வியாழன், 26 ஏப்ரல், 2018

திருமால் வைகுண்டருக்கு அருளிய விஞ்சைகள்

அகமே அருளித் தருவது எல்லாம் மனுப்போல் அசலில்
யுகமே முடிந்ததின் பிறகு உதிக்கும் தர்மயுகத்தில் வந்தால்
செகமே அறியச் சொல்லி மிகச்சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே
வி=நான் உன்னுடைய மனதிற்கு புரியும் படியாக அருள் புரிவதை நீ மனிதர்களைப் போல் நடந்து உண்மையை மறக்காதே
கலியுகம் முடிந்த பிறகு புதிதாக தோன்றும் தர்மயுகத்தில் வைகுண்ட நாராயணராக வந்தவுடன் நான் உனக்கு
அகில உலகமும் அறிந்து கொள்ளும்படி சொல்லிக் கொடுத்து மிகவும் சிறப்பான வாழ்க்கை வாழ்வோம்
==
ஆண்டு ஆயிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே
நான் தான் கடலின் கரையாண்டி நாராயணனே பண்டாரம்
கூண்டாந் தெச்சணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று
ஒன்றாம் விஞ்சை இதுமகனே
உரைப்பேன் இரண்டாம் விஞ்சையிதே
வி=மிகவும் சிறப்பான ஆண்டாகிய ஆயிரத்து எட்டாம் ஆண்டில் மாசி என்ற தமிழ் மாதத்தில் அவதாரம் எடுத்து
நானே தான் கடலின் கரைக்கு வந்து சேர்ந்து கந்தன் என்றும் நாராயணர் என்றும் வைகுண்டர் என்றும்
பல விதமாக கூறினாலும் தெட்சணா பூமியாகிய சுவாமிதோப்பில் பள்ளி கொள்கிறோம் தர்ம காரியம் செய்வதற்காக
நான் உனக்கு கூறும் உபதேசத்தில் முதல் விஞ்சை இது மகனே அடுத்து இரண்டாவது விஞ்சைக் கூறுகின்றேன்
==
வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாம் கைக்கூலி
ஆண்டார் நாராயணர் தனக்கு அனுப்போல் வேண்டாம் காவடியும்
வி=வேண்டாம் வேண்டாம் காணிக்கை என்கிற பணம் வேண்டாம் எனக்கு கைக்கூலியாக பொன்னோ போருளோ எதுவும் வேண்டாம்
உங்களை ஆண்டுக் கொண்டிருக்கின்ற நாராயணராகிய எனக்கு அணு அளவு கூட காவடி எடுத்தல் வேண்டாம்
==
வேண்டாம் எனவே நிறுத்தல் செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருக்க
இரண்டாம் விஞ்சை இது மகனே நவில்வேன் முன்றாம் விஞ்சையிதே
வி=காவடி ஆட்டங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று நிறுத்தி வைத்து அமைதியாக மனதைக் கட்டுப்படுத்தி தவம் செய்வாயாக
என்னுடைய இரண்டாவது விஞ்சை இதுதான் மகனே அடுத்து முன்றாவது விஞ்சையைப் பற்றிக் கூறுகிறேன்
==

கொன்றவர் தானும் ஆண்டு குறும்புகள் மிகவேத் தோன்றி
உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து ஓடி
மற்றதோர் ஆண்டு தன்னில் வருவோம் என்ற ஆகமம்
முத்தளத்தோரும் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை
வி=பூலோகத்தில் மன்னர் ஆட்சி நடந்துக் கொண்டிருக்கும் போது கலிமன்னனால் துன்பம் துயரம் அதிகமாக ஏற்பட்டு
அந்த நேரத்தில் துலுக்கன் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவன் நாட்டைப்பிடிக்க வந்து பிடிக்க முடியாமல் திரும்பிச் செல்வான்
அது நடந்து முடிந்த மறு ஆண்டு வைகுண்ட அவதாரம் வருவோம் என்று கூறிய ஆகமச் செய்தியைப் போல்
மூன்று லோகத்தில் உள்ளவர்களும் காணும் படியாக நடக்கும் மூன்றாம் விஞ்சையைப் பற்றிக் கூறினார்
==
நல்ல மகனே நாலாம் விஞ்சை கேளு
வல்ல நடு ஞான வாய்த்த வைகுண்ட மது
வி=எனக்குப் பிள்ளையாக பிறந்த என் மகனே வைகுண்டரே நான்காம் விஞ்சையைப் பற்றிக் கூறுகின்றேன் கேட்பாயாக
வல்லமையான சக்தியுடைய நீதி நேர்மையான மிகவும் சிறப்பு வாய்ந்த பூலோக வைகுண்ட லோகம் ஒன்று வருகின்றது
==
பிறந்து கொண்டிருக்கும் எனவும் புதிய நச்சேத்திரத்தில்
அறந்தழைக்க நன்றாய் அது குதிக்கும் என்று சொல்லி
மாழுவது மாண்டு மனது உகந்ததே முழிக்கும்
வி=தரமமுகமாக தர்ம சிந்தனையுள்ள மக்கள் வாழ்வதற்கு தோன்றப் போகின்றது புதிய ஓர் வாழ் நட்சத்திரம் தோன்றி
தர்மம் தலை காக்கும் என்பது போல அறம் செய்தவர்கள் மட்டும் தப்பித்துக் கொள்வார்கள் மற்றவர்கள் எல்லாம்
அதர்மம் செய்தவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தர்மம் செய்தவர்கள் எல்லாம் சந்தோசமாகக் காணப்படுவார்கள்
==
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டு கொள்ளும்
ஒருநெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளும்
வி=பாவம் செய்து கலியில் மூழ்கி போகின்றவர்களை அகற்றிவிட்டு ஆன்ம விழிப்போடு இருந்தவர்கள் தர்மயுகத்தைக் காண்பார்கள்
முதலாம் நடுதீர்ப்பு நாங்கள் வழங்கும் போது நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் இருக்கும்
==

இருநெல் எடுத்துடைக்க நாடு தாங்காது
மலைகள் அதிர்ந்து விடும் வானம் இடிந்துவிழும்
தலை நட்சேத்திரமும் தான்உதிரும் ஆலங்காய்போல்
என்று நாலாம் விஞ்சை இது தானே என் மகனே
வி=கலிமக்களை அழிக்க இரண்டாவது தாங்கள் செய்யும் காரியத்தை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது
இறைவனுடைய கோபத்திற்கு ஆளாகி மலைகள் நடுங்கும் படி நில நடுக்கம் உண்டாகும் வானத்தில் ஆயற்கை மாற்றம் காணப்படும்
நவக்கிரகங்களுக்கு அதிபதியாகிய சூரியன் வெப்பத்தை அதிகமாக வெளிபடுத்தும் ஆலங்காய் போல் உதிர்ந்து மக்கள் அழிவார்கள்
இயற்கை மாற்றங்களால் மிகப் பெரிய அழிவு உண்டாகும் இதுதான் என்னுடைய நான்காம் விஞ்சை மகனே
==
கனமாகக் கேளு காரணத்தின் நல விளக்கை
சத்தம் ஒன்று ஆனதிலே தன் இதுவெல்லாம் ஆகுமென்று
சித்தமுடனே செப்பி இரு என் மகனே
வி=நான் கூறும் விஞ்சைகளைக் கவனமாகக் கேட்பாயாக ஏன் இதுபோன்று நடக்கும் என்ற காரணத்தை விளக்கிக் கூறுகின்றேன்
பூமி வெடிக்கும் ஒசைபோல் ஒரு சத்தம் உண்டாகும் மிகப்பெரிய அபாயச் செய்தி ஆகும் அப்போது தான் நான் சொல்வது நடக்கும்
நான் சொல்கின்ற இந்த செய்திகளை எல்லாம் என் மக்களுக்கும் கலியுகத்தின் முடிவையும் தர்மயுகம் தோன்றுவதையும் சொல்மகனே
==
ஆயிரத்தெட்டு அதில் வாழும் தேவருக்கு
வாயிதமாய் விஞ்சை வகுப்பேன் கேள் என் மகனே
வி=வைகுண்டர் அவதாரம் எடுத்த ஆயிரத்து எட்டாம் வருடம் பூமியில் வாழும் காவல் காக்கும் சிறு தெய்வங்களுக்கு
பூலோகத்தில் காவல் தெய்வங்களாக இருக்கின்ற தெய்வார் களுக்கு சத்திய வாக்காக விஞ்சை போல் கூறுகின்றேன் கேள் மகனே
==
நாட்டுக் குடைய நாராயணர் தானும்
ஆட்டுக் கொடை பூசை அனுப்போலும் வேண்டாம் என்று
வி=பூலோக மக்களை காப்பாற்றி பூலோக மக்களை ஆட்சி செய்கின்ற நாராயணாராகிய நான் கூறுகின்றேன்
ஆடு கிடா வெட்டி பலி கொடுத்து நடத்தப்படுகின்ற கோவில் கொடை பூஜைகள் அணு அளவு கூட வேண்டாம் என்றும்
==

சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்க
தொல்லுலகில் யார் ஏக்கார் பார்ப்போம் என்று சொல்லிடு நீ
தூறான பேய்களுக்குச் சொல்லும் முறை கேளு
வி=உறுதியாகச் சொல்லிவிடு தர்மகாரியங்கள் மூலம் தர்மயுகம் தோன்ற சிறைவாசம் போல் உள்ளத்தில் ஒரே நினைவாய் நான் இருக்க
இந்த பழமை வாய்ந்த பூலோகத்தில் யாராவது என்னை மீறி பழமை வழியில் நடந்தால் பாழாகி போவார் என்று சொல்லிவிடு
தூர் தேவதைகளான பேய், பிசாசுகளுக்கூ நான் கூறும் உபதேசங்களை முறைப்படுத்திக் கூறுகின்றேன் கேள்
==
வாறான நாராணர் தான் வாய்த்த தர்மமே நினைத்து
கவிழ்ந்து சிறை இருக்குங் காரணத்தால் லோகமதில்
ஊர்ந்தி திரியும் உயிர்ப் பிராணி யாதொன்றையும்
வி=பூலோகத்திற்கு தர்மயுக ஆட்சி செய்ய வருகின்ற நாராயணர் தான் நினைத்த படி தர்மத்தை நிலை நாட்ட நினைத்து
தவநிலையில் சிறைவாசம் போல் பொறுமையாக இருக்கின்ற காரணத்தால் பூலோகத்தில் உள்ள மக்கள்
ஊர்ந்து திரிகின்ற உயிரினங்களை பலி கொடுக்கிறோம் என்கிற பெயரில் உயிர்வதைச் செய்யக் கூடாது
==
இரத்தவெறி தீபம் தூபம் இலைப்பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதென
தர்மம் நினைத்துத் தவசிருக்க நாரணரும்
வி=இரத்த நரபலிபூஜை செய்யவோ சாம்பிராணி பூகைக்காட்டி பூஜை செய்யவோ இலை மரப்பட்டைகள் கொண்டும் ஓமம் செய்யக்கூடாது
சிறிதளவு கூட உயிர்பலி கொடுக்கும் பாவச் செயல்கள் நான் கண்டு கொள்ளும்படி நடக்கக் கூடாது எனவும்
தர்ம காரியங்கள் மட்டுமே நிலையானது என்று மனதில் ஒரே நினைவாக நாராயணரை நோக்கி தியானம் செய்ய வேண்டும்
==
உற்பனமாய் அறிந்தோர் ஒதுங்கி இருங்கோ எனவே
வீணப் பசாது அறிய விளம்பியிரு என்மகனே
வி=உள்ளத்தில் உண்மையை அறிந்து கொண்டவர்கள் தீமையான வழிபாட்டு முறைகளில் இருந்து விலகி இருங்கள் எனவும்
எந்த பயனும் இல்லாமல் இருக்கின்ற பிசாசுக்கு உண்மை தெரியும் படி சொல்லி விடு என் மகனே
==

நாணம் அறியாமல் நன்றி கெட்ட நீசகுலம்
மட்டை எடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
வி=நீதி நேர்மை என்பது சற்றும் இல்லாமல் நம்பிக்கை விசுவாசம் இல்லாத நீச இன மக்கள் எல்லோரும்
நீ யார் என்பதை உணராமல் மட்டையால் அடிப்பார்கள்
மண் கட்டிகளாலும் கல் கொண்டும் எரிவார்கள்
==
சட்டம் அசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்ற கலிச் சக்கரத்தில்
வி=யார் எதை செய்தாலும் உன்னுடைய தன்மையில் இருந்து மாறாதே உன் உயிருக்கே ஆபத்து வந்தாலும்
நாட்டைக் கெடுத்து கொண்டிருக்கின்ற கலியன் வாழும் பூமியில் சுற்றி சுற்றி வரும் பரிசோதனைகளில் வீழ்ந்து விடாதே
==
ஒட்டைக் கலத்தினும் துயின்ற இரும்பதிலும்
முழியாதே என் மகனே மும்முதற்கு நாயகனே
வி=ஓட்டைப் பானையில் போட்ட தானியத்தைப் போலவும் தண்ணீரில் மூழ்கி போகும் இரும்பைப் போலவும் இல்லாமல்
மனபலம் அள்றவனைப் போல் பலவீனமாகி விடாதே என் அருமை மகனே முப்பொருளுக்கும் நாயகன் ஆனவனே
==
அழிவாகிப் போகும் அன்புக் கெட்ட நீசருடன்
பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே
மெய்யரோடு அன்பு மேவி இரு என்மகனே
வி=பொய்யான வாழ்க்கை வாழ்ந்து தன்னுடைய ஆன்மாவை அழிவுக்குக் கொண்டு செல்கின்ற தர்ம சிந்தனை அற்ற பாவிகளுடன்
பொய்,களவு,கள்ளம்,கபடு,சூது ஆகிய தீயக் குணங்கள் உள்ளவர்களோடு அன்பு பாராட்டி நட்புக் கொள்ள வேண்டாம்
அன்பு,நீதி,நேர்மை, நல்ஒழுக்கம் ஆகிய நற்குணங்கள் உள்ளவர்களோடு அன்பு பொருந்தி இரு என் அருமைமகனே
==
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிக
தர்மம் பெரிதெனவே சாற்றியிரு என்மகனே
வி=வஞ்சகம் நிறைந்த கலியுகத்தை வதை செய்துவிட்டு தர்மயுகத்தை நிலைநாட்ட வந்தேன் என்று தைரியமாகச் சொல்லி
தர்ம சிந்தனை நிறைந்தவர்களாய் வாழ வேண்டும் அவர்களே தர்மயுகம் வாழ்வார்கள் என்று உபதேசம் சொல் என் மகனே
==

இம்முதலே ஆறு இருப்பே தவசு பண்ணி
மும்முதலோன் ஆகி முறை நடத்து என்மகனே
வி=நீ இப்போது முதற்கொண்டு ஆறு வருடங்கள் பூலோகத்தில் இருந்து தவநிலையை மேற்கொள்ள வேண்டும்
தவசக்தியால் முப்பொருளும் ஒரு பொருளாக நீ மாறி அவதார நோக்கத்தை செயல்படுத்து என் மகனே
==
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர் நில்லு என்மகனே
வி=வடகலை,இடகலை.
சுழிமுனை ஆகிய மூன்று நிலைகளை தாண்டி வீடுபேறு அடைந்து முக்தி அடைந்தவனாக
எதிர் காலத்தை நோக்கி நல்ல புத்தியாய் நிமிர்ந்து மிக உயர்ந்த
நிலையில் நிற்க வேண்டும் என் மகனே
==
பரமான பட்டணத்தில் பார்வை கொண்டே நாடி
சிரமானது விரித்துச் சிறைபோல் இருமகனே
வி=பரமனுடைய இடத்தில் இருந்தபடி பர பிரம்மத்தை நினைந்து சிவ ஞானப்பார்வை கொண்டவனாக விளங்கி இரு மகனே
தலைமுடியை சீவி அலங்கரித்துக் கொள்ளாமல் விரித்த தலை முடியுடன் சிறை வாசம் போல் தவம் செய்து இருமகனே
==
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்லேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
வி=உணவாக உட்கொள்ளுவது பசுமாட்டின் பாலும் பச்சரிசியை வேக வைத்து அன்னமாக உன்பது உயர்ந்த தன்மையை உண்டாக்கும்
மெய்.வாய்.கண்.மூக்கு, செவி, ஆகிய ஐம்புலன்களை அடக்கி காத்துக் கொண்டால் அதுவே மிகப்பெரிய தர்மம் ஆகும் அன்பு மகனே
==
சந்தன வாடை சாந்து சவ்வாது புஷ்பம்
எந்தன் திருமகனே எள் அளவும் பாராதே
வி=சந்தனம், சாந்து, சவ்வாது, மலர்கள் ஆகிய நறுமணப் பொருட்களில் வாசனையில் மதி மயங்கி போய் விடாதே
ஆதி நாராயண பரம் பொருளுடன் திருவளர் செல்வனே! நீ எள் அளவு கூட பூஜை காரியங்களுக்கு அடிமைப்பட்டு விடாதே
==
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
வி=கலியுக மக்களுடைய பாவ அழுக்கு நிறைந்த பூமாலைகளும் விளக்கு தீபங்களையும கண்டு மகிழாதபடி கலியுகத்தில்
==

நாடை அழித்து நல்ல யுகமே பிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந் தருவேன் என்மகனே
வி=கலியுனால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை எல்லாம் அழித்து நல்ல யுகமாகிய தர்மயுகம் பிறந்தவுடன் நான் உனக்கு
வார்த்தைகளால் சொல்ல முடியாதபடியும் எண்ண முடியாதபடியும் உள்ள சுக வாழ்க்கையை நான் தருவேன் என் மகனே
==
கண்டாயோ மகனே கரிய பவசு எல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடு பிரகாசமதாய்
வி=பாற்கடலுக்குள் இப்போது நீ காண்கின்றாயே மகனே கரியமால் நாராயணருடைய செல்வச் சிறப்புகளை எல்லாம் இதைப் போன்று தருவேன்
எனவே நீ தவம் மேற்கொண்டு விஞ்சை பெற்று உன்னுடைய பொன்கூடு சடலமானது ஒளி வீச வேண்டும் என்றார்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக