திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கௌரவர் பஞ்சவர் வரலாறு*****
உருப்பிணி முதலாய் ஒத்து வந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார் 
கஞ்சன் இடுக்கம் கழித்து அந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மை செய்யப் பார்த்தார்காண் அம்மானை
---------
உரை
---------
உருப்பிணிமுதல் தம்மை ஆசையுடன் காதலித்து ஏற்றுக் கொண்ட பெண்கள்வரை எல்லாரையும் தாலி கட்டித் திருமணம் முடித்துக் கடலுக்குள் இருக்கும் துவரயம்பதியில் சென்று வாழ்ந்து வந்தார்.
கஞ்சனுடைய துன்புறுத்தலை ஒழித்துக் கட்டிய எல்லாவற்றுக்கும் காரணராகிய கிருஷ்ணர், இனிப் பஞ்சபாண்டவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணமுற்றார்.
---------------------



விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய் அருந்தி முறைமாதரை அணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி அறுத்து அசுரரையும் 
உபாயமுடனே கொலை அடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயமதிலே மணம் முகித்துத் துவராபதியில் வீற்றிருந்தார்
---------
உரை
---------
ஆயர்குடியில் வளர்ந்து, வெண்ணெய் முதலியன உண்டு, விதிப்படி அமைந்த பெண்களிடம் கலவி செய்து, தீமையுடைய கொடுமையான கஞ்சனையும் அவன் அசுரப் படைகளையும் தந்திர வகையான முறையில் சுற்றிப் பிடித்துக் கொன்று, அவர்கள் செய்து வந்த கொலை பாவங்களை நீக்கி, உருப்பிணிமுதல் பல பெண்களை இவ்வுலகில் எல்லாரும் அறியத் திருமணம் முடித்துத் துவரயம்பதியில் அமைதியுடன் அமர்ந்திருந்தார்.
---------------------

உருப்பிணி திருக்கல்யாணம்*****
உருப்பிணிக்குத் தேவர் எல்லாம் ஓலமிட மாலை இட்டு
விருப்பு உகந்த மாயன் விமானத்தில் ஏறி 
மனோன்மணியைக் கூட்டி மாயோன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடை நடந்து
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னே இசைந்து இருந்த பெண்ணை எல்லாம்
அப்படியே மாலை இட்டு அமர்ந்திருந்தார் அம்மானை
---------
உரை
---------
பிறகு தேவர்கள் எல்லாரும் மகிழ்ச்சி பொங்க, விருப்பமுடையவளை விரும்பி ஏற்ற மாயன் அவளுக்கு மாலையிட்டு விமானத்தில் ஏறினார். இவ்வாறு மாயன் தமது படையுடன் மனோன்மணியாகிய உருப்பிணியை அழைத்துக் கொண்டு விரைவாகச் சென்று கடலுக்குள் துவரயம்பதியில் இனிது வாழ்ந்தார்.
கிருஷ்ணன் இந்த வகையில் முன்பு தம்மோடு காதல் கொண்டிருந்த பெண்கள் எல்லாரையும் அவர்கள் எண்ணப்படியே மாலையிட்டு மணம் முடித்து மகிழ்வுடன் அமர்ந்திருந்தார்.
---------------------


*உருப்பிணி திருக்கல்யாணம்*****
மோகத் திருமாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தால் உண்டுபண்ணி விரைவாய்க் கொண்டு நடந்தார் 
முழுத் திருமால் தன்னை மொய்குழலாள் கன்னியுட
கழுத்திலே இட்டுக் காமக்கண் நீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயம் எங்கும் மோகம் சென்றதுகாண் அம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தம் இட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன் படையும்தான் அறுத்து
---------
உரை
---------
உடனே (கிருஷ்ணர்), மோகம் கொடுக்கின்ற அழகு பொருந்திய கழுத்தில் அணியும் மாலைகளை மூன்று கோடி பொன் கொண்டு வேகமாக உருவாக்கி, விரைவாக எடுத்துக் கொண்டு உருப்பிணி இருப்பிடம் நோக்கி நடந்தார்.
அங்குச் சென்று முழுமையான அழகு பொருந்திய அந்த மாலைகளை வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய கன்னிப் பெண்ணாகிய உருப்பிணியின் கழுத்திலே அணிவித்தார்.
உருப்பிணியை மாயன் தமது காமத்தையூட்டும் கண்களால் பார்த்திட்ட காரணத்தால் மாயனுக்கு இருந்த மோகம் உருப்பிணியை மூன்றுமடங்கு அதிக மோகம் உள்ளவள் ஆக்கியது. அங்குத் தோன்றிய காதல் மோகம் அந்தத் தேசம் முழுவதும் பரவிடவே மக்கள் எல்லாரும் அறிந்தனர்.
உருப்பிணியைத் தமக்கு முன்பே திருமணம் செய்ய வந்த மன்னர்களையும், அவர்கள் படைகளையும் கண்ணன் அங்கேயே கொன்றார்.
---------------------



உருப்பிணி திருக்கல்யாணம்*****
மாயன் துவரயம்பதி வாழ்ந்து தாமிருக்க
நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை 
விதியை அறியாமல் மேலும் ஒரு ராசனுக்குத்
திருமாங்கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோன் அடிபணிந்து
இப்போது உன்றனக்கு இசைந்த உருப்பிணியைப்
பாணிக்கிரணம் பண்ணப் பறையடித்தார்
நான் இதையும் கேட்டு நாடி உரைத்தேன் என்றார்
அம்முனிதான் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிதான் போக இசைந்தார்கான் அம்மானை
---------
உரை
---------
கிருஷ்ணன் துவரயம்பதியில் வாழ்ந்து வரும்போது, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே உரிமையான உருப்பிணியின் முன்விதியைப் பற்றிச் சிறிதும் அறியாமல் வேறு ஓர் அரசனுக்கு அவளைத் திருமணம் முடித்துத் தாலி அணிவிக்கத் துணிந்தனர். அப்போது, இதை அறிந்த நாரதர் கிருஷ்ணனின் அடிபணிந்து, "கிருஷ்ணா, உனக்கே உரிமையான உருப்பிணியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்விக்கப் பறையடித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து உன்னை நாடி வந்து தெரிவித்தேன்" என்றார்.
நாரதர் இவ்வாறு சொல்லவும், அதைக் கேட்ட கிருஷ்ணன் அங்குப் போய் உருப்பிணியைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்தார்.
---------------------


உருப்பிணி திருக்கல்யாணம்*****
கஞ்சனையும் மற்றமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமாய் உள்ள வாணன் நரபாலனையும் 
இம்முதலாய் உள்ள ஏற்ற அரக்கரையும்
அம்முதலாய் உள்ளவரை அரியோன் அறுத்தாராம்
சத்த பெலமுள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல் நினைத்தார் அம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்சல் அருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்
வாரிக்குள் கோட்டை வளைந்து மணிமேடை வைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தார் அம்மானை
---------
உரை
---------
வஞ்சக நரபாலன் கஞ்சனையும், மற்றும் வலிமையான அசுரர்களையும் கண்ணன் அழித்தார். ஏழு யானைகளின் பலமுள்ள சராசந்தனைக் கண்ணன் வீமனை வைத்துக் கொல்ல எண்ணி எதிர்த் தாக்குதல் செய்யாமல் விட்டார். இவ்வாறு கஞ்சன் வம்சத்தை அழித்துத் தேவர்களுக்கு அபயம் கொடுத்துக் கடலுக்குள் துவரயம்பதியில் பெரிய கோட்டை உருவாக்கி, மணியினால் ஆகிய ஆசனம் வைத்து வீரக்குருநாதனாகிய கண்ணபிரான் ஆட்சி புரிந்துவந்தார்.
---------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக