திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தரணியில் உள்ளோர்க்குக் 
கர்மமது தீரக் கணக்கு எடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் எழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவிப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற ஆறதுவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
---------
உரை
---------
இப்பூவுலகில் உள்ளோரின் முன் வினைக் கருமங்கள் தீரத் தரும வைத்தியமாக அவர்களின் முன்வினைப் பாவக் கணக்குகளை எடுத்துப் பார்த்ததுவும்; ஏகாபுரிக் கணக்கும்; ஏழு யுகங்களின் கணக்கும்; காளி வளர்த்த சான்றோர் மக்கள் வைகுண்டர் பாதத்தைக் கண்டு தொழுததுவும்; அவர்கள் கைகளைக் கட்டிக்க கொண்டு பணிவிடை செய்ததுவும்; அப்பணிவிடைகளை இறைத்தொண்டராக வைகுண்டரைச் சூழ்ந்து நின்று செய்த முறைகளையும்; திருமாலும் ஏழு கன்னிகளும் சேர்ந்து பெற்ற சான்றோர்கள் வைகுண்டரைப் போற்றிக் கொண்டாடிச் சுத்தமான பதத்தில் குழித்துத் தங்களுடைய ஆடைகளைத் துவைத்ததுவும்; ....


சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக்கு இனிது இருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியே 
பாரேழும் அளந்த பரமேசுவரி தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகர் ஒவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயாய் உதிக்கச் செடம் எடுத்தது போலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து ஆறு மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்து குழலான் சீதை சிறையதுபோல்
---------
உரை
---------
சரசுவதிதேவியே, குளிர்ச்சி பொருந்திய மணி போன்றவளே, இந்நாட்டை அரசு புரிய என்னை இருத்தும் பெரியவளே, அம்பிகையே, பதினான்கு உலகங்களையும் காக்கின்ற உத்தமதேவியே, இவ்வேழு உலகங்களையும் அளந்து அறிந்த பரமேசுவரி தாயே, நான் இந்நூலை எழுத அருள் புரிவீராக.
பத்துத் தலைகளையுடைய பாவியாகிய இராவணனை வெற்றி கொள்வதற்காகவும், ஒருவருக்கும் நிகரில்லாத தசரத மன்னனுக்குக் குழந்தையாய் உதிப்பதற்காகவும் மாயன் உருவெடுத்தார். அது போல, மாலதி சூட்சம மாயன் ""இக்கலியுகத்தில் பிறந்து ஆறு வருடங்கள் அரிய பல தவங்கள் செய்ததுவும், சிறந்த கூந்தலை யுடைய சீதை சிறையில் அனுபவித்த துன்பத்தைப் போன்று, தாம் எடுத்த மனித அவதாரம் மூலம் பல துன்பங்களை அனுபவித்ததுவும்; பல வகையான மாய சூட்சுமத் தன்மையுள்ள அற்புதங்கள் செய்ததுவும், மருந்தானது தண்ணீர் திருமண் கொடுத்து வைத்தியங்கள் செய்து நோய் தீர்த்ததுவும்;
---------------------


வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்காக இரக்கமதாய்
அருகரத்தோன் வாழும் ஆழிக்கரை ஆண்டி 
நறுகரத்தோன் ஆன நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாளும் உலகம் ஏழும் தழைக்கத்
திருவெடுத்து கோலம் சிவனார் அருள்புரிய
ஈசன் அருள்புரிய இறையோன் அருள்புரிய
மாயன் அருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புலிமாது போர்மாது
நாமாது இலட்சுமியும் நன்றாய் அருள்புரிய
---------
உரை
---------
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில் உள்ள வம்புகளையும், அநியாயங்களையும் மாதேவராகிய நாராயணர் அழியச் செய்வதையும்;
இவ்வுலகில் உயர்வு பொருந்திய கரங்களையுடைய முருகன் வாழும் திருச்செந்தூர்க் கடற்கரையில் வாழ்ந்த கடற்கரை ஆண்டியாகிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, சான்றோர் குலத்தில் மனிதனாய் உருவெடுத்து, எப்போதும் இவ்வுலகம் ஏழும் தழைத்து நிற்க உருவான வைகுண்ட அவதாரத்தைப் பற்றியும்;
நான் இந்த நூலில் எழுத எல்லாம் வல்ல சிவனும், மாயனும், நாவில் வாழும் சரசுவதிதேவியும், இலட்சுமிதேவியும், பூமாதேவியும் நல்ல முறையில் அருள் புரிவார்களாக.
---------------------


தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக்
கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம்
பறந்திடும் நிசமே சொன்னோம்.
மூலம்: முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும் தீசாதியான துரியோதனன் முதலாய் அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப் பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்: முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின்
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய
உடலை இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி,
பத்துத் தலைகளையுடைய இராவணனையும்
எதிர்த்து வெற்றி கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின்
எதிர்ப்புகளை எல்லாம் அழித்து, எல்லாத் தேசத்தில்
உள்ளவர்களும் தலை கவிழ்ந்து, பணிந்து,
கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச்
சார்ந்த துரியோதனன் முதலாக அந்த யுகத்தில்
உள்ள தீயோர் எல்லாரையும் வதைத்து
, எந்த யுகத்தில் உள்ளவர்களும் காண முடியாத
வைகுண்டம் சென்றதையும். பொல்லாத தன்மை
வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத மாபாவியும்,
கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் ஆகிய
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்... -------------------------- அய்யா உண்டு --------------------------


முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து
பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும்
தீசாதியான துரியோதனன் முதலாய்
அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து
எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப்
பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்:
முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின் 
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய உடலை
 இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி, பத்துத் 
தலைகளையுடைய இராவணனையும் எதிர்த்து வெற்றி
 கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின் எதிர்ப்புகளை எல்லாம் 
அழித்து, எல்லாத் தேசத்தில் உள்ளவர்களும் தலை கவிழ்ந்து
, பணிந்து, கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச் சார்ந்த
 துரியோதனன் முதலாக அந்த யுகத்தில் உள்ள தீயோர்
 எல்லாரையும் வதைத்து, எந்த யுகத்தில் உள்ளவர்களும்
 காண முடியாத வைகுண்டம் சென்றதையும். பொல்லாத
 தன்மை வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத 
மாபாவியும், கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் 
ஆகிய அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்...
---------------------
அய்யா உண்டு 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக