சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலிச்சியைப் படைத்தல்*****
அப்போது மாநீசன் அரனார்தமை நோக்கி 
ஒப்பம் ஆகாது என்பலத்தில் ஒன்றில் அரைப்பெலமாய் 
அழகில் அதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்க்
குழகிய வாய் அழகாய் குரும்புத் தனத்து அழகாய்
மேனி அழகாய் விழி அழகாய் வீச்சு அழகாய்
யோனி அழகாய் ஒடுங்கும் இடை அழகாய்
கரம் அழகாய் கால் அழகாய் கண் அழகாய் பல் அழகாய்
சரக்கூடு முன் அழகாய் தலைகண்டம் பின்அழகாய்
தொடை அழகாய் விரல் அழகாய் சொல் அழகாய்
நடை அழகாய் வீச்சு அழகாய் நல்ல குழல் அழகாய்
இடை அழகாய் மேனி இறுக்கத்துடன் அழகாய்




உரை
---------
உடனே, மாநீசன் ஈசரை நோக்கி ""ஈசரே, என்னுடைய பலத்துக்குச் சமபலம் இல்லாதவளாகவும், என் பலத்தில் பாதி அளவு பலம் கொண்டவளாகவும், அழகில் என்னைவிட அதிகமானவளாகவும், ஆங்காரத்தில் பாதியாகவும், அழகு பொருந்திய வாயுள்ளவளாகவும், குரும்பலைப் போன்ற அழகுள்ள மார்புடையவளாகவும், உடம்பெல்லாம் அழகாகவும், விழி அழகாகவும், பார்வை அழகாகவும், அழகு பொருந்திய அல்குல் உடையவளாகவும், ஒடுங்கிய அழகான இடையுள்ளவளாகவும், அழகான கால்கள், கைகள், கண்கள் பொருந்தியவளாகவும், பூமாலைக் கூடுபோன்ற பற்களைக் கொண்டவளாகவும், முன்பகுதி, பின்பகுதி, தலை, கண்டம் ஆகியவை அழகுள்ளவளாகவும், அழகான தொடைகளும், விரல்களும், சொல்லும், நடையும், கூந்தலும், பார்வையும், இடையும், உடம்பும் அமைந்தவளாகவும், இறுக்கமான உடம்புடையவளாகவும்,
---------------------
அய்யா உண்டு 



கலிச்சியைப் படைத்தல்*****
ஆனால்தான் தேவர்களே அப்படி நீர் ஒப்பினீரே
தானாய் இருந்து சர்வமதும் உண்டாக்கி வைத்தவர் 
ஆனால் எனதுடைய அளவில் அழகாக
மானாள் ஒருகுழலை வகுக்கச் சொல் பார்ப்போம்காண்
என்று அந்த நீசன் இகழ்ச்சியாய்ச் சொல்லிடவே
அன்று அந்த ஈசர் அவர் அறிந்து ஏதுரைப்பார்
நல்லது நீ கேட்டதுதான் நாம் படைத்துத் தாறோம் என்று
வல்ல பரமேசுரனார் வகை ஏது எனப்பார்த்து
உன்றனுக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ என்றுரைத்தார்

---------


உரை
---------
"வானோரே, தேவர்களே, இப்படி நீங்கள் கூறுகிறீரே. ஈசர் தாம் தாமாக உருவாகி, இந்தச் சர்வ உலகத்தையும் உருவாக்கி வைத்த வல்லமை பெற்றவரானால் எனக்கு மிகவும் பொருத்தமான அளவுள்ளவர்களும், அழகு பொருந்தியவளும், மான் விழி கொண்டவளும் ஆகிய ஒரு பெண்ணை உருவாக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்று அந்த நீசன் மிகுந்த இழிவுடன் சொன்னான். இதைக் கேட்ட ஈசர், "நீசனே, நல்லது சொன்னாய். நீ கேட்ட அத்தகைய பெண்ணை நாம் படைத்துத் தருகிறோம்" என வல்லமை பொருந்திய பரமேசுவரனார் கூறினார். பிறகு நீசனுக்கு ஒரு பெண்ணை உருவாக்கும் வழி என்ன? என்று சிந்தித்து, "நீசனே, உனக்குரிய பலத்தை ஒத்த பெண்ணைப் பிறவி செய்தால் அப்பெண்ணை நீ ஏற்றுக் கொள்ளுவாயா?" என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக