திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

*இராவணனுக்குக் குறுமுனிவன் சாபம்*****
... இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கும் இவ்வரங்கள்
அப்படியே துருவாச மாமுனியும் சுகசீல 
மாமுனியும் நம்மை வருந்தி நிஷ்டை செய்கிறார்
ஓமுனிக்கு நல்ல ஒழுங்கு செய்ய வேணுமல்லோ
அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்க அரிதே
எல்லாம் இது கண்டு இப்பிறவி செய்யும் என்றார்
நல்லதுகாண் என்று நல்ல திருஇலட்சுமியை
வன்னமுள்ள பெட்டகத்தில் வைத்தார்காண் ஈசுரரும்
---------
உரை
---------
மாயவனே, குறுமுனிக்குக் கொடுத்திருக்கும் இவ்வரங்களைப் பற்றி இப்பொழுது அறிவாய். அதைப் போலத் துருவாசமாமுனியும், சுகசீலமாமுனியும் நம்மை நினைத்துத் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த முனிகளுக்குத் தேவையான முறைமமைகளைச் செய்ய வேண்டும் அல்லவா? மேலும், தேவர்கள் இடுகின்ற அபய ஒலி பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது" என்று ஈசர் மாயவரிடம் கூறி முடித்தார். இதைக் கேட்ட மாயன் ஈசரிடம் "இனி என்னைப் பிறவி செய்யும்" என்று கூறி அமைதியுற்றார்.
உடனே ஈசர், "மாயவனே, உனது சம்மதம் நல்ல காரியம்" என்று சொல்லி இலட்சுமியை அழகான பல நிறமுள்ள பெட்டகத்தினுள் வைத்தார்.
---------------------



*இராவணனுக்குக் குறுமுனிவன் சாபம்*****
... ஆண்டு பன்னிரண்டாய் அவன் தவசு நின்றனனே
நின்ற தவத்தின் நிலைமை அறிந்து உமையாள் 
அன்றைக்கு வந்து அருளினாள் ஆயிழையும்
உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத்
துரைத்தனமாய் இத்தனையும் சொல்லி விடைகொடுத்தேன் ...
---------
உரை
---------
இவ்வாறு சிவனை நோக்கிப் பன்னிரண்டு ஆண்டுகளாக அவன் தவம் செய்து வந்தான். உமையாள் அந்த முனிவன் நின்ற தவத்தின் நிலைமையை அறிந்தாள். அன்றைக்கே அவள் என்னிடம் வந்து எல்லாம் கூறினாள்.
எல்லா விபரங்களும் அறிந்து துன்பமுற்றுத் தவத்தில் நின்ற முனிவனுக்குப் 'பெரியொன் என்னும் முறையில் நான் எல்லா வரங்களும் கொடுத்து விடை கொடுத்து அனுப்பினேன்.
---------------------



*இராவணனுக்குக் குறுமுனிவன் சாபம்*****
... மாலை மிகப்போற்றி வாய்த்த தவம் நிற்கையிலே
காலெடுத்து ஒற்றினையே கள்ளா உன்றனுக்கு 
இந்தத் தவசுதனில் ஈசுரைத்தாம் நினைந்து
உன்றந்தனை அறுக்க ஒருராம பாணமது
வந்து பிறந்திடவும் மாயன் அதைத் தானெடுத்து
துருவாச மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில்
பிறந்து இருந்திடவும் பின்னும் சுகசீல
மாமுனியும் தினகரனாய் வந்து பிறந்திடவும்
வேமுனிக்கு இலட்சுமியும் வில்லோடு உதித்திடவும்
இராம பணத்தோடே இராமர் தசரதற்கு
முன் ஆகமத்தின்படியே உலகில் உதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன்நல்ல தலை பத்து இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தைச் சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுப்புழுத்து
சஞ்சலப் பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி ...
---------
உரை
---------
குறுமுனி இராவணனை நோக்கி, 'அரக்கனே, திருமாலை நினைத்துத் துதித்துத் தவம் செய்து கொண்டிருக்கும்போது என்னை உன் காலால் மிதித்து விட்டாயே! கள்ளனே, இனி உன்னை அழிக்கத் தவம் செய்யப் போகின்றேன்.
அத்தவத்தின் மூலம்
1. இராமபாணம் ஒன்று பிறந்திடவும், மாயன் அதை எடுத்து உன்னை அழித்திடவும்,
2. துருவாச முனிவன் தசரதராயும் சுகசீல மாமுனி தினகரனாயும் பூமியில் பிறந்திடவும்,
3. வேமுனி தினகரனுக்கு மகளாக இலட்சுமி வில்லோடு பிறந்திடவும்
4. இராமர் இராமபாணத்தோடு முன் ஆகமத்தின்படி தசரதர் மகனாய்ப் பூலோகத்தில் உதித்திடவும்,
5. இராமபாணத்தாலும், சீதையின் கற்பு நெறியாலும், உன் பத்துத் தலைகள் இழக்கவும், சேனை, தளம் இழக்கவும்,
6. வானரங்கள் வந்து உன் நாட்டைச் சுட்டு அழிக்கவும்,
7. உன் சடலம் முழுவதும் உழுத்துப் புழுத்துத் துன்பப்பட்டு மாண்டு போகவும் சேய்வேன் என்று கூறிக் குறுமுனி தவம் இருந்தான்.
---------------------


*இராவணனுக்குக் குறுமுனிவன் சாபம்*****
அல்லாமல் பின்னும் அரக்கன் ராவணன் தனக்குக்
கொல்லாமல் கொல்ல ஒரு குறுமுனிவன் சாபமுண்டு 
அரக்கன் வரம்வேண்டி அவன்போகும் அவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத்து அரக்கனுந்தான்
பவுசு மதமாய்ப் படுவது அறியாமல்
முனியை அவன் காலதனால் ஒற்றினான் மாபாவி
அநியாய பாவி அரக்கன் அவன்தனக்குக்
கூறினான் மாமுனியும் கொள்ளை கொண்ட சாபமது
தூறின சாபத் துல்லியத்தை நீர் கேளும் ...
---------
உரை
---------
ஈசர், மாயனை நோக்கி, "மேலும், அரக்கனாகிய இராவணனுக்கு அவனைக் கொல்லாமல் கொல்லுவதற்காகக் குறுமுனிவன் கொடுத்த சாபமாகிய இன்னொரு நிகழ்ச்சியும் உண்டு. அதைப் பற்றியும் விளக்கிக் கூறுகிறேன்.
இராவணன் வரம் பெறுவதற்காகப் போகின்ற சமயம், அவ்வழியில் குறுமுனி சிவனை நினைந்துருகித் தவத்தில் இருந்தான்.
அம்முனியின் தவநிலையை அறியாமல் பத்துத்தலை அரக்கன் செலவச் செழிப்பின் ஆணவத்தால் தான் அடையப்போகும் துன்பத்தை அறியாமல் அந்த முனிவனைத் தனது காலினால் மிதித்து விட்டான். உடனே, குறுமுனி, பாவியான இராவணனை நோக்கிப் பல சாபங்கள் கொடுத்தான்.
குறுமுனியின் அந்தச் சாபங்களைப் பற்றிக் கூறுகிறேன், கேள்.
---------------------


இராம அவதாரத்தின் முன் இரகசியங்கள்*****
.. வாரும் துருவாச மாமுனியே நீர் கேளும்
நீரும் நானும் கூடி நீணிலத்தில் போயிருந்து 
நானும் ஒரு பெண்மதலை நல்ல மகாவாகத்
தானும் ஓர் ஆண்மதலை தலைவன்தனை வாங்கிச்
சம்பந்தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்பந்தமான உதவி பெற வேணும் என்று
இருபேரும் இருந்து எனை நினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓமமது வளர்க்க
இந்தப்படியே இவர்கள் இரு மாமுனியும்
என்றன்தனை நோக்கி இருந்தார் தவசு கண்டீர் ...
---------
உரை
---------
அப்போது, சுகசீல மாமுனி துருவாசரைப் பார்த்து 'வாரும் துருவாச மாமுனியே, நான் சொல்வதைக் கேளும்.
நீரும் நானும் சேர்ந்து பூவுலகத்தில் போயிருந்து, நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, உமக்குப் பிறக்கும் ஆண் குழந்தையாகிய தலைவனுக்கு என் பெண் குழந்தையைச் சம்பந்தம் பேசி முடித்து, நாட்டை அரசாண்டு உம்முடைய உறவு மூலம் உதவி பெற வேண்டும்' என்று கூறினார்.
அதற்குத் துருவாசரும் சம்மதித்து இருவரும் ஓமம் வளர்த்து என்னை நினைத்து உருவெற்றித் தவம் செய்கின்றனர். மாயவரே, இதை அறிந்து கொள்ளுவீராக" என்றார் ஈசர்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக