சன்னியாசி நீதனுமாய்
வி=அவர்களுக்கு தகுந்த அறிவுரைக் கூறி தவம் இருக்க அனுப்பி வைத்தீர் அங்கே நடந்ததைக் கூறுகின்றேன் திருமாலே கேளும்
தவமலைக்குச் சென்று இரண்டுபேரும் சிவசிவா என்று சிவனை வேண்டி தவம் செய்து கொண்டு நிற்கும் வேளையிலே
அவர்கள் செய்த தவத்தின் நிலையைப் பார்த்து அருள்புரிய சிவபெருமானும் பண்டாரவேடம் கொண்ட நீரும் இருவருமாக
==
அவடம் எழுந்தருளி அங்கு ஏகும் வேளையிலே
தெய்வேந்திரனும் திருமுடியும் குட்டி
மயோந்திரனுடைய மலர் பாதம் காணவென்று
அவனும் மிகவந்தான் அரனெதிரே அய்யாவே
வி=கைலாய மலையில் இருந்து புறப்பட்டு அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த தவமலைக்கு செல்லும் சமயத்தில்
தெய்வலோகத்துக்கு அதிபதியாக விளங்குகின்ற தெய்வேந்திரன் தன்னுடைய தலையில் திருமுடி அணிந்தவராக
சங்கரராக காணப்படுகின்ற சிவன் திருமாலுடைய திருமலர்ப் பாதங்களைக் கண்டு வழிபட்டுச் செல்வதற்காக
இந்திரலோகத்தில் இருந்து புறப்பட்டு இந்திரன் ராஜ தோரணையோடு சிவபெருமான் முன்பாக வந்து அய்யா என்றான்
==
தவத்துக் கிடறு தான் வாரது தோன்றாமல்
தேவன் மதிமயங்கித் திருமடிமேல் இச்சைகொண்டு
வி=சம்பூரணத்தேவன் பரதேவதையுடைய தவத்திறக்கு இடையூறாக தெய்வேந்திரன் வருகின்றான் என்பதை சிந்திக்காமல்
சம்பூரணத்தேவன் ஆசையில் மனமயக்கம் கொண்டு தெய்வேந்திரன் அணிந்திருந்த திருமுடியின் மேல் மிகவும் ஆசைகொண்டு
==

பாவையுடன் உரைத்துப் பற்கடித்து தேவனுமே
அதையறிந்து ஈசர் அன்று உம்மிடம் உரைத்தார்
வி=மனதில் பட்டதை தன் அன்பிற்குரிய பரதேவதை புரிந்து கொள்ளும் படி சிரிப்பால் ஜாடைக் காட்டினான் சம்பூரணத்தேவன்
சம்பூரணத்தேவனின் ஆசையை அறிந்து கொண்ட சிவபெருமான் அதை உடனே உம்மிடம் கூறினார்
==
இதையறிந்து நீரும் ஏற்ற தேவனோடு உரைத்தீர்
வாய்த்த தவம் குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்ற கீழுலகில் என் மகவு சான்றோரில்
வி=சம்பூரணத் தேவனுடைய பேராசையை அறிந்து கொண்ட நீரும் தவம் தவறிய சம்பூரணனைப் பார்த்து சொன்னீர்
உனக்கு கிடைக்க வேண்டிய பலனை அடைய முடியாமல் தவம் தவறிய நற்கதி அடையமுடியாமல் நின்றக் காரணத்தால்
எது நடக்க வேண்டுமோ அது தானாக நடக்கும் என்பதுபோல பூலோகத்திற்கு சென்று என் பிள்ளைகளாகிய சான்றோர் இனத்தில்
==
நல்ல தர்ம குலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லை எல்லாம் தீர்த்துச் சூலின அழுக்கு அறுத்து
வளரும் பருவமதில் வந்து உன்னை நான் எடுத்து
வி=மிகவும் உயர்வான தன்மையில் உள்ள தர்மசிந்தனை உள்ள சான்றோர்க்கு நல்லதொரு பிள்ளையாக நீ பிறந்து
முன்ஜென்ம கர்ம வினைகளை எல்லாம் தீர்த்துவிட்டு பிறவி எடுத்த காரணத்தையும் அனுபவித்து முடித்து விட்டு
என் நினைவான மன நிலையோடு காணப்படும் நேரத்தில் நான் பூலோகம் வந்து உன்னை என்னோடு எடுப்பேன்
==
இளவரசா உன்னை ஈன்று எடுத்தே வளர்த்து
ஆளும் அரசு அழகாக உந்தனக்கு
வி=நான் இளம் அரசனாகிய உன்னை என் பிள்ளையாக பெற்று எடுத்து தெய்வீக சக்திப் பொருந்திய வைகுண்டராக வளர்த்து
தர்மயுகத்தை ஆட்சி செய்வதற்கான அரசுப்பொறுப்பை அழகாக அமைத்து நான் உனக்கு தருவேன்
==
நாளும் மிகத் தருவேன் நம் ஆணை தப்பாதென
வி=அதற்குரிய நாளை மிக விரைவில் தருவேன் இது உண்மை என்மேல் ஆணை என்று வாக்குரைத்தீர்கள்
==


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக