திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...மாண்டனன்காண் பாவி வலிய மலைபோலே
பாவி மடிய பரமேசுரனாரும் 
தாவிச் சலத்தால் சதுரயுகம் அழித்தார்
சதுரயுகம் அழிய தானவர்கள் எல்லோரும்
முதுரமொழி ஈசன் மலரடியைத்தான் பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந்திரன் முதலாய்
மூவரும் வந்து முதலோன் அடிபணிந்து
பரமனே நீரும் படைத்த யுகம் இரண்டதிலும்
வரமேதும் கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே...
---------
உரை
---------
இதனால் பாவியாகிய குண்டோமசாலி மாண்டு, பெரிய மலை போல விழுந்தான். குண்டோமசாலி இறந்ததும் ஈசர் உடனே நீரினால் சதுரயுகத்தை அழித்து விட்டார். இவ்வாறு சதுரயுகம் அழிந்திடவே, தேவர்கள் எல்லாரும் தேன் போன்ற மொழியை உடைய ஈசரின் மலரடியைத் தொழுது, தேவர்களும், பிரம்மனும், தேவேந்திரன் முதலாய் மூவர்களும் வந்து, எல்லாருக்கும் முதல்வரான ஈசர் பாதங்களைப் பணிந்து வணங்கி,
"பரமனே, நீர் படைத்த இரண்டு யுகங்களிலும் உம்முடைய வரங்களைப் பெற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரையும் காண முடியவில்லையே?, வரம் பெற்றதற்கான அழகும், இனிமைத் தன்மையும் உள்ள வாழ்க்கையுள்ளவர் இலரே? ...
---------------------


*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவர
காவாலி மாயன் கன்னியிலே தூண்டல் இட 
சதுரயுகம் ஆளும் சண்டித்தடி மூடன்
எதிரே வரும் ஆற்றில் இரையை மிகக்கொண்டு ஆவி
நாடிப் பசிதீர நல்ல இரையாகும் என்று
ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டில்தனை
தூண்டில் விழுங்கிச் சுரண்டி மிகக்கொளுவி
---------
உரை
---------
...மூவர்களும் அந்தத் தோணியைத் தள்ளி வர, வாலியை அழித்து ஆட்கொண்ட மாயன் சதுரயுகம் என்னும் ஆற்றிலே தூண்டிலை இட்டார்.
சதுரயுகத்தை ஆட்சி புரிந்து வந்து குண்டோமசாலி ஆற்றில் தனக்கு எதிரே வந்து கொண்டிருக்கும் இரையைத் கண்டு, ஆசை கொண்டு, "பசி தீருவதற்கு இது நல்ல இரையாகும்" என்று ஓடி வந்து இரையோடு தூண்டிலையும் விழுங்கினான். இவ்வாறு விழுங்கிய தூண்டிலிலிருந்த சுரண்டி வாயினுள்ளே கொழுவிக் கொண்டது.
---------------------



*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...வானமது அலைய வாய்விட்டான் கண்டாயோ
என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும் 
அன்று மகாமாலும் அக்குண்டோம சாலியனுக்கு
இரையாகத் தேவர்களை ஏற்ற நாங்கிலாக்கி
வரையானதைத் தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன்தனை மிதப்பாய்
தேயமதைச் சுழ்ந்திரைக் கடலைத்தான் வருத்தி
ஓடையாய்ச் சதுரயுகம் வழியேதான் ஏக
தேட அரிய மாயன் திருஓணிதான் ஏறி ...
---------
உரை
---------
...இந்த மேல்லோகம் அசையும் அளவிற்குச் சத்தமிட்டான், அறிந்து கொள்வாயாக"" என்று மாயனுக்குத் தெளிவாக விளக்கினார்.
இவ்வாறு சிவன் உரைத்தவற்றைக் கேட்டு, மாயவர் குண்டோமசாலியனை அழிக்கப் புறப்பட்டார்.
குண்டோமசாலிக்கு இறையாகத் தேவர்களை நாங்கூழ் புழுவாக்கி, மலைகளைத் தூண்டிலாக்கி, வேதங்களைக் கயிறாக்கி, காற்றைத் தோணியாக்கி, வருணபகவானை மிதப்பாக்கி, தேசம் எல்லாம் சூழ்ந்துள்ள கடலை வருத்தி, சதுரயுகத்தை ஓடையாக்கி, அதன் வழியே செல்வதற்கு மாயன் தயாரானார்.
பிறகு, தேடுவதற்கு அரிய மாயன் வாயுவாகிய தோணியில் ஏறினார். ...
---------------------



*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
... தவமே தவப்பொருளே தாண்டவச் சங்காரவனே
எவனோ ஒருத்தன் இட்ட சத்தமதினிலே 
தவலோகமே எல்லாம்தாம் அலைவது ஏது எனவே
மாயன் அதுகேட்க வகுப்பார் அங்கு ஈசுரரும்
ஆயனே நீயும் அரியலையோ ஞாயமது
குண்டோமசாலி கொடிய மாபாவியனாய்
பண்டு ஒரு குறோணி பாதகன்தன் துண்டமதாய்
பிறந்தான் அவனும் பேருதிரம் தன்கிளையாய்
இறந்தார் அவர்கள் இரையாய் அவன்தனக்கு
ஆன பசி ஆற்றாமலே அவனும் ...
---------
உரை
---------
"தவமாக இருப்போனே, தவத்துக்குக் காரணமான பொருளே, தாண்டவமாடிச் சங்காரம் செய்பவனே, எவனோ ஒருவன் பலமாகச் சத்தமிடுகிறான். அதனால் தேவலோகம் முழுவதும் அசைவதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.
ஈசர், "இவ்வுலக மக்களை நடத்தும் ஆயனே, அதன் காரணத்தையும் அறியாமலா இருந்தாய்? இப்போது அதன் காரணத்தைக் கூறுகிறேன், கேள். சத்தமிட்ட இவன் குண்டோமசாலி ஆவான். இவன் கொடிய மாபாவியாய்ப் பிறந்த குறோணி என்னும் பாதகனின் ஒரு துண்டத்திலிருந்து பிறந்தவன் ஆவான். குறோணியின் இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரக் குலத்தை முழுவதும் இக்குண்டோமசாலி விழுங்கியும் பசி தீராமல்...
---------------------


*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...உடை தோள் உடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன்தனை அறியான் பாரி என்றும் அறியான் 
அட்டைபோலே சுருண்டு அம்மிபோலே கிடப்பான்
மட்டை போலே சுருண்டு திரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத்தில் உள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக்கு இட்டுத் தடிபோல் உருண்டிடுவான்
இப்படியே நாளும் இவன் குலங்களானது எல்லாம்
அப்படியே தின்று அவன் பசி ஆற்றாமல்
அய்யையோ என்று அலறினன்காண் அம்மானை
மெய் ஐயனான விருமா அது கேட்டு
சிவனைத் தொழுது செப்புவார் அம்மானை...
---------
உரை
---------
அவன் தனது நல்ல பலத்தையுடைய தோள், உடம்பு, போன்றவற்றை ஆடை கொண்டு காக்கத் தெரியாத மகாபாவி ஆவான். அவன் தன்னைப் படைத்தவனையோ, தன் மனைவியையோ அறியாது, அட்டை போன்று சுருண்டு, அம்மி போன்று உறுதியாகக் கிடந்தான். முட்டாளைப் போலத் திரிவான்; வயிறு மிகுதியாகப் பசித்து விட்டால் அந்த யுகத்தில் உள்ள அசுரக் குலமக்களையும் விழுங்கி விட்டுப் பெரிய தடி போன்று உருண்டு கொண்டிருப்பான்.
இப்படியே இவன் தன அசுரக் குலம் முழுவதும் தின்றும் பசி தீராமல் "அய்யோ" என்று அலறினான். இலட்சுமியே, நீ கேட்பாயாக.
உண்மையுள்ள தலைவனான மாயன் இதனைக் கேட்டுச் சிவனிடம் சென்று தொழுது கூறலுற்றார்.
---------------------



II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
சதுரயுகம் எனவேதாம் வகுத்தார் ஒரு பீடத்தை
அவ்வுகத்தில் உதிரும் அசுரக் குலமாகி 
முவ்வுகத்துப் பாவி முடிந்த ஒரு துண்டமதைக்
குண்டோமசாலி எனவே கொடியவனாய்ப்
பண்டு ஒரு குறோணி பாதகன் ஆறு துண்டமதில்
வந்து பிறந்தான் சதுர வையகத்தில் அம்மானை
முந்து பிறந்த முழுமோசம் ஆனதிலும்
மந்த முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறாயிரம் முழங்கள் நாடும் அவன்கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே ...
---------
உரை
---------
ஆறு பீடங்களுள் ஒரு பீடத்தைச் சதுரயுகத்துக்காகப் பிரித்தார்.
முன்னாள் முடிந்த யுகத்தின் பாவியாகிய குறோணி என்பவனுடைய ஆறு துண்டங்களில் ஒரு துண்டம் மூலமாகக் குண்டோமசாலியன் சதுரயுகத்தில் வந்து பிறந்தான். பிரித்தெடுத்த பீடத்தில் உள்ள குறோணியின் இரத்தம் அசுரக் குலமாகியது. இலட்சுமியே, நீ கேட்பாயாக.
அழகற்ற வகையில் காட்சியளித்த அவனது முகம் முன்னர்ப் பிறந்த குறோணியைவிட மோசமாக இருந்தது. அவனுடைய உயரம் நானூறு ஆயிரம் முழங்களாம். அவனது கைகள் முந்நூறு முழங்கள் நீளமுடையன. அவனது கால்களும் கைகளும் யானையின் துதிக்கை போன்று காட்சியளித்தன.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக