திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*பஞ்சவர் திரௌபதி ஆகியோர் சடங்களைப் படைத்தல்*****
பாவி பிறக்கப் பச்சைமால்தாம் கூடத்
தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும் 
விபீஷணனையும் நல்ல வெற்றிச் சாம்புவனையும்
ஐவரையும் பூமியதிலே பிறவி செய்தார்
மொய்குழலான மெல்லி திரௌபதையாய்
அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை
நன்மை விபீஷணற்கு நல்ல மகளாய் ஈந்து வைத்து
அரக்கர் குலம் அறுக்க அம்மை எழுந்தருளி
அரக்கர்ப்புரம் ஏகி இருக்கும் அந்த நாளையிலே
தோழியாய் முன்னிருந்த துய்ய திரிசடையை
நாழிகை தன்னில் நாதன் பிறவி செய்தார்
---------
உரை
---------
பாவியாகிய இராவணன் துரியோதனனாகப் பூலோகத்தில் பிறக்கச் சடமெடுக்கவும், திருமாலும் ஏற்கெனவே முந்திய கிரேதாயுகத்தில் தம்பிகளாகப் பிறந்த மூவரையும், விபீஷணனையும், வெற்றித் தன்மையுடைய சாம்புவனையும் பஞ்சபாண்டவர்களின் சடங்களைப் படைத்தார். இலட்சுமிதேவியின் கூந்தலில் அமர்ந்திருந்த பொற்சடை முன்யுகத்தில் நன்மையையே விரும்பும் விபீஷணனுக்கு நல்ல மகளாகத் திரிசடை என்னும் பெயரோடு பிறந்தது.
பிறகு, அரக்கர் குலத்தை அழிக்க இலட்சுமிதேவி சீதையாகப் பூவுலகில் எழுந்தருளினாள். இலட்சுமி சீதையாக இலங்கைச் சிறையில் இருந்த காலத்தில், சீதைக்குத் திரிசடையைத் தோழியாகப் படைத்திருந்தார். அந்தத் திரிசடையை இந்த யுகத்தில் ஒரு நாழிகைக்குள் திரௌபதியின் சடத்தைப் படைத்தார்.
---------------------




*துவாபரயுகம் அமைச்சர் சடங்களைப் படைத்தல்*****
அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து
முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே 
ஒன்றே ஒரு துண்டம் ஒருநூறு பங்கு வைத்துத்
துவாபரயுகம் வகுத்துக் துரியோதனன் எனவே
கிரேதாயுகம் அழித்துக் கீழுலகில் தோன்ற வைத்தார்
---------
உரை
---------
பிறகு, கயிலை சென்று அங்கிருந்த ஈசரின் பக்கத்தில் அமர்ந்தார். அங்கே முன் யுகத்தில் உள்ள குறோணியின் ஆறு துண்டங்களில் பிறவி செய்த துண்டங்கள் போக எஞ்சியுள்ள இரண்டு துண்டங்களில் ஒன்றை எடுத்தார். அதை நூறு பங்காக்கி நூறுபேரைப் படைக்கவும், அந்த நூறுபேரில் தலைவனாக இராவணான துரியோதனனை அமைக்கவும், கிரேதாயுகத்தை அழித்து, துவாபரயுகத்திற்காக, அவர்கள் எல்லாரையும் பூலோகத்தில் படைக்கின்ற வகைகளை ஈசர் மூலம் செயல்படுத்தலானார்.
---------------------


என்னுடைய தம்பியாலேதான் என்னுயிரை
உன்னுடைய அம்பால் உயிர் அழித்தேன் அல்லாது
என்னை நீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய் 
உன்னை நான் இப்போது ஒரு பிறவி செய்கிறேன்
என்று சொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன்
---------
உரை
---------
"என் தம்பியின் உதவியினால் என் உயிரை உன்னுடைய பாணத்தினால் அழித்தாயே ஒழிய. என்னை உன்னால் கொல்ல முடியாதென்று உரைத்தாய், இராவணனே. உன்னை நான் இப்பொழுது இன்னும் ஒரு பிறவி செய்கிறேன்" என்று மாயன் இராவணனிடம் சொன்னார்.
பிறகு, மாயன் சொல்ல முடியாத கோபத்தோடு அவனை அழித்தார்.



விருத்தம்*****
அப்போது மாயன் அதிக சீற்றத்துடனே
ஒப்பொன்றும் இல்லாதார் உரைப்பார்காண் அம்மானை 
உன்னுட தம்பியாலே உயிர்நிலை அறிந்து நானும்
என்னுட சரத்தால் கொன்றேன் என்று இயம்பிய அரக்கா உன்னைப்
பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்பு நூறோடும் கூடி
அன்னுகம் தன்னில் தோன்ற அருளுவேன் நானும் உன்னை
என்னொரு தம்பியாலே என்னையும் கொன்றாய் என்று
தன்னொரு மகத்தால் நீயும் சாற்றிய அரக்கா உன்னைப்
பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து
இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வேன் உன்னை
---------
உரை
---------
இதைக் கேட்ட ஒப்பில்லாத மாயன் அதிக சீற்றம் கொண்டு, "இராவணா, 'உன் தம்பியின் உதவியினால் உன் உயிர் நிலையை அறிந்து நான் என் அம்பினால் உன்னைக் கொல்கிறேன்' என்று கூறும் அரக்கனே உன்னை நான் இனி வருகின்ற யுகத்தில் (துவாபரயுகம்) நூறு பேர்களை உன்னுடன் கூடிப் பிறக்கச் செய்வேன்.
'என் ஒரு தம்பியின் உதவியினால் என் குலத்தையும் என்னையும் க்கொன்றாய் என்று உனது ஆணவத்தால் கூறிய இராவணனே, உன்னை இனித் தோன்றும் துவாபரயுகத்தில் நூறு பேர்களுடன் பிறவி செய்து வேறு ஒருவன் கையால் உன்னைக் கொல்லச் செய்வேன்" என்றார்.
---------------------


*இராவணன் வதம்*****
மாண்டாய் நீ என்று வசை கூறக் கண்டு அரக்கன்
ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது 
தம்பி எனப்பிறந்து சத்துருபோல் தான்சமைந்து
என் பெலங்கள் எல்லாம் எடுத்துரைத்தான் உன்றனுக்கு
ஆனதால் என் உயிருட அடையாளம் பார்த்து இலக்காய்
ஊனமுடன் எய்தாய் உயிரழிந்தேன் அல்லாது
நீயோடா என்பலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது
பேயா நீ போடா புலம்பாதே என்னிடத்தில்
---------
உரை
---------
இதைக் கேட்ட இராவணன், மறுமொழி கூறலுற்றான், "இராமா, ஏண்டா, உண்மையை மறைத்துப் பேசுகின்றாய் என்னை இராமனாகிய நீயா கொல்ல முடியும்? என் தம்பியாகப் பிறந்து எனக்குப் பகைவனாக மாறி, அவன் என் மூலப் பலங்களை உனக்கு எடுத்துக் கூறினான்.
அதன் மூலம், என் உயிர் நிலையின் இருப்பிடம் கண்டறிந்து, தவறான வழிகளைக் கடைப்பிடித்து என் உயிரை அழித்தாய். இல்லையென்றால் நீயா என் மூலப்பலங்களின் உயிர் நிலையைப் பார்த்து என்னைக் கொல்வது? அஃது உன்னால் முடியாது. போடா, நீ வீணாக என்னிடம் புலம்பாதே" என்றான்.
---------------------


*இராவணன் வதம்*****
கோலுபோலே உயர்ந்த கொடும் பாவி நீ கேளு
நாலு முழம் அல்லவோ நல்ல தலை ஒன்று அல்லவோ 
என் கையால் வாளிதனை எடுத்துவிடத் தாங்காமல்
உன் கைகாலும் அற்று உயிர் அழிந்து மாண்டாயே
பத்து மலை போலே பருந்தலைகள் பெற்றதெல்லாம்
இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே
---------
உரை
---------
இராவணா, நீண்ட நெடுங்கோலைப் போன்று வளர்ந்து உயர்ந்து நிற்கும் கொடும் பாவியே, நான் கூறுவதைக் கேள். என் உயரம் நான்கு முழங்கள்தாமே இருக்கின்றன? எனக்கு ஒரு தலை மட்டும்தானே இருக்கிறது. அப்படிப்பட்ட நான் என் கைக்கொண்டு ஓர் அம்பு எடுத்துவிட்டேன்.
அதைக்கூட தாங்காமல் உன் கைகளும் கால்களும் அறுந்துபட உயிர் அழிந்து மாண்டு கொண்டிருக்கிறாயே மலைபோன்ற பத்துத்தலை உள்ளவரை இந்தப் பூவுலகில் நான் பார்த்ததில்லையே! நீ என் கையால் மாண்டு விட்டாயே" என்று இராமன் இகழ்ந்து கூறினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக