திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
பூதனைச் சகடனோடு பின்னுள்ள அரக்கர் தம்மை
சூதனை எல்லாம் கொன்று சுற்றமாய் மதுரை புக்கி 
நீதமே இல்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
பாதமளந்தோன் துவரயம்பதி செய்து இருந்தார் அன்றே
---------
உரை
---------
தம்மை நோக்கிப் பின்னாலிருந்து தாக்க வந்த பூதன், சகடன், சுதன் போன்ற அரக்கர்கள் எல்லோரையும் கொன்று, தமது சுற்றம் சூழப் படைகளுடன் மதுரை சென்று, சிறிதுகூட நீதி இல்லாத கஞ்சனின் நெஞ்சைப் பிளந்து கொன்றுவிட்டு, பாதத்தால் உலகை அளந்த மாயனாகிய கண்ணபிரான் துவரயம்பதியை உருவாக்கி அங்கே வாழ்ந்து வந்தார்.
---------------------



சராசந்தன் எதிர்த்தல்*****
திரும்பி வரும் வேளையிலே தீரன் சராசந்தன் அவன்
என்றன் மருமகனை இவனேதான் கொன்றது என்று 
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட்டான்
அப்போது மாயன் ஆராய்ந்து தாம்பார்த்து
இப்போது இவனை ஈடு செய்யக் கூடாது
சத்த பெலமல்லோ சராசந்த மன்னனுக்கு
கொற்றவன் வீமனல்லோ கொல்ல வகை உண்டும் என்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தாம்நடந்து
சதுவோடு கூடிச் செகலதுக்குள் ஏகினரே
கடலுக்குள் வந்து கனத்தமதில் இட்டு அவரும்
திடமுடனே மாயன் துவரயம்பதி இருந்தார்
---------
உரை
---------
கண்ணபிரான் தமது நாடு திரும்பி வருகின்ற வேளையில், மிகுந்த வீரனான சராசந்தன கண்ணனை எதிர்த்து, "என்னுடைய மருமகன் கஞ்சனைக் கொன்றது இவனேதான்." என்று சொல்லிக் கண்ணனுடன் போரிட்டான்.
அச்சமயம் கண்ணன் எல்லா நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தார். பிறகு "இந்தச் சராசந்தனுக்கு ஏழு யானைகள் பலம் உண்டு அல்லவா? இவனைக் கொல்ல வேண்டிய விதியுள்ளவன் இவனுக்கு எமனான வீமன் அல்லவா? இப்போது நாம் இவனைக் கொல்லக் கூடாது" என்று எண்ணினார்.
எனவே "இந்த வேளை இவனை விட்டு விடுவோம்" என்று கண்ணன் முடிவு செய்து, தமது கலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆகிய நான்கு படைகளோடும் கூடிக் கடலுக்குள் சென்று மறைந்தார்.
கடலுக்குள் இருந்து துவரயம்பதியில் பலமான கோட்டை அமைத்து அங்கே திடமாக மகிழ்வுடன் இருந்து வந்தார்.
---------------------



கஞ்சனையும் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்ட தேவர் தம்முடைய இடுக்கமும் மாற்றி
மாதா பிதா உடையவன் சிறையும் தான் மாற்றி 
சீரான உக்கிர சேனனையும் ஆளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆன புத்தி சொல்லி மிக
எவரெவர்க்கும் நன்றாய் இரும் என்று சொல்லி அவர்
---------
உரை
---------
இப்படியாகக் கஞ்சனைக் கொன்று தாம் செய்ய வேண்டிய அச்செயலை முடித்து, தம்மைத் தஞ்சமென்று வந்த தேவர்களின் துன்பத்தையும் மாற்றி, தமது தாய் தந்தை ஆகியோரைக் கொடுமையான சிறையிலிருந்து வெளியேற்றி, கஞ்சனுடைய தந்தையான அறிவு பொருந்திய உக்கிரசேனனை மீண்டும் அத்தேசத்தை ஆட்சி புரிய வைத்தார். பிறகு, எல்லோருக்கும் அவரவர்க்குத் தேவையான நல்ல புத்திமதிகளைக் கூறி "எல்லாரிடமும் அன்பாய் இருங்கள்" என்று உபதேசித்துத் தமது நாடு திரும்பினார்.


கஞ்சனை வதைத்துத் துன்பம் அகற்றுதல்*****
மாயனுட போரும் வஞ்சகக் கஞ்சன் போரும்
தேயம் எல்லாம் அதிரச் சென்று எதிர்த்தார் அம்மானை 
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
பாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தாமிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான் பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டு எறிந்தார் திக்கதிலே
---------
உரை
---------
கண்ணனும் கஞ்சனும் செய்த போர்ச் செயல்கள் எல்லாத் தேசங்களும் அதிரும்படியாக இருந்தன. கடைசியில் கண்ணனுடன் கஞ்சனால் போர் புரிய முடியாமல் தள்ளாடிக் கீழே விழுந்தான். கண்ணன் தந்திரமாக அவன் மார்பில் ஏறி இருந்து, கஞ்சனின் குடலையும், கண்ணையும் பிடுங்கி எடுத்து மிகுந்த கோபத்துடன் எல்லாத் திசைகளிலும் எறிந்து அவனைக் கொன்று ஒளித்தார்.
---------------------


கஞ்சனை வதைத்துத் துன்பம் அகற்றுதல்*****
நாட்டமுடன் அசோதை நல்லமகன் வந்தான் என்று
கேட்ட விசளம் கெட்டி எனக் கஞ்சனுந்தான் 
இங்கே நான் சென்று எதிர்த்து அவனைக் கொல்ல என்று
சங்கையற்ற கோடி தத்தும் படை ஏவிக்
கொல்ல விட்ட குஞ்சரமும் குதிரைப் படையும்
எல்லாம் திருமால் இறக்க வைத்தார் அம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயோனிடம் எதிர்த்தான்
---------
உரை
---------
இதை அறிந்த கஞ்சன், "நல்லது, அசோதையின் நல்ல மகன் வகையாக வந்து அகப்பட்டுக் கொண்டான்" என்று மிகுந்த ஆவலுடன், அவனை அங்கேயே எதிர்த்துக் கொல்ல வேண்டுமென நினைத்து, சந்தேகத்துக்கு இடமில்லாத வீரமுள்ள படைகள் ஒரு கோடியும், யானைப்படையும், குதிரைப் படையும் அனுப்பி வைத்தான். எல்லாப் படைகளையும் கண்ணபிரான் அழித்தார்.
இவ்வாறு படைகள் அழிக்கப்பட்டவுடன் வஞ்சகம் புரிந்த கஞ்சன் தானே கண்ணனிடம் எதிர்த்து நின்றான்.
---------------------

கஞ்சனை வதைத்துத் துன்பம் அகற்றுதல்*****
மதுரைதனில் வாழும் மாபாவி கஞ்சனுக்கு
இறுதி வரும்போது ஏது செய்தான் கஞ்சனுமே 
நந்தி இடையன் பாலன் நல்ல ஸ்ரீகிருஷ்ணனை
இந்த இடத்தில் கொண்டுவர ஏவி விட்டான் ஓராளை
கஞ்சனுட தூதன் கண்ணர் ஸ்ரீகிருஷ்ணரை
அஞ்சல் என்று கண்டு அழைத்தார் உம்மைக் கஞ்சன் என்றான்
அந்த விசளம் அறிந்து அரியோன் மிகமகிழ்ந்து
வந்த விசளம் வாய்த்தது என்று எம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தாம்கூட்டி
இடவி என்னும் எக்காளச் சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்சன் அரசாளும் கனமதுரை சென்றனரே
---------
உரை
---------
மதுரையில் வாழ்ந்துவரும் மகாபாவி கஞ்சனுக்கு இறுதிக்காலம் வந்தபோது கஞ்சன் என்ன செய்தான்? என்பதை இனிப் பார்ப்போம்.
பசுக்களை மேய்க்கும் இடையனான ஸ்ரீ கிருஷ்ணரைக் கஞ்சன் தனது தேசத்திற்குக் கொண்டு வரத் திட்டமிட்டான். அதன்படி கஞ்சன் தான் நடத்தும் விருந்திற்கு அழைக்க அக்ரூரரைத் தூது அனுப்பினான். அத்தூதன் ஸ்ரீ கிருஷ்ணரைச் சென்று அடைந்து, கண்ணனை நோக்கி, "கண்ணா, நீவிர் எதற்கும் அஞ்சாத வீரன் என்று அறிந்து, உமக்கு விருந்து வைப்பதற்காகக் கஞ்சன் அழைத்தான். எனவே, எங்கள் தேசம் வருவீராக" என்று அழைத்தான்.
அந்தக் காரியத்தை அறிந்த கண்ணன் அகம் மகிழ்ச்சியுற்று, இந்தப் பூலோகத்தில் பிறப்பு எடுத்த காரியம் பலன் கொடுக்கப் போகிறது என்று எண்ணி, தம்மோடு எதிர்க்கின்றவரைக் கூண்டோடு அழிப்பதற்காகச் சிலரை அழைத்துச் சென்றார். அவர்கள், 'இடவி' என்னும் ஊதுகுழல் சத்தத்துடனும், யானைகள், குதிரைகள், பெண்களின் குரவை ஒலி இவற்றுடனும் கஞ்சன் அரசாளுகின்ற பெருமை பொருந்திய மதுரை சென்று அடைந்தனர்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக