திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கும்பகர்ணன் என்னும் கொடும்பாவி கஞ்சனுமாய்
வம்பனாய் வந்து மதுரைதனில் பிறந்தான்
இப்படியே ஐபேரும் ஆனதொரு நூற்றுவரும் 
அப்படியே பங்கு வகை பாதியாய்ப் பிறந்தார்
இராச்சியத்தில் உள்ள இறைதானம் உள்ளதெல்லாம்
தராசியமாய்ப் பாதி எனத் தங்கள் சிலநாள் ஆண்டார்
---------
உரை
---------
கொடுமை வாய்ந்த பாவி கும்பகர்ணன் கஞ்சனாக வம்பு செய்யும் குணத்துடன் மதுரையில் பிறந்தான். இப்படியாக, ஐவர் பஞ்சபாண்டவரும், கௌரவர்கள் நூறுபேரும் நாட்டை இரண்டாகப் பிரித்து ஆளும் நிலையில் பிறந்தனர். அதன்படி, நாட்டில் உள்ள வரி, தானம், எல்லாம் இரு சமஅளவாகப் பிரித்து அவர்கள் சில காலம் ஆண்டு வந்தனர்.
---------------------



*கௌரவர், பஞ்சவர், கஞ்சன் ஆகியோர் பூலோகப் பிறப்பு*****
முன்னுள்ள பீடத்து உதிரம் எல்லாம்தாம் எழுந்து
அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க 
அரக்கன் இராவணனும் அதிக துரியோதனனாய்
மூர்க்கன் பிறப்போ ஒருநூறு பேரோடு
வந்து பிறந்தார்காண் வையகத்தில் அம்மானை
சந்து பயில் மாயன் தன்னோடுடன் பிறந்த
தம்பி பரதன் சத்துருக்கன் இலட்சுமணன்
நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும்
ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம்
தெய்வத் திரிசடையும்தேவி திரௌபதையாய்
மெய் வரம்பாயுள்ள மேன்மை அதன்படியே
ஐவருடதேவி என்று ஆயிழையும் தோன்றினளாம்
---------
உரை
---------
முன்புள்ள ஆறு பீடத்துள் எஞ்சியுள்ள இரண்டு பீடத்தில் ஒரு பீடத்து இரத்தம் எல்லாம் அரக்கர்களாய் உருவெடுத்து எழுந்து முன் யுகத்தில் பிறந்த இராவணனாகிய துரியோதனனுடன் அவனுக்கு உதவியாக இருக்கப் பிறந்தன.
அரக்கனாகிய இராவணன் துரியோதனனாய் நூறு சகோதரர்களில் ஒருவனாகப் பிறந்தான். பஞ்சவருக்காகத் தூது சென்ற கண்ணனாகிய இராமனோடு சகோதரர்களாய்ப் பிறந்த இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் ஆகிய தம்பிகளும், நம்பிக்கையுடைய விபீஷணனும், நல்ல பண்புள்ள சாம்புவனும் பஞ்சபாண்டவராகப் பூலோகத்தில் பிறந்தனர். தெய்வத் தன்மையுள்ள திரிசடை திரௌபதியாகப் பிறந்தாள். உண்மையுள்ள உயர்ந்த விதிப்படி பஞ்சவர்களுக்கு மனைவியாகத் திரௌபதி அமைந்தாள்.
---------------------



VI. துவாபரயுகம்*****
*****படைத்த சடங்களுக்கு உயிரூட்டித் துவாபரயுகம் படைத்தல்*****
படைத்த சடம் அதுக்குப் பரமன் உயிர் கொடுக்க 
சடத்தை மிகஎழுப்பித் தாம் அனுப்ப ஈசுரரும்
துவாபரயுகம் எனவே தொன்முறையைத் தாம்பார்த்துத்
தவறாவண்ணம் தாம் படைத்தார் எல்லோரையும்
அப்படியே ஈசர் அன்று படைத்தபடி
இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம்
---------
உரை
---------
இவ்வாறு ஈசர், தாம் படைத்த சடலங்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்து.அவர்களை எழுப்பிப் பூலோகம் அனுப்பினார், பிறகு முன் ஆகமக் கணக்கைப் பார்த்து அந்த யுகத்துக்கு துவாபரயுகம் எனப் பெயரிட்டார். மாயன் விருப்பத்தில் தவறு வராவண்ணம் ஈசர் படைத்தபடி எல்லாரும் பூலோகத்தில் வந்து பிறந்தனர்.
---------------------



*நாராயணர் கன்னியர், தாய்மார் ஆகியோரின் படைப்பின் தேவையைக் கூறல்*****
செந்தமிழ்சேர் மாயன் சிவஞானரையும் பணிந்து
என்றனுக்கு ஏற்ற ஈரஞ்சாயிரம் மடவாரைக் 
கன்னியராய் எனக்குக் கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் நிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரைப்
பாயம் உறவாடி இருக்கப் படைப்பீர்காண் ஈசுரரே
இலட்சுமியைப் பூமாதேவி என வகுவும்
கச்சியாய் என்னைக் கருணையுடன் படையும்
தாயாகப் பெண்கள்தாம் படைக்க வேணும் என்றார்
---------
உரை
---------
செந்தமிழ்ப் பொருந்தி இருக்கும் மாயன் சிவனாரை மேலும் பணிந்து, "எனது விருப்பத்துக்கு ஏற்ற பத்தாயிரம் கன்னிப் பெண்களைக் கவரி வீசுவதற்கு இன்னும் படைக்க வேண்டியுள்ளது. பன்னீர் மணத்தைப் போன்ற இனிமையான மணமும் குணமுமுடைய அழகான பொன்னிறம் பொருந்திய அநேகப் பெண்களை நான் உறவாடுவதற்காக ஆயர் குலத்தில் இன்னும் படைக்க வேண்டியுள்ளது. இலட்சுமி தேவியை ருக்குமணியாக இன்னும் படைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அவர்களைப் படைக்கும்போது என்னைக் கருணை கூர்ந்து அவர்களுக்கு ஏற்றவனாகப் படைக்க வேண்டும். எனக்குத் தாயாக இப்பொழுதே பெண்களைப் படைக்க வேண்டும்" என்று மாயன் ஈசுரரிடம் தனது பிறவி பற்றியும், தன்னோடு இனி பிறக்க வேண்டியவர்களின் தேவை பற்றியும் கூறி முடித்தார்.
---------------------



கஞ்சன் சடத்தைப் படைத்தல்*****
ஒருத்தன்தனைக் காணேன் உடனே மறலிதன்னை
வருக என அழைத்து வகை ஏதெனக் கேட்க 
நான் இல்லை என்றே நமன்தான் மிகஉரைக்க
ஏன் இல்லை என்று இறுக்கி நான் கேட்கையிலே
அய்யா உம்முடைய ஆளான வீரனைத்தான்
கையாலம் உள்ள கும்பகர்ணன் ஒரு சமரில்
பிடித்து நசுக்கிப் பிசைந்து திலகம் இட்டான்
அடுத்து நின்று பார்த்து அரக்கன் அவன் உயிரைக்
கொண்டேகி நானும் கொடு நரகில் வைத்திருக்கு
என்றேதான் மறலி இத்தனையும் சொன்னான்காண்
ஆனதால் கும்பகர்ணன் அவன்தனையும்
ஈனமுள்ள கஞ்சன் எனப் படையும் இவ்வுகத்தில்
என்றேதான் மாயன் ஈதுரைக்க ஈசுரரும்
அன்றேதான் கும்பனையும் அப்படியேதாம் படைத்தார்
---------
உரை
---------
உடனே, எமலோகத்து எமனை 'இங்கே வர வேணடும்' என்று வரவழைத்து, அவனிடம் 'அந்த வீரனின் உயிர் சென்ற வகை எது?' என்று விளக்கம் கேட்டேன். அதற்கு எமன் 'அவன் உயிர் சென்ற வகை எனக்குத் தெரியாது' என்று மறுமொழி உரைத்தான். உடனே நான் (இராமன்) 'உனக்கு எப்படித் தெரியாமல் இருக்க முடியும்?' என்று அதட்டினேன்.
அப்போது எமன் நடுக்கத்துடன் 'அய்யா. கையில் மழுவைப் போல் ஆயுதம் வைத்திருந்த கும்பகர்ணனுக்கும் அவனுக்கும் நடந்த போரில் உமது வீரனைப் பிடித்து நசுக்கிப் பிசைந்து தனது நெற்றியில் திலகமிட்டான். இதைப் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நான் பதறி அரக்கனாகிய கும்பகர்ணன் உயிரைக் கொண்டு சென்று கொடுமையான நரகத்தில் வைத்திருக்கிறேன்' என்று இத்தனை நிகழ்ச்சிகளையும் எடுத்துரைத்தான். எனவே, ஈசுரரே இந்த யுகத்தில் கும்பகர்ணனைக் காஞ்சனாகப் படைக்க வேண்டும்" என்று மாயன் கூறிட ஈசுரர் கும்பகர்ணனைக் கஞ்சனது சடமாகப் படைத்தார்.
---------------------


கஞ்சன் சடத்தைப் படைத்தல்*****
பின்னும் அந்த மாயன் பெரியோன் அடிவணங்கி
நின்று கரம் குவித்து நெடியோன் உரைத்தாராம் 
எழுபது வெள்ளம் ஏற்ற வானரத்தோடே
முழுதும் இலங்கை முடித்து நான் நிற்கையிலே
என் படைகளான எழுபது வெள்ளமதிலும்
உன் படைகள் எல்லாம் உயிரழிந்தார் எனவே
ஆராய்ந்து என் படையை அளவிட்டு நிற்கையிலே
தோராத மன்னன் துடியான சேவகன்தான்
ஒருத்தன்தனைக் காணேன் உடனே மறலிதன்னை
---------
உரை
---------
மேலும், நெடியோனாகிய மாயன் ஈசரின் பாதங்களை வணங்கி, "எனக்கு விருப்பமான எழுபது வெள்ளம் வானரங்களோடு சென்று இலங்கையில் உள்ள அரக்கர்களை அழித்துப் போர் முடித்து, படைகளை ஆய்வு செய்தபொழுது, எனது எழுபது வெள்ளம் படைகள் இராவணன் படைகள் முழுவதையும் அழித்து விட்டன; ஆனால் வீரம் நிறைந்த எனது எழுபது வெள்ளம் படைகளின் அழிவு எவ்வளவு என்று ஆய்வு செய்தபோது என்றும் தோல்வியே இல்லாத மன்னனும் எனக்குத் தொண்டு செய்யும் துடியான சேவகனுமாகிய ஒருவனை மட்டும் காணவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக