திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*தங்கைகளுக்கு திருமணமும் சிறைவாசமும்*****
தெய்வகியை ரோகிணியைச் சிறப்பாய் அலங்கரித்து
வைபோகமுள்ள வசுதேவனையும் ஒப்புவித்து 
சங்கீதத்தோடே தையல் இரண்டு பெண்களையும்
மங்களத்தோடே வசுதேவன் தாலி வைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கன சீதனத்தோடே
கொட்டித் திமிர்த்து ஊதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளும் அழுது சிந்தை முகம் வாடி இருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கித் தானிருப்பான்
மங்கை நல்லாள் ரோகிணியும் வாடி அழுதிருப்பாள்
---------
உரை
---------
தெய்வகியையும், ரோகிணியையும் அழகாக அலங்கரித்து சகல பாக்கியங்களும் உள்ள வசுதேவனையும் ஒப்பனைகள் செய்து சங்கீதம் மேளம் முழங்க வசுதேவன் அவர்களுக்குத் தாலி கட்டிக் கைப்பிடித்துத் திருமணம் முடிந்தது. நிறைவான சீதனப் பொருளொடும், நன்றாகக் கொட்டி முழங்கும் மேளம், குழல்கள் இவற்றின் ஒலிகளோடும் வசுதேவன் தமது இடம் சென்று வாழ்ந்து வந்தான்.
இவ்வாறு வாழ்ந்து வருகின்ற வேளையில், அப்பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்பம் வளர்ந்து, வயிறு பருத்து வந்தது. அச்சமயம் அதை அறிந்த கஞ்சன் தன் தங்கைகளையும் வசுதேவனையும் கொடிய விலங்கில் வைத்தான். தெய்வகி நன்றாக அழுது மனம் கலங்கி வேண்டினாள்.
உண்மையுள்ள வசுதேவன் மிகவும் மனம் உழன்று கொண்டிருந்தான், பெண்களில் உயர்ந்த குணமுடைய ரோகிணியும் அழுது புலம்பி வாடியிருந்தாள்.
---------------------



நாரதர் அறிவுரை*****
பொன்னான சீதை பெலத்த கற்பு ஆனதனால்
கண்ணான இலங்கை கரிந்ததுவும் கண்டிலையோ 
இப்படியே வேதம் இயம்பி இருப்பதனால்
அப்படியே பெண்ணார் அவர்கள் இருபேரையும்தாம்
காவலிட்டு வைத்தால் கற்பதனால் உன்றனுக்குப்
பாவம் வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள் இரு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணம் செய்துதான் கொடுத்துக்
கர்ப்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே
அப்போது நீ கொன்றா யானாலும் பாரமில்லை
என்று அந்த நாரதரும் இத்தனையும் தாம் கூற
நன்று மொழி எனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்பு உரைத்த ஏற்ற வசுதேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணும் என்றான்
வேணும் என்னும் சீட்டோட விரும்பி வசுதேவனுந்தான்
ஆணுவங்களோடே வந்தான் மதுரையிலே
---------
உரை
---------
"பொன் போன்ற சீதையைச் சிறையில் அடைத்து அவளுடைய சிறந்த கற்பினால் அழகு பொருந்திய கண் போன்று பாதுகாத்து வந்த இலங்கை கரிந்து விட்டதை நீ அறியவில்லையா? இவ்வாறாக வேதங்களும் சாத்திரங்களும் கூறி இருப்பதால் அப்பெண்கள் இருவரையும் காவலில் இட்டுப் பாதுகாத்து வைத்தால் அவர்களின் கற்பு நிலையினால் உங்கள் குலத்தைப் பாவம் சுற்றும். இந்த வேத வாக்கு நிச்சயமாகப் பலிக்கும். எனவே, இக்கன்னிப் பெண்களை நல்ல மான உணர்வு பொருந்திய மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடு அவர்கள் கர்ப்பமுற்றுக் குழந்தை பிறக்கும்போது உனக்குத் தீங்கு வர வைக்கும் அக்குழந்தைகளை நீ கொன்று விட்டால்கூட அதனால் பாதகம் இல்லை." என்று நாரதர் இத்தனையும் கூறிச் சென்றார்.
நாரதரின் அறிவுரை நன்மையானது என்று ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் கஞ்சன், "எனக்கு நூல் கற்பித்த ஆசிரியராகிய தங்களுக்கு என் தங்கைகளை மணம் சூட்ட வேண்டும்" என்று வசுதேவனுக்கு அழைப்பு அனுப்பினான். வசுதேவனும் தனக்கு வந்த அழைப்பை ஏற்று அந்த அழைப்புச் சீட்டோடு புறப்பட்டு இனிமை பொருந்திய உறவினர்களோடு மதுரை வந்தான்.
---------------------




நாரதர் அறிவுரை*****
அந்தச் செய்தி அறிந்து அந்த நாரதரும்
வந்து கஞ்சன்தனக்கு வளப்பம் எல்லாம் சொல்லலுற்றார் 
கேளாய் நீ கஞ்சா கீர்த்தியுள்ள சாத்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால்
தர்மம் தலைகெடும்காண் சாத்திரத்துக்கு ஏறாது
வர்மம் வந்து சிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக்கு ஏறாது குடும்பம் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்பு கெட்டு மனுநீதிதான் அழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக்கு ஏறாது
கோட்டை அழியும் குளங்கரைகள் தாமிடியும்
நாட்டை முடிக்குமடா நல்ல கன்னி கன்னி காவல் வைத்தால்
---------
உரை
---------
தெய்வகிக்கும், ரோகிணிக்கும் திருமணம் செய்விக்காமல் வைத்திருந்த செய்தியைக் கேட்டு நாரதர் கஞ்சனிடம் வந்து அவனது இக்கட்டான நிலைமைகளைச் சொல்லலுற்றார், "கஞ்சனே, நீ கேட்பாயாக, திருமண வாழ்க்கை இல்லாத கன்னிப் பெண்களை வீட்டில் காவலில் வைத்தால் தருமம் கெட்டு விடும்; சாத்திரங்களின் உண்மைக்கு அச்செயல் ஒத்து வராது; மழை பொழியாது வறுமை உண்டாகும்; கோத்திரம் கெட்டு விடும்; குடும்பம் தழைத்து முன்னேறாது; பல இரகசிய நோய்கள் அக்குடும்பத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும். மான உணர்வின் எல்லைகள் கெட்டு மனு நீதியும் கெட்டு விடும்; குடும்பத்துக்கு இழிவு நிலை உருவாகி, உலகம் தூற்றும்; கோட்டை குளக்கரைகள் அழிந்து விடும் அவள் கற்பு நாட்டை அழித்து விடும்; இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன" எனக் கூறித் தொடர்ந்தார்.
---------------------



கஞ்சன் சோதிடம் கேட்டல்*****
வேதியனைத் தான் வருந்தி மிகுந்த கேடுள்ள கஞ்சன்
சோதிரியம் கேட்கத் தொடர்ந்தான்காண் அம்மானை 
அப்போது சோதிரிஷி அன்று முனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம் வரும் என்றுரைத்தான்
சோதிரியம் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதியனை அனுப்பி மிகுந்த கேடுள்ள கஞ்சன்
கலியாணம் செய்யக் கருத்தல்ல என்று சொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தான் அம்மானை
---------
உரை
---------
அதிக கேடு நிறைந்த கஞ்சன் சோதிடனை அழைத்துத் தங்கைகளின் திருமணம் பற்றிச் சோதிடம் கேட்க ஆரம்பித்தான். அப்போது சோதிடன், "உன் தங்கைகளுக்குத் திருமணம் செய்வித்தால் முன்பு முனிவன் இட்ட சாபத்தின்படி அவர்களின் ஆண் குழந்தை மூலம் எப்பொழுதாயினும் உன் உயிருக்கு அழிவு ஏற்படும்" என்று உரைதான். கஞ்சன் வருந்தினான். இவ்வாறு சோதிடத்தைக் கேட்டு வருந்திய மிகுதியான கேடுடைய கஞ்சன் சோதிடனை அனுப்பி விட்டு, "தங்கைகளுக்குத் திருமணம் செய்விக்க எண்ணமில்லை" என்று சொல்லித் தங்கைகளை அரண்மனையில் காவல் வைத்தான்.
---------------------




*கஞ்சனுக்கு முனியின் சாபம்*****
இப்படியே கஞ்சன் இவர்கள் இரு தங்கையரையும்
அப்படியே கூட்டி அவன் வேட்டையாடி வர 
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தை
தாமுனிந்து கஞ்சன்தான் அக்கனி பறித்துத்
தங்கையர்க்கு ஈந்தான் சையோகமுனி அறிந்து
மங்கையர்க்கு வந்த மகனால் அழிவை என்று
மாயனுட ஏவலினால் மாமுனியும் அப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாபம் இட்டனனே
சாபமது கஞ்சன்தான் அறியா வண்ணமுந்தான்
பாவமே நாள்தோறும் பண்ணிவரும் நாளையிலே
---------
உரை
---------
கஞ்சன் தங்கைகள் இரண்டு பேரையும் தன்னோடு வேட்டையாடக் கூட்டிச் சென்று வேட்டையாடி விட்டுத் திரும்பி வரும் வழியில், சையோக முனிவனின் உணவுக்காகப் பழுத்திருந்த மாம்பழத்தைச் சென்று பறித்துத் தனது அன்புத் தங்கைகளுக்குக் கொடுத்தான்.
இதை யோக நிலையில் இருந்த சையாக முனிவன் அறிந்து, "மாம்பழத்தை தின்ற மங்கையருக்குப் பிறக்கும் மகனால் நீ அழிவாய்" என்று மாயனுடைய சூழ்ச்சிச் செயலால் மாமுனியும் எல்லா வழிவகைகளும் உள்ள கஞ்சனுக்குச் சாபம் கொடுத்தான். இச்சாபத்தைப் பற்றிச் சிறிதும் கவலையறாது கஞ்சன் நாள்தோறும் பல கொடிய பாவங்களைச் செய்து வந்தான்.
---------------------
அய்யா உண்டு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக