திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சீதை திருக்கலியாணம்*****
அன்று ஐம்பத்தாறு அரசருக்கும் ஆளனுப்பித்
தேசாதி தேசர் திசைவென்ற மன்னர் எல்லாம் 
மேசாதி ஆனோரும் மேவும் தெய்வேந்திரனும்
இராவண சூரன்தானும் இராமர் முதலானவரும்
இராம குலச்சாதி மன்னர் எல்லாம் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண் பூட்டாமல்
முல்லை மன்னர் எல்லாம் முகம் வாடிப்போய் இருந்தார்
இராமர் எடுத்து இராமசரம் ஏற்றிச்
சீராமர் மணம் செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்து வானோர் மங்களக் கீதத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றார் அயோத்தியிலே
---------
உரை
---------
தினகரன் மன்னன் மகள் திருமண ஏற்பாட்டை முன்னிட்டுப் பூர்வீகமான ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களுக்கும் ஆள் அனுப்பி, பல நாடுகளை வென்ற மன்னர்களும், மேல்சாதியில் பிறந்தவர்களும், தெய்வேந்திரனும், இராவண அரக்கனும், இராமன் குலசாதியில் இராமரும், இன்னும் பல மன்னர்களும் வந்தனர். சீதையுடன் பிறந்த வில்லை வளைத்து வில்லில் நாண் பூட்ட முடியாமல் முல்லை நில மன்னர்கள் எல்லாரும் முகம் வாடித் தோல்வியுற்று இருந்தனர்.
இராமபிரான் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றிச் சீதையை திருமணம் முடித்தார். தேவர்கள் மங்கள கீதம் பாடினர். இராமபிரான் தம் சகோதரர்கள், தாய், தந்தை ஆகியவர்களோடு அயோத்திக்குச் சென்றார்.
---------------------


*சீதை திருக்கலியாணம்*****
பூராயமான புவி ஐம்பத்தாறில் உள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போது வரவழைத்து 
வில்லை வளைத்தவற்கு மெல்லி மணம் சூட்டும் என்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக்
கண்டு நின்று மாமுனியும் கண்ணார்க்கு ஏதுரைப்பான்
பண்டு, உனக்குப் பரமசிவனாரும்
வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்கு
செல் அந்த மன்னன் தினகரனார்தம் மகளுக்கு
இன்று கல்யாணம் இப்போது அங்குச் சென்றால்
பண்டு அமைத்த பலன் உனக்குக் கிட்டும் இப்போது
என்று கலைக்கோட்டு மாமுனியும்தான் ஏகிச்
சென்றான் தினகரரின் செல்வி மணமதிலே
---------
உரை
---------
உடனே, கலைக்கோட்டு மாமுனிவர், தினகரனைப் பார்த்து, "மன்னவனே, பூர்வீக நாடுகள் ஐம்பத்தாறிலும் உள்ள இராஜாதி இராஜாக்கள் எல்லாரையும் இப்பொழுது வரவழைத்துச் சீதையுடன் பிறந்த வில்லை வளைத்தவருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பீராக" என்று சொன்னார்.
பிறகு, விடை பெற்றுச் செல்லும் வழியில் தசரதர் மகன் இராமனைக் கண்டு, "இராமனே, பண்டைய நாளில் பரமசிவனார் விதித்த விதிப்படி, வில்லை வளைத்துத் திருமணம் செய்து கொள்ள உனக்கு அந்த விதியில் விதித்து இருக்கின்றது. அதற்குத் தகுந்தால் போல் தினகரன் என்னும் மன்னன் மகளுக்கு இன்று திருமண ஏற்பாடு நடக்கிறது. அங்கு இப்பொழுது சென்றால் முன்னர் விதித்த பலன் உனக்குக் கிடைக்கும். உடனடியாக நீ புறப்பட்டுச் செல்" என்று மாமுனி கூறிவிட்டுச் சென்றார்.



*சீதை திருக்கலியாணம்*****
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத் 
தன் புருசனோடே தையல் நின்று ஏதுசொள்வாள்
அம்பும் வில்லும் வளர ஆயிழையும் வளர்ந்து
பக்குவங்கள் ஆச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவது என்ன உரைப்பீர் என் உத்தமரே
என்று மடமாது ஏற்றத் தினகரனை
நின்று வணங்கி நேரிழையும் சொல்லுகையிலே
வில்லு வளைத்தல்லோ மெல்லி மணம் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத்தான் வருத்தி
இன்னபடி ஈதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
---------
உரை
---------
இந்த வகையில் சீதை வளர்ந்து திருமணத்திற்குப் பக்குவமான வயதை அடைந்தாள், எனவே, சீதையின் தாய் தனது மகள் சீதையை மணம் முடித்துக் கொடுக்க எண்ணி, சீதையின் தந்தை தினகரனிடம் இவற்றை எல்லாம் எடுத்துக் கூற, அவர் பக்கத்தில் நின்று வணங்கிக் கூறலானாள்.
"அன்பரே, அம்பினை ஏற்றும் வில்லானது வளருகிறது, நமது மகள் சீதையும் வளர்ந்து விட்டாள். மணம் சூட்டும் பக்குவத்தைச் சீதை அடைந்து விட்டாளே? இனி மணப்பொருத்தம் பார்க்க என்ன செய்வது? என்பது பற்றித் தெளிவாக எடுத்துரைப்பீராக" என்றாள்.
இவ்வாறு அவள் வணங்கிச் சொல்லவும், தினகரன், "அன்பே, அவளுடன் பிறந்த வில்லை வளைக்கும் தகுதி பெற்றவர் அல்லவா அவளைத் திருமணம் செய்ய முடியம்?" என்று கூறி, கலைக்கோட்டு மாமுனியை அங்கு வரவழைத்து நிலைமைகளை அவரிடம் எடுத்துரைத்தார்.
---------------------



இராமர் சீதை போன்றோர் பிறந்து வளர்தல்*****
...இப்படியே ராவணற்கு எல்லோரும் பகையாய்
முப்படியே உள்ள முறைநூல் படியாலே 
வந்து பிறந்தார்காண் மாயவரும் அம்மானை
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தார் அம்மானை
சீதை வளரத் திருவில்லும் தான் வளர
கோதை குழல்சீதை கோமான் மிகவளர
சீராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே
இராமர் குலங்கள் இரகசியமாய் வளர
அரக்கன் கொடுமை அண்டம் அளவே வளர
---------
உரை
---------
இறுதியாக முன்னுள்ள நூல் விதிப்படி இராவணனுக்குப் பகையாக எல்லாரும் மாயவருடன் பூலோகத்தில் வந்து பிறந்தார்கள்.
அவ்வாறே இராமர் உயர்வு பொருந்திய தசரதருக்கு மகனாகப் பிறந்து அங்கு வளர்ந்து வந்தார்; அதைப் போலச் சீதையும் வளர்ந்து வந்தாள். சீதை வளரவளர அவளோடு பிறந்த வில்லும் வளர்ந்தது.
சீதை தன்னைச் சூழ்ந்த தோழியரோடு அரசன் மகளாக வளர்ந்து வர, இராமரும் உயர்ந்த சிறப்புடன் வளர்ந்து வந்தார். இராமருடைய குலங்களும் மறைமுகமாக தன் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால் ஆங்கே இராவணன் கொடுமைகள் அண்டம் எல்லாம் பரவி வளர்ந்தன.
---------------------


இராமர் சீதை போன்றோர் பிறந்து வளர்தல்*****
சீராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராம பாணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்இலங்கை தான்முடிய சீதை சிறை இருக்கப்
பொன்னரிய வில்லோடுடன் பிறந்தாள் பொன்மாது
தேவர் எல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப்
பூவல் சுகுமுனிவர் போர் விசுவகர்மன் எனும்
வானரத்துக்கு ஏற்ற மந்திரி தானாகப்
தானவரையும் அனுப்பித் தரணிதனில் எம்பெருமாள்
லட்சுமணர் எனவே ஏற்ற சத்துரு பரதன்
கட்சியுடன் மாயன் கணையோடுடன் பிறந்தார் ...
---------
உரை
---------
இராமன் இராவணனை வெற்றி கொள்ள இராமபாணத்தோடு பிறந்தார். சீதை சிறையிலிருந்து தென் இலங்கையை அழிக்கப் பொன்னைவிட அருமையான வில்லோடு பிறந்தார்.
தேவர்கள் தென்னிலங்கையைச் சுட்டு அழிக்க வானரமாய்ப் பிறந்தனர்.
சிவப்பு நிறமான சுகுமுனிவர், வல்லமையான விசுவகர்மனாக வானரத்துக்கு ஏற்ற மந்திரியாகப் பிறந்தார்.
---------------------
அய்யா உண்டு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக