திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

வாரணத்தின் மீதில்வரும் பவனி ஆரவமும்
மாவேறி வீதிவரும் பவனி வீதிகளும்
கூரையிலே முத்துக்குலை சாய்க்கும் கன்னல்களும் 
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் அளிப்பாரும்
அன்னமிடும் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ணம் அளித்துச் சொகுசு பெற நிற்பாரும்
சிவனே சிவனே என்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிது எனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா என்று குருபூசை செய்வாரும்
நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும்...
---------
உரை
---------
யானையின் மீது பவனி வருகின்றபோது எழுகின்ற ஆரவார ஒலியும், குதிரையின் மீது ஏறிப் பவனி வருகின்ற வீதிகளும், வீடுகளின் மேற்கூரையில் தாம் ஈன்ற முத்துக் குலைகளைத் தாங்க முடியாது சாய்த்துக் கொண்டிருக்கும் கரும்புகளும் அங்கு ஏராளம் உள்ளன.
வழிப் பாதைகளில் காணுகின்ற அந்தணர்களுக்குப் பொன்னினை அளிப்பார்களும் அங்கு உள்ளனர். பசித்தோருக்கு அன்னம் இடுகின்ற சாலைகளும் பக்தர்களுக்கு ஆலயங்கள் உருவாக்குபவர்களும், ஏழைகளுக்குப் பொன் அளித்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவாரும் 'சிவனே, சிவனே' என்று சிவன்மேல் ஒரே கருத்தாய் நிற்கின்றவர்களும்.
தவமே உயர்ந்தது என்றெண்ணித் தவங்களைச் செய்கின்றவர்களும், ""கோவிந்தா"" என்று சொல்லிக் குரு பூசை செய்கின்றவர்களும், மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் ரிக், யஜுர் , சாமம், அதர்வணம், ஆகிய வேதங்களை ஆராய்பவர்களும் அங்கு உள்ளனர்.
---------------------


சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும்
முடியும் அடியும் இல்லா முதலோனைப் போற்றும் ஒலியும்
முத்தாலே பாண்டி முதன் மடவார் ஆடல் ஒலியும் 
மத்தாலே மோரு மடமட என்னும் பேரொலியும்
சமுத்திரத்து முத்துதான் கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை இடும் பேரொலியும்
சங்கீத மேளம்தான் ஓதும் ஆலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்.....
---------
உரை
---------
....சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும், மடியில் இருந்த பணத்தை இறைவன் முன்னில் போட்டு விட்டுத் தன்னை ஆட்கொள்ள வேண்டி மார்பில் குத்திக் கொள்ளுகின்ற ஒலியும், அடி முடி காண முடியாத முதல்வனைப் போற்றும் ஒலியும், பெண்கள் முத்துக்களைக் கொண்டு 'பாண்டி' விளையாடும்போது எழுகின்ற ஒலியும், மோரை மத்து கொண்டு 'மடமட' என்று கடைகின்ற ஒலியும், கடலில் உள்ள முத்துக்கள் கரை சேருகின்ற ஒலியும், திரள் திரளாகப் பெண்கள் இனிமையாகக் குரவையிடும் ஒலியும், சங்கீத மேளத்தோடு மந்திரங்கள் ஓதுகின்ற ஆலயங்களும், மங்கள கீதங்களைக் கற்பிக்கின்ற ஆலயங்களும், வேத விளக்கத்தினை விளக்கிக் கல்வி கற்பிக்கும் ஆலயங்களும்.....
---------------------


தெச்சணத்தின் இயல்பு*********
புன்னை மலர்க்காவில் பொறி வண்டு இயல்பாட
அன்னமது குதித்து ஆராடும் சோலைகளும் 
கன்னல் கதலி கரும்புப் பலாச்சுளையும்
எந்நேரமும் பெருகி இலங்கி நிற்கும் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கும் கதிரோன் பூமேல் குடை நிழற்ற
நந்தாவனம் பூத்து நகரி மணம்வீச
செந்தாமரை பூத்துச் சிலம்பி மணம்வீச
அரகரா என்று அபயம் இடும் ஒலியும் .....
---------
உரை
---------
புன்னை மலர்க்காட்டில் பொறிவண்டுகள் இன்னிசை பாட அன்னம் குதித்து விளையாடும் சோலைகளும்; கரும்பும், கதலி வாழைப் பழமும், கரும்பின் சுவை போன்று இனிமையான பலாச்சுளையும் எப்பொழுதும் பெருகிக் கிடக்கின்ற சோலைகளும் அங்கு உள்ளன. எல்லா இடமும் இனிய நாதம் முழங்கும் ஒலியும் அங்குக் கேட்டுக் கொண்டிருக்கும். காலையில் பொங்கி எழுகின்ற கதிரோன் தனது ஒளியைப் பூ மொட்டுகளின் மேல் குடை போன்று பரந்து நுண்மையான சக்தி கொடுத்து நந்தாவனம் பூத்து மலரச் செய்யவும், அப்பூக்கள் பட்டினம் முழுவதும் இனிமையான மணம் வீசவும், செந்தாமரைகளும் பூத்து ஒலி செய்து மணத்தை வீசவும் தெச்சணாபூமி இயற்கை வளம் கொழித்துக் கொண்டிருக்கும். 'அரகரா' என்று அபயமிடும் ஒலியும்...
---------------------


விருத்தம்**********
கச்சணி தனத்தாளோடு கறைமிடற்று அண்ணல் ஈசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி 
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணா புதுமை சொல்லிச் சீமையின் இயல்பும் சொல்வாம்
---------
உரை
---------
கச்சையணிந்த மார்பையுடைய பார்வதியோடு நீலநிறக் கறையை கழுதிலுடைய ஈசர், பச்சை நிறத்திருமால், முனிவர்கள், தேவர்கள், தாமரைப் பூவில் இருக்கும் இலட்சுமிதேவி திடமான கற்பில் சிறந்த பகவதியாள் ஆகியவர்களும் கூடுகின்ற தெச்சணாபூமியின் இயல்புகளைச் சொல்லுவார்.
---------------------


..ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து ஆடுகின்ற தெச்சணமே
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே 
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்ப முடியாது
அச்சமில்லாப் பூமி அடைவு கேள் அம்மானை.
---------
உரை
---------
......ஆகமத்தில் கூறப்படுகின்ற விளையாட்டுகள் விளையாடப்படுவதுவும், பார்வதிதேவி வந்து அமர்ந்து இருப்பதுவும் , பார்வதியை ஈசன் திருமணம் புரிந்ததுவும், திருமால் மாயனாகத் தோன்றி வந்து அமர்ந்து இருந்ததுவும் இந்தத் தெச்சணாபூமியிலே ஆகும்.
விஷ்ணு திருவிளையாடல்களை நடத்தியதுவும் இத்தேசணப்பூமி ஆகும். இதன் பெருமைகளைச் சொல்லுவது முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தது இப்பூமியாகும். இனி எவ்வித அச்சமுமின்றி வாழுகின்ற மக்களுடைய இத்தெச்சணாபூமியின் இயல்புகளை நான் கூறப் போகின்றேன், கேட்பாயாக.
---------------------


.மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமசிக்கும் தெச்சணமே
ஆணுவம் சேர் காளி அமர்ந்திருக்கும் தெச்சணமே 
தோசம் மிககர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீசவினை தீர நீராடும் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
பாறு படவு பரிந்து நிற்கும் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்கும் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே......
---------
உரை
---------
.......மாமுனிகள் வாழ்ந்து வருவதுவும் இத்தெச்சணாப்பூமியே.
தாணுமாலயன் வாழ்ந்து வருவதுவும், இனிமைத் தன்மை வாய்த்த காளிதேவி அமர்ந்திருப்பதுவும், மிகுதியான பாவத் தோசைக்கு கர்ம வினைகளைத் தொலைக்கச் செய்வதுவும், நீசத்த தன்மையுள்ள செயல்களின் பாவம் தீர்வதற்குத் தீர்த்தமாடுவதும் இந்தத் தெச்சணாபூமியே ஆகும்.
குமரிப் பகவதியம்மை மகிழ்ந்திருப்பதுவும், மரக்கலங்கள் அலங்காரமாக நிற்பதுவும், யானைப்படைகள் அலங்கரிப்பதுவும், சேனைப் படைத்தளங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கின்றதுவும்.....
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக