திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

பஞ்சவரைக் கொல்லத் துரியோதனன் சதிகள்*****
பாதாளம் வெட்டிப் பார் வீமனை ஓட்டி
நீதாளமான நெடியோன் அது காத்தார் 
கன்னிதனில் பாவி கழு நாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தாரே
அரவதையும் விட்டு அருள்வீமனை வதைத்தான்
விரைவுடனே மாயன் விசம் தீர்த்துக் காத்தாரே
தண்ணீரில் நஞ்சை விட்டுச் சதித்தானே ஐவரையும்
மண் ஈரேழும் அளந்த மாயன் அது காத்தார்
பூதத்தை ஏவிப் பொன்ற வைத்தான் மாபாவி
நீதத் திருமால் நிலை நிறுத்திக் காத்தாரே
---------
உரை
---------
2. பெரிய பாதாளம் வெட்டிப் பாறை போன்ற பீமனை அதற்குள் தள்ளிக் கொல்ல முயன்றான். அவர்களை நீதிக்கு இடமான நெடியோன் காத்தார்.
3. ஆற்றினில் கழு மரங்களை நாட்டி ஐவரையும் கொல்லத் தூண்டினான்; அவர்களை மலையைத் தூக்கி மக்களைக் காத்த கிருஷ்ணன் காத்தார்.
4. கடும் விஷம் கொண்ட பாம்பை விட்டு அருளுடைய வீமனைக் கொத்த வைத்தான். பாம்பின் விஷத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணன் அவனைக் காத்தார்.
5. தண்ணீரில் நஞ்சைச் சேர்த்துப் பஞ்சவரைக் கொல்ல முயன்றான். பதினான்கு உலகும் அளந்த கண்ணன் அவர்களைக் காத்தார்.
6. அவர்களைக் கொல்ல பூதத்தை அனுப்பி வைத்தான். நீதியை நிலை நாட்டும் கிருஷ்ணன் அப்பூதத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களைக் காத்தார்.
---------------------



பஞ்சவரைக் கொல்லத் துரியோதனன் சதிகள்*****
பாவி துரியோதனனும் பஞ்சவரைக் கொல்ல என்று
ஆவி அவன் செய்த அநியாயம் அத்தனையும் 
ஒக்க ஒருமிக்க உரைக்கக் கேள் ஒண்ணுதலே
நஞ்சைக் கலந்து நல்ல தயிர் என்று ஈந்தான்
அஞ்சல் என்று மாயன் அது காத்தார் அம்மானை
---------
உரை
---------
இனிப் பாவி துரியோதனன், பாண்டவரைக் கொல்ல ஆசை கொண்டு செய்த அநியாய காரியங்கள் அத்தனையும், சேர்த்துச் சொல்லுகின்றேன், பெண்மயிலே, நீ கவனமாகக் கேட்பாயாக."
1. தயிரில் நஞ்சைக் கலந்து, இது நல்ல தயிர் என்று பஞ்சவர்க்குக் கொடுத்தான். தஞ்சம் கொடுத்த கிருஷ்ணன் அவர்களைக் காத்தார். ...



பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
சித்திரம் போல் வேண்டித் தெளிந்து இருந்தார் அம்மானை
மாயனும் சொல்லி மண்டபத்தில் போன பின்பு 
தூய வியாகரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமால் இன்றுமுதல்
தஞ்சம் என்று சொல்லித் தாம் போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்தில் அந்த ஐந்துபேரும்
ஓமுனியே தஞ்சம் என்று உகந்து இருந்தார் அம்மானை
---------
உரை
---------
பிறகு தூய வியாசர் தருமரிடம், "பாண்டவர்களே, உங்களுக்குப் பச்சைமாலாகிய கிருஷ்ணன் இன்றுமுதல் அபயம் தருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார். இனிக் கவலையற்று இருங்கள்" என்று கூறி, வியாசரும் தமது இருப்பிடம் நோக்கிச் சென்றார்.
இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணனும், வியாசரும் சென்று விடவே, வனத்தில் இருந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் ஓமுனி கிருஷ்ணனே தஞ்சம் என வாழ்ந்தனர்.
---------------------



*பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
ஐயாயிரம் கோடி ஆட்கள் மிகவந்தாலும்
என்பேர் அரிதான் எனை நினைந்து பாண்டமதில் 
அன்பரே நீரை அது நிறைய வார்த்தவுடன்
என்பேர் அரியை எடுத்து அதில் இட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளரும் என்றார்
இத்தனையும் சொல்லி ஈந்தாரே அன்பருக்கு
---------
உரை
---------
(கிருஷ்ணர் தருமரிடம்...) என்னை நினைத்து இந்தச் சூரியபாண்டத்தில் நிரைய நீரை விட்டு என் பெயரையுடைய 'அரி'யை எடுத்து இதனுள் இட்டுப் பக்குவப்படுத்தி அதை உண்டால் ஐயாயிரம் கோடி ஆட்களுக்கும் அதிகமான ஆட்கள் வந்தாலும் அவர்கள் எல்லாருக்கும் கிடைக்கும் அளவு அமுத அன்னம் வந்து கொண்டே இருக்கும்" என அதன் இரகசியத்தைக் கூறித் தன் அன்பர் தருமருக்குக் கொடுத்தார். அதை அதிசயமான பொருள் போன்று பணிவுடன் பெற்று மனத்தெளிவு பெற்றனர். இவ்வாறு மாயன் சொல்லி விட்டு, துவரயம்பதி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.
---------------------


*பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
அப்போது தர்மர் அச்சுதரையும் போற்றி
இப்போது எங்களுக்கு ஏற்ற பசி தீர்க்கச் 
சூரிய பாண்டம்தனை அழைத்துச் சுத்தமனே
ஆரியமான அன்னம் அருளும் என்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓர் அரியும்
கையால் எடுத்துக் கனத்த தர்மர் கைக்கொடுத்து
---------
உரை
---------
தருமர் ஸ்ரீ கிருஷ்ணனைப் போற்றித் துதித்து "சுத்தமான உள்ளத்தவரே, எங்களுக்கு அதிகமாகப் பசிக்கிறது. எமது பசி தீர்க்கச் சூரியபாண்டம் வரவழைத்து, பரிசுத்தமான அன்னம் அருள வேண்டும்" என்று பணிவுடன் வேண்டினார். உடனே, ஸ்ரீ கிருஷ்ணர் ஆதியாகிய சிவனை நினைத்து உண்மைத் தன்மையான சூரியபாண்டம் ஒன்றை வருத்தி, கையில் ஓர் அரிசியையும் எடுத்து, உயர்வு பொருந்திய தருமரின் கையில் கொடுத்து, "தருமரே, கேட்பீராக. இதுவும், என் பெயரும் 'அரி' தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
நாராயணர் வரவே நல்ல தர்மாதிகளும்
பாரானதை ஆண்டோன் பதம் பூண்டார் அம்மானை 
கால் பிடித்துத் தர்மர் கண்ணன் பதம்தொழவே
மால் பிடித்துத் தர்மரையும் மார்போடுற அணைத்து
பதறாதே பாண்டவரே பக்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோம் என உரைத்தார்
---------
உரை
---------
ஸ்ரீ கிருஷ்ணரும் வியாசரும் தம்மிடம் வந்தவுடன் தருமரும் அவரது தம்பிகளும் இவ்வுலகத்தை ஆளுபவராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். இவ்வாறு தமது கால்களைப் பிடித்த தருமரைத் தூக்கித் தமது மார்போடு சேர்த்தணைத்து, "பாண்டவர்களே, சற்றும் பதட்டமடையாதீர்கள் இனி நீங்கள் கதறி அழவேண்டிய தேவையில்லை. உங்களை நாம் காத்துக் கொள்வோம்" என்று அபயம் கொடுத்தார்.
---------------------



பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
ஐபேரும் பத்தினியும் அந்த வனந்தனிலே
பசுப்போல் கதறிப் பசித்திருந்து வாடுகிறார் 
அன்று மகாமேருவில் அடியேன் மொழிந்தபடி
இன்று பாரதம் முடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவனார்
அன்று திருமால் ஐவரிடம் நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் மாயவரும்
சீதக்குணத் தர்மர் முன்னே சென்றனர்காண் அம்மானை
---------
உரை
---------
(வியாசர் கிருஷ்ணனிடம்...) அந்த வனத்தில், பஞ்சவரும் அவர்கள் மனைவி திரௌபதியும், உணவில்லாத பசுவைப் போன்று கதறிப் பசியோடிருந்து வாடுகின்றனர். அன்று ஒரு நாள் மகாமேருவில் தங்களிடம் அடியேன் சொன்னபடி இன்று பாரதத்தை முடித்து வைக்கும் நாளாகி விட்டது. நீர் எழுந்து வேண்டிய நிகழ்ச்சிகளைக் கவனித்து அருள்வீராக"" என்று வியாச முனிவன் எடுத்துரைத்தான். உடனே கிருஷ்ணர் பஞ்சபாண்டவரை நோக்கி நடக்கலுற்றார். வேதவியாசரும் புல்லாங்குழல் ஊதும் அந்தக் கிருஷ்ணருடன் நடந்தார். அவர்கள் இருவரும் குளுமையான குணம் படைத்த தருமரின் முன்னால் சென்றடைந்தனர்.
---------------------



பஞ்சவரிடம் வியாசர் கிருஷ்ணனை அழைத்துச் செல்லல்*****
வனவாசம் தன்னில் வந்திருந்து ஐபேரும்
இனமானது போல் இருந்தார் குகையதிலே 
அப்போது வேதவியாசர் அவரறிந்து
செப்போடு ஒத்த திருமால் அருகேகி
மாயவரே பஞ்சவர்க்கு வரமதாய்த்தான் இருந்து
தீய துரியோதனனைச் செயிக்க வந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுது சூதாடி வென்று
வஞ்சகமாய்ப் பாவி வனத்தில் துரத்தி விட்டான்
---------
உரை
---------
வனத்தில் வனவாசம் கொண்டிருந்த பஞ்சவர்கள் ஒற்றுமையாகக் காட்டில் உள்ள குகையில் வாழ்ந்து வந்தனர்.
அவ்வேளையில், வேதவியாசர் பஞ்சபாண்டவர் நிலையை அறிந்து கருஞ்சிவப்பு நிறத்தை ஒத்த திருமாலின் அருகே சென்று "கிருஷ்ணா, பஞ்சவர்களுடன் அன்பாக இருந்து, தீமை பொருந்திய துரியோதனனை வெற்றி கொள்ள அவதாரம் எடுத்து வந்த இறைவனே, பஞ்சபாண்டவரை மாபாவியாகிய துரியோதனன் தந்திரமான வழியில் சூதாடி வெற்றி கொண்டு, வஞ்சகத் திட்டத்தினால் அவர்களைக் காட்டினில் துரத்தி விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக