திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

இராவணன் வரம் வேண்டல்*****
... அப்போது ஈசுரரை அரக்கன் அவன் வணங்கி
இப்போது ஈசுரரே யான் கேட்கும் இவ்வரங்கள் 
தருவோம் எனவே தந்திமுகன்தன் பேரில்
உருவாய் எனக்கு உறுதி செப்பும் என்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தாம் கொடுக்க ...
---------
உரை
---------
அப்பொழுது இராவணன் ஈசுரரை வணங்கி, "ஈசுரரே, முதலில் நான் கேட்கின்ற வரங்களை எல்லாம் தருவோம் என்று கணபதி மேல் உறுதியான முறையில் ஆணையிட்டுத் தர வேண்டும்" என்று உரைதான்,
இராவணன் கூறியபடியே ஈசர் ஆணையிட்டுக் கொடுத்தார்.
---------------------


இராவணன் வரம் வேண்டல்*****
... பத்துத் தலையான பாவி அரக்கன் அவன்
மற்று நிகர் ஒவ்வா வாய்த்த பரமேசுரரை 
வணங்கி வரம் வேண்ட மனதில் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சி நின்றான் அம்மானை
தவத்தருமை கண்டு தலைபத்து அரக்கனுக்குச்
சிவத்தலைவர் ஆனோர் செப்புவார் அம்மானை
காது இரண்டுபத்து கண் இருபது உள்ளோனே
ஏது வரம் வேணும் இப்போது சொல்லு என்றார் ...
---------
உரை
---------
பத்துத் தலைகள் பொருந்திய பாவத் தன்மையுடைய இராவணன், யாருக்கும் ஒப்பில்லாத பரமேசுரரை வணங்கித் தவம் செய்து, வரம் பெற மனதில் எண்ணமுற்று, அவர் பதத்தைக் காணத் தவத்தில் நின்றான்.
இராவணனது தவத்தின் அருமையைக் கண்டு, தலைவரான சிவன் இராவணனை நோக்கி, "இருபது காதுகளும், இருபது கண்களும் பெற்றவனே, உனக்கு என்ன வரங்கள் வேண்டும்?, அவற்றைக் கேள்." என்றார்.
---------------------


**V. திரேதா யுகம் - (இராவணன் பாடு)*****
கவுசலமாய் அரக்கன் தம்பி என வகுத்தார்
கூடியிருந்து அரக்கன் குறி அறிந்து 
வேடிக்கையாக வீற்றிரு என்றுதான் உரைத்தார்
---------
உரை
---------
"விபீஷணா, நீ இராவணனின் தம்பியாகப் பிறந்து, என்னைப் பற்றிய ஒரே எண்ணத்துடன் அவனுடன் கூடியிருந்து, இராவணனின் நோக்கங்கள் எல்லாம் அறிந்து, அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாயாக", என்று விபீஷணனுக்கு உத்தரவிட்டார்
---------------------


V. திரேதா யுகம் - (இராவணன் பாடு)*****
மாயன் உரைக்க மறையோன் அகம் மகிழ்ந்து
வாய்ச் சிரசு பத்தாய் வகுத்தார்காண் அம்மானை 
கூடப் பிறக்கக் குண்டில் இட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாகப் பிறவி செய்தார்
அப்போது படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வைதனை உருட்டி
விபீஷணன் என்னும் மெய்யுருவம் தான் ஆக்கிக் ...
---------
உரை
---------
இவ்வாறு மாயன் கூறவும், ஈசுரர் அகம் மகிழ்ந்து, வாயையுடைய தலைகள் பத்தும் பொருந்தி இருக்க இராவணனைப் படைத்தார்.
முன்பு ஒரு குண்டில் விட்ட குறோணியின் இரத்தத்தின் உதவியால் அரக்கக் குலத்தைப் பிறவி செய்தார். இவர்களும் இராவணனுடன் பிறந்தனர்.
இவ்வாறு ஈசர் படைத்துக் கொண்டிருக்கும்போது மாயன் உண்மைத் தன்மையான தம் பொன் மேனியிலுள்ள வியர்வை அழுக்கை உருட்டி அதன் மூலம் விபீஷணன் என்னும் ஓர் உண்மைத் தொண்டனை உருவாக்கினார்.
பிறகு அவனைப் பார்த்து,
---------------------



V. திரேதா யுகம் - (இராவணன் பாடு)*****
அருகே இருந்த அச்சுதரும் ஏதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப்பு ஆனதிலே 
என்னோடே பேசி எதிர்த்தான்காண் ஈசுரரே
ஆனதால் இப்பிறப்பு அரக்கன் இவன் தனக்கு
ஈனம் இல்லாச் சிரசு ஈரைந்தாகப் படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங்களோடே தாம் படையும் என்றுரைத்தார் ...
---------
உரை
---------
அச்சமயம், மாயன் ஈசுரரிடம், "ஈசுரரே, முற்பிறப்பில் இவன் என் வீரத்தைக் குறையாகப் பேசி (பத்து மலைகளினாலான நகத்தாலேயே கொன்றதாகக் குறை கூறி) எதிர்த்தான். தாங்கள் இதை அறிவீராக. எனவே, இந்தப் பிறப்பில் அரக்கனான இவனுக்கு எந்தவிதக் குறையும் இல்லாத பத்துத் தலைகளும், இருபது கண்களும், இருபது காதுகளும் வேறு தேவையான தத்துவ உறுப்புக்களோடும் இணைத்து இவனைப் படைப்பீராக," என்று கூறினார்.
---------------------


*V. திரேதா யுகம் - (இராவணன் பாடு)*****
அன்றேதான் ஈசர் அருளுவார் ஆயருக்கு
முன்னே குறோணி முடிந்த துண்டம் ஆறதிலே 
இன்னும் மூணு துண்டம் இருக்குதுகாண் மாயவனே
என்று ஈசர் சொல்ல எல்லோரும்தாம் கூடி
அன்று இருந்த துண்டம் அதிலே ஒரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்கொடுக்கும் அவ்வளவில் ...
---------
உரை
---------
உடனே ஈசர் மாயனிடம், "மாயனே, முன்பு குறோணியை அழிக்க வெட்டிய ஆறு துண்டங்களில் இன்னும் மூன்று துண்டங்கள் மீதியுள்ளன அறிவாயாக" என்று ஈசர் அவருக்கு நினைவுபடுத்தக் கூறினார்.
இதைக் கேட்டு எல்லோரும் கூடி,கூடி, அப்பொழுது எஞ்சி இருந்த மூன்று துண்டங்களில் ஒன்றை எடுத்து உருவமாய் உருவாக்கி உயிர் கொடுக்க முனைந்தனர்.
---------------------



V. திரேதா யுகம் - (இராவணன் பாடு)*****
அந்த ஊர்ப்பதியில் அலங்கரித்த நாள் கழித்து
ஆதி கயிலை அரனார் இடத்தில வந்து 
வேதியரும் நன்றாய் விளம்புவார் அம்மானை
சூரபற்பன் என்னும் சூரக் குலங்களைத் துணித்து
வீரம் பறைந்ததனால் மேலும் அந்த யுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்ற இராக்கதனைக்
கொன்று கிரேதா குவலயமும் நான் அழித்து
முன்னு கரந்திருந்த ஆறுமுக வேசம்
செந்தூரு வாரித்திரை மடக்கில் வாழ்ந்தீர் என்று
வந்தோம்காண் அய்யா மலர்ப்பாதம் தெண்டனிட
என்றேதான் மாயன் ஈசரோடு ஈதுரைக்க ...
---------
உரை
---------
மாயன் திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருந்த சில நாள்களுக்குப் பிறகு, பிரம்மனுடன் பழமையான கயிலைக்குரிய சிவனைச் சந்தித்தார்.
அவரிடம் "ஈசுரரே, நான் சூரபத்மன் என்னும் அரக்கனையும் அவன் குலங்களையும் அழித்தேன், அச்சூரபத்மன் என் வீரத்தை இழிவாகக் கூறிய காரணத்தால் அதே யுகத்தில் இரணியனாகப் பிறவி செய்தேன். அவ்வாறு தோன்றிய அவனையும் அழித்து விட்டுக் கிரேதாயுகத்தையும் அழித்தேன். பிறகு நான் ஆறுமுக வேசத்துடன் திருச்செந்தூர்க் கடல் திரை மடங்கி வரும் பகுதியில் வாழ்ந்து வந்தேன், இப்போது, நீவிரும் திருச்செந்தூர்க் கடல் திரை மடங்கி வரும் பகுதியில் வாழ்ந்து வருவதை அறிந்து, தங்கள் மலர் போன்ற பாதங்களை வணங்க வந்தோம், அய்யா" என்று மாயன் ஈசுரரிடம் உரைத்தார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக