திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

தெச்சணத்தின் பெருமை ***********
நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டு அங்கிருந்து 
ஆண்டு ஆயிரத்து அ என்னும் இலக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரை ஊர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்து இருக்கும் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமை கேள் அம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்கும் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீசுவரரும் அமர்ந்திருக்கும் தெச்சணமே ....
---------
உரை
---------
உலகத்தோர் ஆச்சரியப்படத்தக்க வகையில் திருச்செந்தூர்க் கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணரும், 1008 ஆம் ஆண்டு, மாசி மாதம், நல்ல முகூர்த்த நாளில், சான்றோர்கள் வளர்ந்து வருகின்ற தாமரையூராகிய நல்ல பதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்றுபேரும் சோதி வடிவாக (தாணுமாலயனாக) உறைந்து இருக்கும் தெச்சணாபூமியில் வந்திருந்தார். அந்தத் தெச்சணாபூமியின் பெருமைகளை இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உறைந்து இருப்பதும் இந்தத் தெச்சணாபூமி ஆகும். தேவர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதுவும் இப்பூமியாகும். வேதபி புரோகிதர்கள் புகழோடு விளங்கி இருந்ததுவும், நாதாந்த வேதத்தை நாடுபவர்கள் வாழ்ந்ததுவும். அகத்தியர் ஈசுரரின் கட்டளைப்படி அமர்ந்து இருந்ததுவும்.......
---------------------

**நூல் பயன்***********
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா 
பழித்தோர் நகைத்தோர் பதில் எதிரியாய்ப் பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியும் இக்கதையை மகாவிருப்பத்தோடு இளகித்
தளம் அளந்தோனை நாடிதான் கேட்பாளாமாகில்
என் ஆணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன் ஆணை
உன் ஆணை மதலை உடனே கிடைக்குமடா
கூட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாராகில்
திட்டமது சொன்னோம் தீரும் திரு ஆணை
---------
உரை
---------
இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை வாசித்தும், (அல்லது) வாசிப்பதைக் கேட்டு மகிழ்ந்தும், அதில் திளைத்தும் இருக்கும் ஆன்மீக அன்பர்கள், எல்லோரும் விரும்புகின்ற சாகாநிலையை அடைவர்.
இந்நூலின் கருத்துக்களைப் பழித்தவர்களும், நகைத்தவர்களும், எதிர் மறையான பதில்களைக் கூறியவர்களும், இந்நூல் படிக்காத தகாது என்று ஒதுக்கியவர்களும் வறுமையுற்று நரக நிலையில் அமிழ்ந்து விடுவார்.
இக்கதையை அதிக விருப்பத்தோடு மனம் இளகி, நாராயணரை நாடிய வண்ணம் மலடியான ஒரு பெண் கேட்பாளானால் அவளுக்கு உடனடியாகக் குழந்தை உண்டாகும். என்மேல் ஆணை; பார்வதியாள்மேல் ஆணை; ஏகாபரனாகிய ஈசுவரன்மேல் ஆணை; உன்மேல் ஆணை.
குட்டநோயைக் கொண்டவர்களே, ஒரே நிலையான மனத்துடன் இக்கதையை கேட்பீரானால், உங்கள் குட்டநோய் குணம் அடையும்; இலட்சுமிமேல் ஆணையாக நிச்சயமாகக் கூறுகின்றோம்.
---------------------



சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகைத்திறந்து
தாற்பரியமாகச் சாற்றினார் எம்பெருமாள் 
மகனே இவ்வாய் மொழியை வகுக்கும் காண்டம் அதுக்கு
உகமோர் அறிய ஊனு நீமுதல் காப்பாய்
அதன்மேல் நடப்பு உன்னுள்ளே அகமிருந்து
சரிசனமாய் நான் வகுப்பேன்தான் எழுது காண்டமதை
நான் உரைக்க நீ எழுதி நாடு பதினாலு அறிய
யான் உரைக்க நீ எழுதி காண்போர்கள் தங்கள் முன்னே
---------
உரை
---------
.....மெதுவாய் என்னை எழுப்பி தாம் வந்த காரணம் பற்றிக் கூறலானார்.
காப்புப் பகுதியில் ஏரணியில் எனும் ஒரு சீரை தெளிவாக வெளிப்படுத்தி விளக்கமாக உரைத்தார் "மகனே, எனது வாய்மொழியை தொகுக்கும் காண்டங்களுக்கு, பாதினான்கு உலகங்களும் அறியும்படியாக, காப்புப் பகுதியில் முதல் சீராக நீ எழுது அதன் பிறகு வருகின்ற காரியங்களை உன் மனம் புரியும்படியாக நான் உனக்குச் சரிசமமாக அமர்ந்திருந்து வகுத்துத் தருவேன். அதையும் நீ எழுது இவ்வாறு நான் உரைக்கின்றவற்றை நீ எழுதி, பதினான்கு உலகங்களும் அறிய அன்பர்களுக்குத் தெரியப்படுத்த" என்று அருளினார்.
---------------------


*வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்*****
தோத்திரம் என்று சுவாமிதமைத் தொழுது
இராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே 
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டனைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக் கியான இலக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து.....
---------
உரை
---------
ஒரு நாள் இறைத்துதி செய்துவிட்டு, இரவுபொழுதில் இன்பமாக அறிதுயில் கொண்டிருந்தேன். அவ்வேளையில் , கொல்லம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நாளில் ஞானம் வெளிப்படும் சிறந்த முகூர்த்தத்தில், வைகுண்டநாதன் என் அருகில் அமைதியாக வந்திருந்து....
---------------------



.தர்மயுகம் ஆக்கித் தாராணியை ஆளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
சாகாது இருக்கும் தர்ம அன்புள்ளோர் முன் 
வாகாகத் தர்ம அம்மானைதான் வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பித்தவத்துக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே.
---------
உரை
---------
இக்கலியுகத்தை அழித்துத் தருமயுகமாக்கி, இப்பூவுலகை ஆட்சி புரிய கலியுகத்தில் வைகுண்டர் வந்த கதையைச் சாகாநிலை பெற்றிருக்கும் தரும சிந்தனையுள்ள அன்புள்ளோர் முன்னிலையில் வெளிப்படுத்த ஒழுங்கான முறையில் தரும ஞாயமுள்ள இந்த அம்மானையை நாராயணர் வகுத்தார்.
இதை வகுத்த நாராயணருக்கும், என் தாய், தந்தையருக்கும், இதைத் தொகுத்துக் கூறிய வைகுண்டராகிய என் குருவுக்கும், என் வணக்கங்கள்.


இறைதுதி****************
எம்பிரானான இறையோன் அருள் புரிய
தம்பிரான் சொல்லத் தமியோன் எழுதுகிறேன் 
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்
பழுது ஒன்றும் வாராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாய் வா இக்கதைக்கு
தோசம் அகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் கர்ம சஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கௌவை வினைதீர
வாரும் அடியேன் மனதில் குடிகொளவே.......
---------
உரை
---------
எம்பிரானாகிய இறையோன் அருள் புரிய தம்பிரானாகிய அய்யா திருவாய் மலர்ந்தருள அடியேன் இந்நூலை எழுதுவேன் என்பது முழுவதும் ஈசருடைய அருள் செயலே ஆகும். இந்த எழுத்துக்களில் எவ்வித குறையும் வராமல் பரமேசுவரி காப்பாளாக. ஈசனுடைய மகனே, முருகா இக்கதை இயல்புடன் அமைய துணை இருப்பீராக.
குண்டலனி சக்திக்கு குருவாக இருக்கின்ற கணபதியே கால மாற்றத்தை நிகழ்த்துகின்ற கிரகத்தின் தீய வினைகள் முன் வினையினால் உருவாகும் மனச் சஞ்சலங்கள் ஆகிய கடினமான வினைகள் என்னைச் சூழ்ந்து வராதவண்ணம் காத்தருள்வீராக. அடியேன் பணியில் பழிச்சொல் எழாத வகையில் காத்தருள என் உள்ளத்தில் குடி கொள்ள வருவீராக.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக