திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

*நாராயணர் இரங்கி அபயம் கொடுத்தல்*****
வந்து பிறப்பொம்காண் மாபாரதம் முடிக்க
நந்திக் குலம் வளர நாம் பிறப்போம் கண்டீரே 
சாரமில்லாக் கஞ்சன்தனை வதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரதமும் முடித்து வைப்போம்
துவாபர யுகத்தில் துரியோதனன் முதலாய்த்
தவறாத வம்பன் சராசந்தன் வரையும்
அவ்வுகத்தில் உள்ள உள்ள அநியாயமும் அடக்கி
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவி மிகச்செய்வதற்கும்
அங்கு வந்து தோன்றி ஆயருடன் வளர்வேன்
போங்கோ என்று பூமாதேவியையும் தேவரையும்
சங்குவண்ண மாலோன் தாமே விடைகொடுத்தார்
---------
உரை
---------
"தேவியே, தேவர்களே, இந்தப் பூமியில் மகாபாரத நிகழ்ச்சிகளை முடிக்கவும், சிவகுலம் நீடு வாழ்வதற்காகவும் சீக்கிரமாக நாம் அவதாரம் எடுப்போம், அறிந்து கொள்வீராக. உலக நன்மை செய்யும் எண்ணம் இல்லாத கஞ்சனை அழித்துப் பூமியின் பாரத்தைத் தீர்ப்போம். மகாபாரதப் போரை நடத்தி முடித்து வைப்போம். துவாபரயுகத்தில் துரியோதனன் முதலாய்த் தீமை செய்யத் தவறாத வம்பனான சராசந்தன்வரை அழித்து அந்த யுகத்தின் அநியாயங்களையும் அழித்து. மனச் சுத்தமான உயர்வு பொருந்திய மன்னவர்களுக்கு அன்புடன் அருள் செய்வதற்கும்; உங்களுக்கு அதிகமான உதவிகள் செய்வதற்கும்; பூலோகத்தில் வந்து தோன்றுவேன். அங்கு ஆயர்களுடன் வளர்வேன். எனவே, நீங்கள் மன ஆறுதலுடன் செல்லுங்கள்" என்று கூறிச் சங்கு போன்ற வெள்ளை மனம் படைத்த திருமால் தேவர்களுக்கும், தேவிகளுக்கும் விடை கொடுத்து அனுப்பினார்.



*நாராயணர் இரங்கி அபயம் கொடுத்தல்*****
நாமாது இலட்சுமியும் நன்றாய் அபயமிட
நாராயணர் பதத்தை நாயகியும் தெண்டனிட்டு 
சீரான இலட்சுமியும் செப்பினாள்காண் அம்மானை
என்னைப்போல் பெண் அல்லவோ இவள்தான் இடும் முறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதான் ஆதி ஓலமிட்ட தேவருக்கும்
திடமான பூமாதேவிக்கும் செப்பலுற்றார்
---------
உரை
---------
இவற்றை எல்லாம் கேட்ட சொல்வளம் பொருந்திய பெண்ணாகிய இலட்சுமிதேவி நாராயணர் பாதத்தைப் பணிவோடு வணங்கி, அவர்கள் அபயங்களை எல்லாம், எடுத்துக் கூறலுற்றாள், "என் நாயகரே, இங்கு அபயமிடுபவள் என்னைப் போன்ற பெண் அல்லவா? இவள் இடுகின்ற அபயத்தைக் கேட்டு அவளை அழகு பொருந்தியவரான நீவிர் மனமிரங்கிக் காத்தருளல் வேண்டும் அய்யாவே" என்று இலட்சுமிதேவி கூறினால். ஆதியாகிய மாயன் அபயமிட்ட தேவர்களுக்கும், பூமாதேவிக்கும் ஆறுதல் மொழி கூறலானார்.
---------------------




தேவர்கள் அபயம்*****
ஆயனே எங்கள் ஆதி நாராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா
பாவமாய்க் கஞ்சன் பலநாளாய் எங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி அடைத்த அச்சுதரே என்றுரைத்தார்
வாணன் என்னும் கஞ்சன் மாபாவி ஏதுவினால்
நாணமது கெட்டு நாடு விட்டுப் போறோம்காண்
நரபாலன் என்னும் நன்றி கெட்ட கஞ்சனினால்
வரம்பானது குளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையும் காத்து இரட்சிக்க வேணும் என்று
முக்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமாதேவி புலம்பி முறையமிட
---------
உரை
---------
மக்களை வழி நடத்தும் ஆயனே; எங்கள் ஆதி நாராயணரே, மாயனே, கஞ்சனுடைய வலிமையை மாற்றும் அய்யாவே; கஞ்சன் பல நாள்களாக எங்களை வேலை கொண்டு துன்புறுத்தும் கொடுமைகளை மாற்றும் அய்யாவே; அவனுக்கு வேலை செய்து எங்கள் உடல் முழுவதும் வேதனைப்படுகிறது. அய்யாவே, கடல் பூமியின் மேல் பாயாமல் அடைத்த அசுத்தரே." என்று தேவர்களும் தேவிகளும் அபயமிட்டனர்.
மேலும், "அரக்கனாகிய மாபாவி கஞ்சனுடைய தொல்லையினால் வெட்கம் கெட்டு இந்த நாட்டை விட்டே ஓடி விடுகிறோம்; இதை காண்பீராக.
நரபாலன் என்று கூறுகின்ற நன்றி கெட்ட தன்மையுள்ள கஞ்சனின் கொடுமையால் தன்மையான ஒழுக்கம் கெட்டு மானம் போய் நிற்கிறோமே;
---------------------



தேவர்கள் அபயம்*****
அண்டம் பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ஆனோனே 
ஈசர் கொடுத்த ஏது வரமானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீ அல்லவோ
திடுக்கம் மயக்கம் செய்வதுவும் நீ அல்லவோ
ஆரும் ஒருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண் வளர்ந்து நின்றோனே
எண்ணத் தொலையாத ஏற்ற சொரூபமது
கண் இமைக்கும் முன்னே கனகோடி செய்வோனே
மூவரால் உன் சொரூபம் உள்ளறியக் கூடாமல்
தேவராலும் தெரியாத திருவுருவம் கொள்வோனே
---------
உரை
---------
அண்டமும் பிண்டமும் எல்லாமும் ஆகி நின்றோனே; வெளியே தோன்றும் அத்தனையும் உன் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்பவனே; ஈசர் எந்த வரம் கொடுத்தாலும் அதற்குத் தகுந்த அவதாரம் எடுத்து வெல்லுகின்ற நிறை பொருளாய் நிற்போனே;
நடத்தல் இருத்தல் போன்ற எல்லாச் செயல்களையும் செய்வதும் நீ அல்லவா? அச்சம், மயக்கம் செய்வதும் நீ அல்லவா?
யாராலும் அளவிட முடியாத அளவு பெரிய மலை போலாகி விண்ணளவு வளர்ந்து நின்றவனே; எண்ணிப் பார்க்க முடியாத எந்த உருவத்தையும் ஒரு நொடிக்குள்ளாகப் பல கோடி செய்பவனே; மூவராலும் தேவராலும் உன் உருவ இரகசியத்தை அறிந்து கொள்ள முடியாத வகையில் அரிய உருவத்தை எடுப்போனே; 


தேவர்கள் அபயம்*****
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகி
சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே 
நட்சத்திரமாகி நாள்கிரகம் நீயாகி
இச்சேத்திரமாகி இருக்கின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி இருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி இருப்போனே
இமசூட்சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட்சமான நாராயணப் பொருளே
செல்வத் திருவாய்ச் செவ்வாகி நின்றோனே
கல்வித் தமிழாய்க் கனபொருளாய் நின்றோனே
---------
உரை
---------
சாத்திரங்களும் நீயாகி, சந்திரனும் நீயாகி, சூத்திரமும் நீயாகி, உயிரும் நீயாகி நின்றவனே; நட்சத்திரங்களாகி, நாள்தோறும் தோன்றும் கிரகங்கள் நீயாகி, மக்கள் வாழ்கின்ற இவ்வுலகும் நீயாகி இருக்கும் இறைவனே;
உண்மையை அறிந்தவனுக்கு மெய்ப்பொருளாய்க் காட்சியளித்துக் கொண்டிருப்பானே; பொய் பேசிக் கொண்டிருப்பவனுக்குப் பொய்த் தன்மையாய் அவனுடனும் பொருந்தி இருந்து விளையாடுவோனே;
எமனுக்கும் சூட்சுமமாய் இருந்து எங்கும் நிறைந்திருப்பவனே; எல்லா மந்திரத்திலும் வரும் 'நம' என்னும் சொல்லின் சூட்சுமப் பொருளான நாராயணப் பொருளே; செல்வத் தலைவி இலட்சுமியைப் பெற்றுச் செம்மைப் பொருளாகி நின்றோனே; கல்விக்கு முதலான தமிழ் மொழி போன்று உயர்வான பொருளாக நின்றவனே;
---------------------


தேவர்கள் அபயம்*****
வாரி வரம்பு விட்டு வையகத்தில் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே 
மானம் வரம்பு மகிமை கெட்டுப் போகாமல்
ஊனம் இல்லாதே உறுபொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறுமே புசிப்பு
தாவமுடன் ஈயுகின்ற தர்ம திறவோனே
வலியோர் எளியோர்க்கும் மண் ஊரும் செந்துகட்கும்
கலி தீர ஞாயம் கண்டு உரைக்கும் பெம்மானே
சீவசெந்துக்கு எல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமுமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்கு கருணாகரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
---------
உரை
---------
கடல் தனது எல்லையை விட்டுத் தாண்டிப் பூமியினுள் புகுந்து விடாமல் தடுத்து நிறுத்தக் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனே; தன்மான ஒழுக்கத்தின் உயர்வுத் தன்மை கெட்டுப் போகாமலும், எந்த விதக் குறைவு இல்லாமலும் இருப்பதற்குரிய பொருளாய் நின்றவனே;
உயிருள்ள செந்துகளுக்கெல்லாம் நாள்தோறும் உணவும், உறைவிடமும் கொடுத்தருளும் தருமத்தன்மை உள்ளோனே; வலியவர்க்கும், எளியவர்க்கும், மண்ணில் ஊர்ந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கும், கலித்தன்மை தீருகின்ற ஞாய முறைகளை எடுத்துரைக்கும் இறைவனே; எல்லாச் சீவசெந்துகளுக்கும் உயிராய் நின்றவனே, நரகலோகமும், மோட்ச லோகமுமாகி நின்றவனே; அறிவுக் கண்ணாகி, மூச்சாகி, கருணாகரராகி, மண்ணாகி, நான்கு வேதங்களாகி நின்றவனே.
---------------------


தேவர்கள் அபயம்*****
அச்சுதரை நினையான் அய்யாவைத் தான் நினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான் 
வள்ளிக்கும் தேவ மாலவருக்கும் ஆகாமல்
கொள்ளிக்குப் பிள்ளை இல்லாக் கொடும் பாவி என்று சொல்லி
எவ்வியே அட்டை வெவ்வாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புசிக்கும்
என்று நீர் எழுதி இராச்சியங்கள் தாம் அறிய
அன்று பறை சாற்றி அருளி வைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமட என்று வீழாமல்
தானவனே உன் விரலால் தாங்கி வைத்த அச்சுத்தரே
---------
உரை
---------
(ஏழு பிறவியிலும் திருமாலை நினையாதிருப்பவன் படும் துன்பம்)
... ... அத்தகையோன் திருமாலாகிய அய்யாவையும் நினைக்க மாட்டான்; கற்பு மனதுடைய காமாட்சிதேவியையும் நினைக்க மாட்டான்; வள்ளிக்கும் தெய்வத் தன்மையுள்ள திருமாலுக்கும் ஆகாமல் இருக்கின்ற காரணத்தால், அவனை 'கொள்ளிக்குப் பிள்ளை இல்லாத கொடும்பாவி இவன் என்று சொல்லி அட்டைகளும் பயங்கரமான வாயையுடைய முதலைகளும் எட்டிப்பிடித்துக் கவ்வி இழுத்துச் சென்று கடித்துத் தின்னும்" என எழுதி இவ்வுலக மக்கள் அறிவதற்காக அன்று பறை சாற்றி வெளியிட்டு அருளிய மாயவரே, வானமானது பூமியின் மேலே விழாதவண்ணம் உமது விரலால் தாங்கிப் பிடித்திருக்கின்ற இறைவனே, தேவனே;
---------------------



தேவர்கள் அபயம்*****
வானிழுத்து மாண்டு மறலி உயிர் கொள்கையிலே
நாய் நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத் 
தேயமது காணத் திசை நாலும் பிய்த்து எறிந்து
காக்கை விடக்கைக் கண்டயிடம் கொண்டு தின்ன
போக்கடித்து பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொண்டு வரச்சே வலிய தண்டால்தான் அடித்து
குறளி மிகக்காட்டி கொடும் பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நன்மறலி தள்ளிடவே
இரை நமக்கு என்று எட்டிப் புழு பிடித்து
---------
உரை
---------
(ஏழு பிறவியிலும் திருமாலை நினையாதிருப்பவன் படும் துன்பம்)
இறக்கும் தருவாயில் வானலோகத்தில் உள்ள எமன் உயிர் எடுக்கும்போது அவன் உடம்பை 'இவன் நாதியற்றவன்' என்று நினைத்து நாய்களும் நரிகளும் சென்று இவ்வுலக மக்கள் காணும்படி நான்கு திசைகளிலும், பிடுங்கிப் பிடுங்கி எறியும். அவனது தசைகளைக் காக்கைகள் பிடுங்கிக் கண்ட கண்ட இடங்களிலே கொண்டு சென்று தின்று விட்டு, எஞ்சி உள்ளதை எறிந்து விடும். அத்தகைய பொல்லாதவனுடைய உயிரை எமன் கொண்டு போகின்றபொழுது மிகப்பெரிய தண்டாயுதத்தால் அடித்துப் பயமுறுத்தி அக்கொடும்பாவியின் உயிரை நரகக் குழியிலே தள்ளி விடுவான். நரகக் குழியிலே கிடக்கின்ற புழுக்கள் எல்லாம் நமக்கு நல்ல இரை கிடைத்தது என எட்டிப் பிடித்து உண்ணும்.' ... ...
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக