திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

*இராவணன் வதம்*****
அல்லாமல் உன்றனுக்கு அங்கம் ஒரு நூறு
எல்லோரும் வெல்லா ஈசன் கயிலையதும் 
எடுத்த பெலமும் உண்டே ஈரைந்து சென்னி உண்டே
கடுத்த பெலமுள்ள காலாட்கள் போர உண்டே
இந்திரனை வென்ற ஏற்ற புதல்வன் உண்டே
சந்திரனும் சூரியனும் தன்னிடத்தில் உண்டு அல்லவோ
மூணு லோகத்தாரும் உன்றனுக்கு உண்டு அல்லவோ
ஆணவங்கள் பேசினையே அம்பு ஒன்றில் மாண்டதென்ன
---------
உரை
---------
மேலும், இராவணா, நூறு மனிதர்கள்கூட அசைக்க முடியாத பலம் பொருந்திய கயிலை மலையையே எடுத்த பலமும் உனக்கு உண்டே? உனக்குப் பத்துப் பலம் பொருந்திய தலைகள் உள்ளனவே? மிகுந்த பலம் வாய்ந்த காலாட்படைகளும், நிரம்ப உள்ளனவே? இந்திரனையே வெற்றி கொண்ட வீரப்புதல்வன் உன்னிடம் உள்ளானே? உன் ஏவலாளாகச் சந்திரனும், சூரியனும், மூன்றுலோகத்தவர்களும் உள்ளனர் அல்லவா? இத்தனையும் வைத்துக் கொண்டு ஆணவமான மொழிகளைப் பேசினாயே? கடைசியில் நீ ஓர் அம்பினால் இறந்துவிட்டாயே? அதற்குக் காரணத்தை நீ சிந்தித்துப் பார்த்தாயா?
---------------------


*இராவணன் வதம்*****
மற்று நிகர் ஒவ்வா மாயத் திருநெடுமால்
அரக்கன் உயிர்தான் அங்கும் இங்கும் நிற்கையிலே 
இரக்கமுடன் நின்று அங்கு ஏதுரைத்தார் அம்மானை
கேளாய் நீ இராவணா கிரேதா யுகந்தனிலே
பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய்
உன்இடுக்கம் கண்டு உன்புதல்வன் நான் ஆகி
தன்அடுக்கல் வந்து உன்னைச் சங்காரம் செய்தேன்நான்
மகனாய்ப் பிறந்து வதைத்தேன் நான் பாரறிய
பகை நான் என்று பண்பு மிகக்கூற
அப்போது நீயும் அன்று உரைத்த வார்த்தையினால்
இப்போது உன் குலங்கள் எல்லாம் கருவறுத்து
நாணம் இல்லாத உன்இலங்கை நகரைத் தீயால் அழித்து
பாணம் ஒன்றால் உன்னைப் பட எய்தேன் கண்டாயே
அல்லாமல் உன்றனுக்கு அங்கம் ஒரு நூறு
எல்லோரும் வெல்லா ஈசன் கயிலையதும்
---------
உரை
---------
யாருக்கும் நிகரில்லாத மாயத் தன்மையுள்ள திருமாலான இராமன், இராவணன் உயிர் ஊசலாடும் சமயத்தில், இரக்கம் கொண்டு இராவணனிடம் முன் நிகழ்ச்சிகளை உரைக்கலுற்றார்.
"இராவணா, கேள், நீ கிரேதாயுகத்தில் எந்தப் பயனுமில்லா இரணியனாய் உலகில் பிறந்தாய். உன் கொடுமைகளைக் கண்டு உன்னை அழிக்க நான் உனக்குப் புதல்வனாகப் பிறந்தேன்.
உன் அருகில் வந்து நரசிம்ம அவதாரம் மூலம் உன்னை அழித்தேன். இந்த உலகறிய உனக்கு மகனாய்ப் பிறந்து உன்னையே வதைத்தேன்.
ஆனால், நீ நான் கொன்றதை ஏற்றுக் கொள்ளாமல் நீ கூறிய தகாத மொழியினால் இராவணனாய்ப் பிறந்தாய்.
இப்போது உன் இலங்கை நகரைத் தீயினால் அழித்து இராமபானத்தால் உன்னை அழியும்படி செய்தேன். மேலும், இராவணா, நூறு மனிதர்கள்கூட அசைக்க முடியாத பலம் பொருந்திய கயிலை மலையையே
---------------------



இராவணன் வதம்*****
அரக்கன் அவன் பேசும் அநியாயம்தான் கேட்டு
இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே 
படைக்கு இவர் நடக்கப் பார்த்து விபீஷணனும்
அடைக்கலம் என்று அவர் பாதம் சேர்ந்தான்காண்
சேர்ந்தவுடனே திருமால் மனம் மகிழ்ந்து
ஓர்ந்த படையோடு உடன் யுத்தம் செய்திடவே
அரக்கன் படையும் அச்சுனார்தம் படையும்
இரக்கம் இல்லாமல் இருவர் படை பொருதார்
படை பொருதி வெல்லாமல் பத்துதலை உள்ளோனும்
கடகரியும் தோற்றுக் கை இழந்தான் அம்மானை
பத்துத் தலையும் பார்மீதில் அற்றுவிழ ...
---------
உரை
---------
அனுமன் மூலம் இராவணன் பேசிய ஆணவப் பேச்சுக்களைக் கேட்டு, இரக்கக்குணம் பொருந்திய இராமன் இராவணனை அழிக்க வீறு கொண்டு எழுந்தார். படைகளைத் திரட்டினார்; அத்தருணத்தில் விபீஷணன் இராமரின் பாதங்களில் அடைக்கலம் புகுந்தான். இப்படியாக ஆராய்ந்து எடுத்துச் சேர்த்த படைகளுடன் உடனடியாகப் போர் புரியப் புறப்பட்டார்.
இராவணன் படையும், இராமர் படையும், இரக்கத்தன்மையே இல்லாமல் மோதின. இராவணன் படைகள் வெற்றியைக் காண முடியாமல் வீழ்ந்தன.
இராவணன் பட்டத்து யானையோடு எல்லாவற்றையும் இழந்த நிலையில் நின்றான். இராமபானத்தால் இராவணனின் பத்துத்தலைகளும் அறுத்து எறியப்பட்டன.
---------------------



*அனுமன் தூது*****
வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும்
அனுமன்தனை ஏவி ஆன மலை எடுத்துத் 
துனுமன் உடனேதான் தோயக் கடலதுக்குள்
கோட்டையதும் இட்டுக் குக்குளித்து அங்கு ஏகி
ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்
பூட்டமுடன் வாயு புத்திரனும் தான் மகிழ்ந்து
நாட்டமுடன் இலங்கை நாடாளும் பாதகனைக்
கண்டு முடுகிக் கருத்தழியத் தான் பேசி
கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி
மால் கொடுத்த ஆழி மாது கையிலே கொடுத்து
வால் கொண்டு வீசி வனங்காவும் தானழித்து
கேதார மாமலையும் கீர்த்தியுடன் குதித்து
பாதாரம் என்று பணிந்தானே இராமரையும்
---------
உரை
---------
ஆனால், வாயுதேவன் மகன் அனுமனைத் தனியாக அருகே அழைத்து, "வானரத் தலைவரில் ஒருவனான அனுமனே, நீ உடனே மலைகளைத் தாண்டிக் கடல் நீருக்குள், பாதுகாப்பு அமைத்துக் கொண்டு குக்குளித்துச் சென்று சீதையைத் தேடுவாயாக." என்று கூறி அவனைத் தனி ஒருவனாக அனுப்பினார்.
மன நிறைவுடன் வாயுபுத்திரனாகிய அனுமன் மகிழ்ச்சியடைந்து மிகவும் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று, இலங்காபுரியை ஆளுகின்ற இராவணனைக் கண்டு, அவனுடைய கொடுமையான ஆணவ எண்ணங்களை இல்லாமல் ஆக்கும் அளவில் எதிர்த்துப் பேசி, இலங்கையைத் தீக்கொழுத்திக் குப்பை மேடாக்கி விட்டு, இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழி மோதிரத்தைச் சீதையின் கையில் கொடுத்தான். பிறகு, தன்னுடைய வால் கொண்டு வீசிக் காடுகளைத் தீயால் அழித்து, அங்குள்ள நகரங்கள் மலைகள் மேல் தாவிக் குதித்து எல்லாரும் புகழும்வண்ணம் திரும்பி வந்து, "இராமனுடைய பாதங்களே சரணம்" என்று பணிந்து, எல்லாச் செய்திகளையும் இராமனிடம் சொன்னான்.
---------------------



*நடை*****
சுக்ரீவனும் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும்
ஓக்க ஒருமுகமாய் உடையோன் பதமடைய 
கெருடன் மிகமறித்துக் கேலி செய்த ஞாயமதும்
திருடன் கொடிய தீபாவி ராவணனும்
அம்மைதனைக் கொண்டு அவன் கோட்டை ஆனதிலே
செம்மை இல்லாப் பாவி சிறையில் வைத்த ஞாயமதும்
எல்லாம் அறிந்து எம்பெருமாள் கோபமுற்று
வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தாம் திரட்டி
எழுபது வெள்ளம் ஏற்ற வானரங்களையும்
முழுதும் வருத்தி ஒப்பமிட்டு எம்பெருமாள்
விசுவ கம்மாளனையும் விரைவாய் அருகழைத்து
---------
உரை
---------
அப்போது, சுக்ரீவன், சாம்புவன் போன்ற உண்மையான வீரர்கள் பலரும் ஒற்றுமையாகச் சேர்ந்து இராமனுடைய பாதங்களைச் சரணடைந்து அங்கே தங்கினர். சீதையைத் தேடும்போது கருடன் அவர்களைக் கண்டு, இராவணனைத் தான் தடுத்தும் கேளாமல், அவன் கேலி செய்துவிட்டுச் சென்றதையும், கொடிய பாவியாகிய திருடன் இராவணன் சீதையைக் கொண்டு சென்று அவனது கோட்டையில் சிறை வைத்துள்ள அநியாயங்களையும், இவற்றை எல்லாம் நினைத்து இராமன் மிகவும் கோபம் கொண்டு இராவணனை மிகுந்த படைகளுடன் சென்று வெற்றி கொள்ளத் திருவுளம் கொண்டார்.
எழுபது வெள்ளம் வானரங்கள் முழுவதுக்கும் அழைப்பு அனுப்பி வரவழைத்தார். பிறகு அன்பு கொண்ட கம்மாளனையும் அருகே அழைத்து, எல்லாரையும் எல்லாத் திசைகளுக்கும் சீதையைத் தேட அனுப்பினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக