திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

இராம அவதாரத்தின் முன் இரகசியங்கள்*****
அப்போது ராமராக அய்யா திருமாலை
இப்போது படைக்க ஈசுரனார் சம்மதிக்க 
படைக்கும் பொழுதில் பரமசிவனாரை
நடக்கும் திருமால் நாதனைப் பார்த்து ஏதுரைப்பார்
அவ்வுலகில் என்னை அதிக தசரதற்கு
இவ்வுலகு விட்டு அங்கு என்னைப் பிறவி செய்ய
வந்த விபரம் வகைவகையாய் ஈசுரரே
என்றனுக்குத்தான் அமைத்து என்னை அனுப்பும் என்றார்
மாயன் அது கேட்க மறையோன் அகம் மகிழ்ந்து
தூயவரும் அங்கே சொல்லுகிறார் அம்மானை
பரலோகம் என்னும் பைம்பொன் கயிலையதில்
சரலோகம் தன்னில்தான் இருந்த மாமுனிவர்
துருவாச மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாசமாய் இருந்து விசாரம் இட்டார் அம்மானை ...
---------
உரை
---------
அப்போது, சுகசீல மாமுனி துருவாசரைப் பார்த்து 'வாரும் துருவாச மாமுனியே, நான் சொல்வதைக் கேளும்.
நீரும் நானும் சேர்ந்து பூவுலகத்தில் போயிருந்து, நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, உமக்குப் பிறக்கும் ஆண் குழந்தையாகிய தலைவனுக்கு என் பெண் குழந்தையைச் சம்பந்தம் பேசி முடித்து, நாட்டை அரசாண்டு உம்முடைய உறவு மூலம் உதவி பெற வேண்டும்' என்று கூறினார்.
அதற்குத் துருவாசரும் சம்மதித்து இருவரும் ஓமம் வளர்த்து என்னை நினைத்து உருவெற்றித் தவம் செய்கின்றனர். மாயவரே, இதை அறிந்து கொள்ளுவீராக" என்றார் ஈசர்.
---------------------


*தேவர்கள் வேண்டுகோள்*****
... வாசத் தசரதரும் வந்து தினகரனும்
மகவாசை யுற்று மகாபரனைத் தான் நோக்கி 
அகப் பாசமற்று அதிக தவமிருக்க
நாதன் அறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாதகன் அரக்கன் பத்துத்தலை உள்ளவனைத்
தேவர் துயரமற்ற திருமால் தசரதற்கு
மூவருடன் கூடி உலகமதில் பிறக்க
அரக்கர் குலம் அறவே அம்மை சீதாலட்சுமி
இரக்கம் போலுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகம் மீதில் ஞான சிருஷ்டி சிவமாய்
இப்படியே வேதத்து எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்ற திருமாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத் துணிந்தார்
---------
உரை
---------
இங்கே இப்படியிருக்க, பூவுலகில் தசரதரும், தினகரனும், மனத்தின் ஆசைகளை அறுத்து, குழந்தை பெறும் ஆசையுடன் சிவனை நோக்கித் தவம் இருக்கின்றனர். இதைச் சிவன் அறிந்து சிறந்த வேத நூல்களை ஆராய்ந்தார்.
பத்துத் தலைகள் உள்ள பாதகனான அரக்கன் இராவணனைக் கொன்று, தேவர்களுடைய துயரத்தை மாற்றுவதற்காகத் திருமால் தசரதற்கு மகனாய் மூன்று சகோதரர்களுடன் கூடிப் பூவுலகில் பிறக்க வேண்டும்; அரக்கர்களுடைய குலம் அழிவுறுவதற்காகச் சீதையாக இலட்சுமியை இரக்கத்தன்மையுள்ள தினகரனுக்குப் பெண்குழந்தையாய்ப் பிறக்க வேண்டும்.
இது வேதம் விதித்த விதி, வேதத்தின் எழுத்து விதிப்படி பூவுலகில் சிவஞான சிருஷ்டியைச் சிவமயமாய்ச் சிவன் அமைக்க முடிவு செய்தார்.
உடனே, தசரதருக்கு விருப்பமான திருமாலை அவருக்குக் குழந்தையாய்ப் பிறவி செய்யச் செயல்பட்டார்.
---------------------



*தேவர்கள் வேண்டுகோள்*****
படைக்கும் பொழுதில் பரதேவர் எல்லோரும்
அடைக்கலமே மாயன் அடிமை எனத் தெண்டனிட்டார் 
தெண்டனிட்டுத் தேவர் எல்லாம் செப்புவார் அம்மானை
மண்டலங்கள் எங்கும் மாயமாய் நிறைந்தோனே
எங்களையும் லோகமதில் இப்போது படைப்பீரால்
மங்களமாயுள்ள வடிவம் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந்து ஏவல் செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையும் என்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியேதாம் படைக்க ...
---------
உரை
---------
ஈசர், தேவர்கள் எல்லாரையும் பூவுலகில் படைக்க ஆரம்பித்தபோது தேவர்கள், ஈசரை நோக்கி, "மாயனின் அடிமைகளாகிய எங்களுக்கு அடைக்கலம் தருவீராக" என்று கூறி வணங்கி மீண்டும், "ஈசரே, மண்டலம் எல்லாம் மாயையாக நிறைந்திருப்பவரே, எங்களை இப்போது பூவுலகில் படைத்தால் அழகு பொருந்திய வடிவமும், அதிக பலமும், மாயனுக்கு அடி பணிந்து தொண்டு செய்யும் மனமும் தந்து எங்களை நல்ல முறையாய்ப் படைக்க வேண்டும்" என்றார்.
ஈசர் மகிழ்ச்சியுற்று அப்படியே அவர்களைப் செய்தார்.
---------------------



*மாயன் தன்னுடன் படைக்க வேண்டுபவர் பற்றிக் கூறல்*****
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத் 
தானவரே இப்போது தாம் படைக்க வேணும் என்றார்
ஏவலாய் என்றனுக்கு இப்பிறவி ஆனதிலே
பள்ளி கொண்டு நான் இருந்த பாம்பு ராசன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கும் ஆசனமும்
இம்மூணு பேரும் என்னோடுடன் பிறக்கச்
சம்மூலப் பொருளே தாம் படைக்க வேணும் என்றார்
மாயன் உரைக்க மறையோன் அகம் மகிழ்ந்து
தூயவரும் அந்தப்படியே தெளிந்து இருக்க
---------
உரை
---------
"ஈசுரரே, சர்வத்துக்கும் மூலப்பொருளே, முன்புள்ள முறை போலத் தேவர்களைப் பூவுலகில் எனக்கு ஏவல் புரிவதற்கு வானரங்களாகப் படைப்பீராக.
நான் பள்ளி கொண்டிருக்கும் பாம்பு ராசனையும், வெள்ளி மணி மெத்தையையும், நான் வீற்றிருக்கும் ஆசனத்தையும் எனக்குத் தம்பிகளாகப் படைப்பீராக" என்று மாயன் உரைத்தார்.
இவ்வாறு உரைத்ததைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ந்தார்.
அதைப் போல மாயனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக