சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
பட்சிக்குக் காயம் பகைத்துக் கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப் போட்டுக் குதித்தோடும் அக்குருவி 
இக்குருவிக் கூடு இவன் மணியம் ஈசுரரே
அக்குருவி ஏகும் அவ்வளவும் இந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கும் ஏறாது
கண்ணிமைக்கும் முன்னே கனஉருட்டுச் செய்திடுவான்
இப்படியே உள்ள இயல்பும் இவன் நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மன வீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தான் ஆகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
---------


உரை
---------
இவ்வுயிருடன் இந்த உடம்பு பகைத்துக் கொண்டு நோய் முற்றும்போது உடம்பாகிய இக்குச்சியைக் கீழே எறிந்து விட்டுப் பட்சியாகிய உயிர் குதித்தோடி விடும். இத்தகைய குருவியாகிய உயிர் வாழும் கூடாகிய உடம்பே இந்த அதிசயப் பிறவியாகிய இவன் உடம்பின் அழகு ஆகும். அந்தக் குருவியாகிய உயிர் இவன் உடம்பை விட்டுப் போகும் நேரத்திற்குள் இவன் செய்கின்ற நீசத்தனம் சிவனுக்குக்கூட பொறுக்க முடியாது. ஒரு நொடிக்குள்ளாகப் பல உருட்டுப் பிரட்டுகளைச் செய்திடுவான். இத்தகைய இயல்புடைய எண்ணம் உள்ளவனாக நீசன் இப்பூவுலகில் பிறவி எடுத்துள்ளான். எனவே இவன் சிறிதுகூட நன்றி உள்ளவனாக இருக்கமாட்டான்" என்று கூறிக் கணக்கை முடித்தான் கணக்கரான சித்திரபுத்திரன்.
---------------------
அய்யா உண்டு
---------------------


*சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
ஆர்க்க எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனல் உடம்பும் 
மண் தண்ணீரோடே வகைக்கு ஆகா பாண்டம் இது
விண்பரந்த வீடு வெளி வீடு ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது பொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கும் ஆகாது
விசை இட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசை இல்லாப் பாவை இது பட்சி ஒன்று ஆடிவரும்
---------


உரை
---------
இரத்தம், எலும்பு, நரம்பு, மூர்க்கத்தனமான தசை, நீர் இவை கலந்த அவன் உடம்பு மண்ணும் தண்ணீரும் சேர்த்துச் செய்யப்பட்ட மண்பாண்டம் போல், கடைசியில் ஒரு வகைக்கும் ஆகாதாகி விடும். இளமை தன்மை நிறைந்து பரந்த வீடாகிய இவ்வுடலின் வெளிப்பகுதியில் பல சிறு வெளி வீடுகள் ஓட்டைகளாகக் காணப்படுகின்றன. ஓட்டை மடமாகிய இவ்வுடலுக்கு ஒன்பது துவாரங்கள் உள்ளன. வீடாகிய இவன் உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் இவன் உடம்பு விறகுக்குக்கூட ஆகாது, சித்திரப்பாவைக் கூத்தில் மகிழ்ச்சி ஊட்டுவதற்கு மிகவும் வேகமாக ஆட்டுவிக்கப்படுகின்ற பெரிய சித்திரபாவைகளில் கேவலமான சக்தியற்ற சித்திரப்பாவையே இந்த உடம்பு. இவ்வுடம்பில் பட்சியாகிய உயிர் ஆடிக் கொண்டிருக்கிறது.
---------------------
அய்யா உண்டு
---------------------

சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
அப்பனும் அம்மை அடங்கி மிகப்பெறாமல்
கொப்புளித்துத் தானாய்க் குருத்து வந்த நீசனுக்குத் 
தத்துவம் தொண்ணூற்று ஆறும் தடிக்குணந்தான்
புத்தி புலன் ஐந்தும் பொய் பூண்ட பூதமுமாய்
சத்துருக்கண் கண் கால் தலையும் வெறும் நீசம்
உற்று உணர்ந்து பாராத உடல் கள்வன்காயம்
மாயக் காயம் அதுக்கு வருசம் ஒருநூறு இருப்பு
தோய நாதத் துளிர் தொகை பத்து நூறு ஆயிரந்தான்
வாழ்வு வந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசை நரம்பு சனித்த முப்பத்தோர் ஆண்டில்
---------


உரை
---------
"ஈசுரரே, இவன் அப்பன் அம்மையின்றித் தானாய்த் தோன்றி வந்த நீசன் ஆவான். இவனுக்குத் தத்துவம் தொண்ணூற்று ஆறும் தடிக் குணத்தால் ஆனவை, இவன் புத்தியும், ஐந்து புலன்களும் பொய்யானவை. இப்பகைவனது பூதம் போன்ற கண்கள், கால்கள், தலை ஆகியவை தீமையானவை. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பாராத உடல் அக்கள்வனது உடலாகும். அவனது மாய உடம்புக்கும், உயிர் மூச்சுக்கும் ஆயுள் நூறு வருடங்களாகும். அவன் சந்ததியை உருவாக்கும் நீர் போன்ற நாதவிந்து துளிகளின் எண்ணிக்கை பல கோடியாம். பதினாலு வயதில் சிற்றின்ப வாழ்வுக்குத் தகுதி உடையவன் ஆவான். பிறந்து முப்பத்து ஒன்றாம் வயதில் தசைகளும் நரம்புகளும் தளர்ச்சி அடைந்துவிடும்.
---------------------
அய்யா உண்டு 


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்க ஈசுரரும்
அப்படியே வந்த இவனுக்கு ஆயுசும் இவன் பலமும் 
கரணம்முதல் நடப்பும் கட்டாக நீ தேர்ந்து
மரணம்முதல் நடப்பும் வகுத்துரை நீ நம் கணக்காய்
அப்போது சித்திரரும் ஆதி அருள் நெஞ்சில் வைத்து
பொற்பாதம் உண்டெனவே புகல்வார் இயல் கணக்கர்
---------

உரை
---------
இப்படிச் சித்திரபுத்திரன் எடுத்துரைக்க, ஈசுரர் அவனை நோக்கி, "சித்திரபுத்திரா, அதிசயமாக வந்த இவன் ஆயுள் பற்றியும், இவன் பலம் பற்றியும், இவன் பிறப்புமுதல் எல்லாக் குணநலன்களையும் தெரிந்தெடுத்து, மரணம்வரை சேர்த்து நமது கணக்காக கூறுவாயாக" என்றார். உடனே, சித்திர புத்திரர் சிவன் அருளை உள்ளத்தில் நிலை நிறுத்தி, எல்லாவற்றுக்கும் காரணம் அவர் பொற்பாதமே என்னும் நம்பிக்கையில் இயல்பாகக் கணக்கர் கூறலானார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
முற்பலியோடு ஆறும் உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்து தோன்றிய இவன்தான் கொடியனையா 
மாயன் நாலு முழமாய் மனுச்சிங்க முகமாய்
உபாயமாய் நம்மை வதைத்தானே என்று சொல்லி
அன்று ஆயன் எடுத்த அளவாய் உருவெடுத்துச்
சென்று அவனுடைய திறத்தை நாம் பார்ப்போம் என்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகாண் இப்புதுமை
ஏகந்தான் ஆளும் ஈசுரரே என்றுரைத்தார்

உரை
---------
இதுவரை பிறந்து, மாயனால் முன்னால் அழிக்கப்பட்ட ஆறு பேரைவிட இவன்தான் மகாக் கொடியவன் ஆவான். 'மாயன் நான்கு முழமுள்ள கிருஷ்ணனாகவும், இராமனாகவும், சிங்க முகத்தனாகவும் அவதாரம் எடுத்துதான் தன்னை அழித்தான்' என்றும், 'முந்திய யுகத்தில் மாயன் எடுத்த உருவ அளவோடு தானும் பிறவி எடுத்து அவன் திறனைப் பார்க்க வேண்டும் ' என்றும் எண்ணிய வேகத்தால் ஆறாவது துண்டம் தானே வெடித்து இந்த அதிசய பிறவி பிறந்தது என்பதை அறிவீராக. எல்லா யுகத்தையும் ஆளும் ஈசுரரே" என்றான்.
---------------------
அய்யா உண்டு


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
அப்போது ஈசுரரை அன்போடுற வணங்கிச்
செப்போடு ஒத்த சித்தரும் செப்பலுற்றார் அம்மானை 
சாத்திரத்தில் உற்ற தன்மை மிகக்கேளும் என்று
சீத்துவமாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன் பிறந்த குறோணி உடல் ஆறு துண்டதிலே
தன் பிறவியோடு ஆறாய்த் தான் பிறந்தான் சூத்திரமாய்
மண்தான் உடம்பு வந்து உதித்தேன் தனக்கு
விண்தான் உடம்பு விலாசக் குருவோடு
சலந்தான் உடம்புக்கு உறுதி தைரியங்கள்
வலந்தான் இளகி வன்னியோடும் கூடிக்
கலந்து திரண்ட கட்டை முண்டம் ஆனதற்குப்
பெலம் தூக்கும் வாயு பிராணன் காணும் ஈசுரரே
---------


உரை
---------
அச்சமயம், கருஞ்சிவப்பு நிறமான சித்திரபுத்திரர் ஈசுரரை அன்போடு விழுந்து வணங்கி, "ஈசுரரே, சாத்திரத்திலுள்ள அத்தன்மை பற்றிச் சரியாகக் கூறுகிறேன், கேட்பீராக. முன்பு பிறந்த குறோணியுடலின் ஆறு துண்டங்களில் ஆறாவது துண்டம் மூலம் சில சூத்திர இலட்சணத்துடன் பிறந்த சூரனைப் பற்றி இனி விளக்குகிறேன். உலகில் பிறந்த இந்த நீசனுக்கு மண்ணும், விண்ணும், நீரும், வினோதமான நிறமும், உறுதியும், தைரியமும், வலிமையும் ஒன்றாக இளகிச் சேர்ந்து அக்கினியோடு கலந்து திரண்ட உடம்பாக அமைந்துள்ளது. பலமாக எதையும் தூக்கிச் செல்லும் சக்தி படைத்த வாயுவே அவனுக்கு உயிர் என்பதை அறிவீராக.
---------------------
அய்யா உண்டு 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக