திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*கஞ்சன் கொடுஞ்செயலும் மனச் சஞ்சலமும்*****
அந்த இரா விடிந்து அலை கதிரோன் தோன்றிய பின்
கந்த மனசுள்ள கஞ்சன் அவன்தனக்கு 
ஒற்று ஆளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றாள் உன் தங்கை பிள்ளை என உரைத்தான்
கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தான்எழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்து
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தான் அடிக்க
ஆக்கிரமத்தாலே அவன் எடுக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடி இழந்து நிற்கையிலே
---------
உரை
---------
அந்த இரவு கழிந்து நேரம் விடிந்து ஒளிக்கதிரையுடைய சூரியன் உதித்த பிறகு, கள்ளத்தனத்தில் விருப்பமுள்ள கஞ்சனிடம் ஏவலாள் ஒருவன் ஓடி வந்து "உமது தங்கை ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறாள்"" என்றான்.
இதைக் கேட்டவுடன் விரைவாகத் தன் ஆசனத்திலிருந்து துடித்தெழுந்து இரக்கம் புக முடியாது பூட்டி வைக்கப்பட்ட இதயத்தையுடைய கஞ்சன் அங்குச் சென்று அந்தப் பெண் குழந்தையைக் கையில் எடுத்துப் பூமியில் விரைவாக அடித்துக் கொல்லத் தூக்கினான். அவனுடைய முழுப்பலம் கொண்டும் அக்குழந்தையைத் தூக்க முடியாமல் சோர்வுற்று, சக்தி எல்லாம் இழந்தான்.
---------------------


குழந்தை பரிமாற்றம்*****
கொண்டாடித் தான் எடுத்துக் கூறுவாள் அம்மானை
கண்ணனோ சீவகனோ கரிய முகில் மாயவனோ 
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோ நான் முன்பெற்ற அரிய மதலை எல்லாம்
மெய்யோதான் இம்மதலைக்கு ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதன்னை
அன்று கொடுத்து அனுப்பினாள் அசோதையிடம்
கொண்டு வசுதேவன் அசோதை குடிலேகி
கண்டு அசோதை கன்னி அங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமாய் எடுத்து
ஆண்மதலை தன்னை அசோதையிடமே இருத்தி
வந்து வசுதேவன் மங்கை கையிலே கொடுத்து
புத்தி மிகநொந்து போய் இருந்தான் அம்மானை
---------
உரை
---------
பிறகு, மகிழ்வுடன் தெய்வகி அக்குழந்தையைக் கையில் எடுத்து, "இக்குழந்தை கண்ணனோ? சீவகனோ? கரிய மேகத்தைப் போன்ற திருமாலோ? வண்ணனோ? தெய்வேந்திரனோ? மறையவனோ? தூயவனோ? ஆகா! நான் முன்பு பெற்றெடுத்த அருமையான எல்லாக் குழந்தைகளும், உலகில் உள்ள வேறு எந்தக் குழந்தையும் இந்தக் குழந்தையைப் போன்று அழகு பொருந்தியதாக இல்லையென உண்மையாகவே கூறுகிறேன்" என்று மிகுந்த ஆசை கொண்டு தான் பெற்றெடுத்த அந்தக் குழந்தையைத் தேவகி தன் கணவன் வசுதேவன் மூலம் அசோதையிடம் கொடுத்து அவள் குழந்தையை மாற்றம் செய்ய அனுப்பினாள்.
வசுதேவனும் அசோதை வீட்டுக்குச் சென்று அவளைக் கண்டு அவள் பெற்றிருந்த பெண் குழந்தையைத் தன் பாரம்பரிய குழந்தையாக எடுத்து, தன் ஆண் குழந்தையை அசோதையிடம் கொடுத்தான். தான் அசோதையிடம் பெற்று வந்த குழந்தையைத் தன் மனைவி தெய்வகி கையில் கொடுத்து, மிகுந்த மனவேதனையோடு அமர்ந்திருந்தான்.
---------------------



குழந்தை பரிமாற்றம்*****
சுற்றுமதில் காவல் வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலில் இட்ட வாய்த்த விலங்கும் அற்று 
விசுவாச மாதருட விலங்கு அதுதானும் அற்று
பாழ் கொண்ட கஞ்சன் பருங்கோட்டைக் கதவும்
தாழ் திறந்து நேரம்தான் விடியும் முன்னாக
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
---------
உரை
---------
பாலகண்ணன் தெய்வகி வயிற்றிலிருந்து பூலோகப்பிறவி எடுத்துவும், அங்கே கோட்டையைச் சுற்றி நின்ற துடிப்பான காவலர்கள் பலம் இழந்தனர். வசுதேவன் காலில் இடப்பட்டிருந்த விலங்கு அற்று வீழ்ந்தது. கஞ்சனின் பாழடைந்த கோட்டைக் கதவின் தாழ்ப்பாழ் தானே திறந்து கொண்டது. அதே நேரம் விடியும் முன்பாகப் பாலகண்ணனாகிய பெருமை பொருந்திய குழந்தையைத் தெய்வகி பெற்றாள்.
---------------------


தெய்வகியும் ரோகிணியும் கருவுற்றுக் குழந்தை பெறுதல்*****
அழுது கரைந்து அவள் இருக்கும் வேளையிலே
பழுது இல்லாது ஆயன் பாவை வயிற்றுலுற்றார் 
பகவதியும் அங்கே பாவை அசோதை வயிற்றில்
சுகபதியும் அங்கே தோன்றினள்காண் அம்மானை
மாயன் அந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற அவ்வளவில்
தேயம் எல்லாம் நன்றாய்ச் செழித்ததுகாண் அம்மானை
கர்ப்பமுற்றுத் தெய்வகியாள் கிஞ்சுகுவாய் அஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்ப்
பத்து மாதம் திகைந்து பாலன் பிறந்திடவே
---------
உரை
---------
இவ்வாறு அழுது மனமெல்லாம் சொல்ல முடியாத வேதனையுற்று உடல் மெலிந்திருக்கும் அவ்வேளையில் குறையேதும் இல்லாத் திருமால் தெய்வகி வயிற்றில் கருவாகத் தோன்றினார்.
அதேசமயம் அன்னை பகவதியும் அசோதை என்னும் பெண் வயிற்றில் கருவாகத் தோன்றினாள். திருமால் தெய்வகியின் வயிற்றில் கருவாய்த் தோன்றியவுடன் நாடு முழுவதும் நன்றாகச் செழித்து வளமுற்றது.
இவ்வாறு கர்ப்பமுற்றதும், எல்லாரும் விரும்பும் தேவகியாள் சிவந்த நிற வாயையுடைய கிளியைப் போன்ற அழகு பொருந்திய உடம்பாக மாறுதல் அடைந்து, பத்து மாதங்கள் நிறைவுற்றுப் பாலகண்ணன் பிறந்தான்.
---------------------


தெய்வகியும் ரோகிணியும் கருவுற்றுக் குழந்தை பெறுதல்*****
முன்பெற்ற பிள்ளை முழுதும் அவன் கொன்றதனால்
அன்பற்ற மாது மங்கை அந்தத் தெய்வகியும் 
மெத்த மயங்கி முன்னம் விதிதன்னை நொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்று அந்தக் கன்னி இருபேருமே புலம்பி
விண்டு சொல்லாத விதனம் மிகஅடைந்து
---------
உரை
---------
ஏற்கனவே தனக்குப் பிறந்த குழந்தைகள் ஏழுபேரும் கஞ்சனால் கொல்லப்பட்ட காரணத்தால், கஞ்சனின் அன்பைப் பெற முடியாத தெய்வகி மனம் வேதனையுற்று, மயங்கி, "முன்புள்ள தன் விதியின் பலன்தான் இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் கரணம்" என்று தன்னையே நொந்து, "இது கர்த்தாவின் செயலோ? அல்லது காரியமால் செயலோ?" என்று அந்தக் கன்னிகள் இரண்டு பேரும் மிகவும் அழுது புலம்பி எடுத்துச் சொல்ல முடியாத அளவு துன்பம் கொண்டனர்.
---------------------

கண்ணன் அவதாரம்*****
ஐவர்க்கும் உபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகிணிக்கும் சிவகெதிகள் ஈவதற்கும் 
கஞ்சனுட வலிமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சை வரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்கள் உள்ளோரைத்
தத்தியுள்ள வீமனையும் தன்னாளாய் கூடவிட்டு
கொல்வதற்கும் தேவருட கூர்முறையம் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே
தன்னிகர் இல்லாத தையல் தெய்வகி வயிற்றில்
பிறக்கிறார் என்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்று மிகக்கொண்டாட
---------
உரை
---------
மேலும், பஞ்ச பாண்டவர்களுக்கு அன்புடன் உதவி செய்யவும், தெய்வகிக்கும், ரோகிணிக்கும் சிவகதிகள் கொடுப்பதற்கும், கஞ்சனுடைய வலிமையைத் தோற்கடித்து அவனைக் கொல்லுவதற்கும், வரங்களும் உபதேசங்களும் பெற்று. அதன்மூலம் தீமை செய்யும் அரக்கர்களைக் கொல்லுவதற்கும், தேவர்களின் அபயமிடும் நிலையைத் தீர்ப்பதற்கும், இப்படி எல்லா அரக்கர்களையும் வெற்றி கொள்ளுவதற்கும், பூமியின் பாரத்தை மாற்றி அமைப்பதற்கும் முன்னர் வியாசர் கூறிய ஞானமொழிப்படி தனக்கு நிகரில்லாத பெண்ணாகிய தெய்வகியின் வயிற்றில் திருமால் பிறப்பதையும், அரக்கர்களின் இறப்பையும் எண்ணிப் பெரியோர்கள் மகிழ்வு கொண்டு ஆடினர்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக