திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

சாத்திர வேதம் சமயம் வழுவாமல்
சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்கள் ஒருகோடி பெற்று 
இனிதாக நாளும் இறவாது இருக்க என்றும்
சந்திர சூரியர்கள் தட்டு மிகமாறாமல்
இந்திரரும் தேவர்களும் ரிஷிநிலை மாறாமல்
தானதவங்கள் தப்பி மிகப் போகாமல்
ஈனம் இல்லாமல் இதுவும் தெய்வநீதம் எல்லாம்
மானம் நிறுத்தி வை என்றார் ஈசுரரும்
---------
உரை
---------
...ஆறு சாத்திரங்கள், நான்கு வேதங்கள், சமயக் கருத்துக்கள் ஆகியவை வழுவாமல் சூத்திரப் பொருளாக மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்திடவும், அவர்கள் எல்லோரும் செழிப்புப் பெற்று அதிகமான சந்ததியனரைப் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்வில் திளைத்து "இறவாநிலை" பெற்றிடவும் வழி செய்.
மேலும் சந்திரனும், சூரியனும் எந்தவித இடையூறு செய்யாமலும் இந்திரனும், தேவர்களும் ரிஷித்தன்மை வழுவாமலும், தானங்களும் தவங்களும் அங்கு அழியாது இருந்திடவும், எந்தவிதக் குறையும் இல்லாமல் தெய்வநீதம் முதல் எல்லாவற்றையும் மானத்தோடு தெச்சணாபூமியில் நிலை நிறுத்தி வை" என்றார் ஈசுரர்.
---------------------


நினைத்தோர்க்கு உறுதி நினைவில் அறிவு தோன்றி
எனைத் தோத்திரங்கள் இளகாமல் வை என்றார்
பன்றியோடே கடுவாய் பாவித்து இருந்திடவும் 
அன்றிலோடே குயிலும் அன்புற்று இருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற்று இருந்திடவும்
பசுவும் புலியும் ஒரு பக்கம் நீர் உண்டிடவும்
கசுவும் கரைபுரளக் கரும்பு முத்து ஈன்றிடவும்...
---------
உரை
---------
இன்னும், ஈசர் தொடர்ந்து கூறியதாவது:
"என்னை நினைத்தாருக்கு அவருடைய உறுதியான நினைவின் மூலம் அறிவு தோன்றி என்னை மனம் மாறாதவண்ணம் துதி பாடகி செய்.
மேலும், பன்றியும் - கடுவாயும், அன்றிலும் - குயிலும், கீரியும் - பாம்பும் ஒரே இனத்தவர் போன்று அன்புற்றுக் கொஞ்சி வாழ்ந்திடவும், கடல், குளத்தைப் போல் ஒரு கட்டுப்பாட்டில் நின்றிடவும், அங்கு உள்ள மக்கள் விதைத்த விதைகள் பதினாறு மடங்காக பெருகிடவும், நாயும் - முயலும் ஒற்றுமையான பண்போடு வாழ்ந்திடவும், பசுவும் - புலியும், சேர்ந்து ஓரிடத்தில் நீர் பருகிடவும்,
குளங்களில் நீர் நிறைந்து கரைபுரண்டோடிடவும், முற்றிய கரும்புகள் முத்து ஈன்றிடவும்,...
---------------------


.நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமாதேவிதனை வருத்து
வருணன்தனை அழை நீ மாதம் மும்மாரி பெய்ய
கருணைக்குடை விரிக்க கங்குல்தனை அழை நீ
வாசியது பூவாய் வழங்க வரவழை நீ
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
குருபூசை செய்யும் கூட்டமதில் சிவமாய்த்
திருவீற்று இருக்கச் செய்திடு நீ கோலமது
நித்திராதேவி நித்தம் அந்தப் பூமியிலே
மத்தீபமாய்க் காக்க வை என்றார் ஈசுரரும்...
---------
உரை
---------
..."மாயவனே, இது மிகவும் நல்ல காரியம்தான். சோழ நாட்டைக் காப்பதற்காக வல்லவனாகிய நீ பூமாதேவியை வரவழை; உழைத்த களைப்புத் தீரக் கருணை புரிந்து இளைப்பாறுதல் கொடுக்கும் இரவினை வரவழை; காற்று பூப்போன்று மெதுவாய் வீசிட வாயு பகவானை வரவழை; தோஷம் புரிகின்ற எமனை அங்குச் செல்லாதவாறு விலக்கி விடு; குருபூசை செய்கின்றவர் கூட்டத்தில் சிவக்கோலத்தில் இலட்சுமிதேவியை எழுந்தருள வை; என்றென்றும் அப்பூமியில் வாழும் மக்களுக்குத் தேவையான அளவு தூக்கம் கொடுத்துக் காக்க நித்திராதேவிக்குக் கட்டளை இடு." என்றார் ஈசர்.
---------------------


வாடிவந்த பச்சினுக்கு வாளால் அவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் தொடை அரிந்து ஈந்தவன்காண்
ஆறில் ஒருகடமை அவன் வேண்டிற்றான் எனவே 
மாறி அவன் புவியோர் மனதில் கௌவைகள் இல்லை
கோவில் சிவாலயங்கள் குளம் கூபம் வாவிகளும்
சேவித்து அனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளும் சீமையிலே
நீதமாய்த் தெய்வநிலை நிறுத்த வேணும் அய்யா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கண்டிருந்த ஈசர் கரியமாலோடு உரைப்பார்...
---------
உரை
---------
"தன் உயிரைக் காக்க வேண்டி வாட்டத்துடன் ஓடி வந்த புறாவினுக்குப் பதிலாகச் சோழன் தனது தொடையிலிருந்த மாமிசத்தை வாளால் அரிந்து அதைத் தேடி வந்த வேடனுக்குச் ஈந்ததை நீர் அறிவீராக. வருவாயில் ஆறில் ஒரு பகுதி மட்டும் வரியாகச் சோழன் பெற்றுக் கொண்டான். எனவே, அந்நாட்டு மக்கள் மனதில் சோழனை எதிர்க்கும் எந்தவிதப் பழி உணர்வும் இல்லை.
சோழமன்னன், சிவாலயங்கள், கோவில்கள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், ஆகியவற்றை தினந்தோறும் பாதுகாத்து வருவதோடு மக்களுக்குத் தானமும் தருமமும் செய்த வருகின்றான்.
எனவே, சோழன் அரசாளும் தெச்சணாபூமியில் தெய்வ நீதி முறையினை நிலை நிறுத்தி வைக்க வேண்டும், அய்யாவே," என்று தேவர்கள் எல்லாரும் அடி பணிந்து சிவனைத் தொழுதனர்.
இதைக் கண்டா ஈசர், கருமை நிறம் பொருந்திய திருமாலோடு பேசலுற்றார்,....
---------------------


..நாரணரும் வேதாவும் நாடிப்பொரும் போரில்
காரணரே நீரும் கனல்கம்பம் ஆனோரே
ஆலமுது அருந்தி அரவையும் மிகஉரித்துக் 
கோலத் திருக்கழுத்தில் கோவையாய் இட்டோரே
ஆனைதனை உரித்து அங்கமதிலே புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோவேங்கிரியில் குடியிருக்கும் கோவே
தானே இருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அரிய திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளும் அய்யா...
---------
உரை
---------
...விஷ்ணுவும், பிரம்மாவும், உமது ஆதி முடி காணச் செய்த போரில் எல்லாவற்றிற்கும் காரணமான நீர் அவர்களுக்கு அக்கினி ஜோதியாகக் காட்சியளித்தவரே. ஆழ கால விசத்தை அருந்தித் திருப்பாற்கடலில் தோன்றிய பாம்பை அடக்கிக் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டவரே.
ஆணவ யானையின் தோலை உரித்து உமது உடம்பிலே அணிந்து கொன்டு, மானினையும் மழு ஆயுதத்தையும் கையில் ஏந்தியபடி இருக்கின்ற, சிவனே, கயிலையங்கிரியில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறைவனே, தாமே உருவாகியிருக்கும் தவமானவரே, எல்லாவற்றுக்கும் காரணமாகவும் ஆதியாகவும் நின்ற அருமையான முதல்வரே, ஜோதி மயமானவரே, சோழ நாட்டில் நடக்கும் தரும நீதி நெறியினைக் கேட்டருள்வீராக.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக