சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*நீசனை ஈசர் வரவழைத்தல்*****
குத்திப் புறத்தே கோரி வையும் என்றுரைத்து
எத்திசையும் நந்தீசுரனார் கைக்கொடுத்து 
வேண்டி அந்த நந்தி விரைவாய் அவர் நடந்து
ஊன்றி நின்ற நீசனையும் ஒற்றைக் கவையால் கோரி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளீர் எனவே வந்து பொருந்தியதே அம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சாமி முன்பானதிலே சுரண்டி அதனால் இழுத்துக்
கொண்டு வந்து விட்டார் குருநாதர் முன்பதிலே
---------


உரை
---------
பிறகு தம் பக்கத்தில் நின்ற எல்லாத் திசைகளிலும் வெற்றி பெற்ற நந்தியை அழைத்து "நந்தீசுர்ரே, இந்தக் கவையின் மூலம் பூமியில் குத்தி அந்த நீசனைப் பூமியிலிருந்து வெளியே வாரி எடுத்து வையும்" என்று கூறித் தம் கையில் இருந்த கவையை அவர் கையில் கொடுத்தார். அக்கவையை நந்தி பெற்றுக் கொண்டு நீசனை நோக்கி நடந்தார். பூமியில் புதைந்து கிடந்த நீசனை நந்தி கவையினால் ஓரேடியாக வாரி வெளியில் எடுத்தார். வெளியில் எடுத்ததும் அங்கே உருவான பாதாளவெளி பளீரெனப் பொருந்திக் கொண்டது; பூமியிலிருந்து வெடித்து வந்த நீசனை, நந்தீசுரர் தான் கொண்டு வந்திருந்த சுரண்டியினால் இழுத்துக் கொண்டு வந்து ஈசர் முன்னிலையில் நிறுத்தினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


நீசனை ஈசர் வரவழைத்தல்*****
அரனார் இடத்தில் அவர்கள் சிலர்தாம் ஓடிச்
சிரமானது வெளியில் செல்ல வர மாட்டாமல் 
பூமி கலங்கிப் பொறுக்க மிகக்கூடாமல்
சாமி அந்த நீசன்தான் வரவே மாச்சலுண்டு
என்று அந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கு ஏது செய்வோம் என்று
தம்மாலே ஆகும் தந்து தெளிந்து எடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவை ஒன்று உண்டாக்கி
---------


உரை
---------
நீசனை அழைக்க வந்தவர்கள் உள்ளம் பதறிச் சிவனிடத்தில் ஓடிச் சென்று, "ஈசரே, நீசனின் தலையானது வெளியே வரமுடியவில்லை. அவனுடைய அசைவைப் பொறுக்க முடியாமல் பூமி கலக்கம் அடைந்துள்ளது. சுவாமி, அந்த நீசன் இங்கே வருவது முடியாத ஒன்றாகும்" என்று அழைக்கச் சென்ற தூதுவர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட ஈசர் "இனி என்ன செய்வோம்?" என்று சிந்தித்தார். முடிவில் தம்மாலான ஒரு தந்திர முறையைக் கையாளுவதற்கு முடிவு செய்து, தாம் ஆராய்ந்தெடுத்த அந்த முடிவுப்படி கம்மாளன் ஒருவன் மூலம் கவைக்கம்பு ஒன்றை உருவாக்கினார்.
---------------------
அய்யா உண்டு 


*நீசனை ஈசர் வரவழைத்தல்*****
நீசன்தனை அழைக்க நெளிந்து உருண்டு அவனும்
பிரண்டு உருள பிண்டம் பிசை பிசைந்துதான் மலங்க 
மருண்ட விழியால் மாகம் அது கலங்கி
மண்ணை விட்டு உயரே மண்டை வர மாட்டாமல்
விண்ணெல்லாம் மெத்த வெம்மருண்டது அம்மானை
கயிலை கிடுகிடு என்கும் கண்ட பேர்தாம் பதற
அகிலம் கிடுகிடு என்கும் அழைக்க வந்தோர்தாம் பதற
---------



உரை
---------
இவ்வாறு அழைத்ததும் அவன் நெளிந்து, பிரண்டு, உருண்டான்; அதனால், அவன் தசைப்பிண்டம் பிசையப்பட்டு அசைந்தது; மருண்ட விழியோடிருந்த அவன் பார்வையால் ஆகாயமானது கலங்கி இருக்க, அவன் பூமியிலிருந்து வெளி வரமுயன்றான். அவன் தலை வெளியே வரமுடியாமல் தவிக்க வானலோகம் எல்லாம் மருட்சி அடைந்தன. கயிலையும் வைகுண்டமும் "கிடுகிடு" என அசையவும் அதைக் கண்டவர்கள் எல்லாரும் பதறி ஓடினர்.
---------------------
அய்யா உண்டு 


நீசனை ஈசர் வரவழைத்தல்*****
அன்று அவன்தனக்கு ஆள் அனுப்பித் தான் வருத்த
ஆரை விடுவொம் என்று ஆராய்ந்து ஈசுரரும் 
சூரமுள்ள காலன் தூதன் எமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக் குறளிகளையும் முக்கோடிக் கூளிகளையும்
விட்டு அழைத்து வாரும் என்று விடைகொடுத்தார் அம்மானை
துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டான் கீழாகக் குருத்து நின்ற பாதகனை
ஈசர் அழைத்தார் எழுந்திருந்து வா எனவே
---------



உரை
---------
உடனே, அதிசயமாகப் பிறந்த அவனை அழைத்து வர ஆள் அனுப்புவதற்கு நினைத்து யாரை அனுப்புவோம்? என்று ஈசுரர் ஆராய்ந்தார். கடைசியில் வீரத்தன்மையுள்ள எமன், காலன், தூதன் ஆகிய மூவரையும், துஷ்டத்தன்மையுள்ள பூதங்களாகிய கிங்கிலியர்களையும், துர்க்கையையும், மொட்டை குறளிகளையும், மூன்று கோடி கூளிகளையும் அழைத்து, "அந்த நீசனை அழைத்து வாருங்கள்" என்று கூறி விடை கொடுத்தார்.
துர்க்குணத்தையுடைய இவர்கள் எல்லாரும் மிகவும் தைரியமாக நடந்து தலைகீழாக உருவாகி நின்ற அந்தப் பாதக நீசனின் அருகில் சென்று "நீசனே, உன்னை ஈசர் அழைத்தார்; எழுந்து வா" என்று அழைத்தார்கள்.
---------------------
அய்யா உண்டு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக