திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

வீரவாகுதேவர் தூது*****
... சாமி மனம் மகிழ்ந்து சூரன்தனை அறுக்கச்
சாமி வேலாயுதத்தைக் கையில் எடுத்தார் அம்மானை 
வேலாயுதம் எடுத்து வேலப்படை சூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவரும்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தான் அம்மானை
சூரன் அவன்கண்டு தோசப்படை அணிந்து
முரண் படைக்கு முன்னே நடக்கலுற்றான் ...
---------
உரை
---------
கந்தசுவாமி மகிழ்ச்சி அடைந்து, சூரனை அழிக்க வேலாயுதத்தைக் கையில் எடுத்து, வேல்படை சூழ, மிகவும் துணிச்சலாய்ச் சூரனை நோக்கி நடந்தார். இலட்சுமிதேவியே, நீ அறிவாயாக.
கந்தனுடைய வேசத்திலிருந்த மாயவர் வருவதைக் கண்ட சூரனுடைய வலிமை முழுவதும் அழிந்து விட்டது, எனினும், படையுடன் வந்த கந்தசுவாமியை நோக்கிச் சூரனும் தோசம் பொருந்திய படைகளை அழைத்துக் கொண்டு படைகளின் முன்பாக நடந்து வந்தான்.
---------------------


வீரவாகுதேவர் தூது*****
...ஆண்றே மனது அளறித் துணிந்து ஏதுரைப்பான்
ஆனால் அறிவோம் ஆண்டிதனையும் இங்கே 
போனால்தான் என்னோடே போர் செய்ய ஏவிடு நீ
சூரன் இது உரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு ...
---------
உரை
---------
தூதனின் வார்த்தைகளைக் கேட்டதும் மனமானது சஞ்சலப்பட்டு ஒருவாறு துணிச்சல் கொண்ட சூரன், "தூதுவனே, போர் முடிந்த பிறகுதான் ஆண்டியின் இயலாமையை அறிவோம், நீ போனால்தான் எனக்கு நன்மை; நீ சென்றவுடன் கந்தனை என்னோடு போர் செய்வதற்கு அனுப்பி விடு" என்று கூறினான்.
இதைக் கேட்ட வேலாயுதத்தையுடைய கந்தனின் தூதுவன் அங்கிருந்து விரைவாக நடந்துவந்து எல்லாவற்றையும் கந்தனிடம் தூதுவன் விளக்கிக் கூறினான்.
---------------------



வீரவாகுதேவர் தூது*****
... தேவர் சிறையும் தெய்வ மடவார் சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்கம்தான் தீர்த்து 
உன்னுடைய சேனை உற்றபடை அழித்து
நின்னுடைய கோட்டைதன்னை நீறு பொடியாக்கி
அரசாள்வார் எங்கள் ஆறுமுக வேலவனார்
என்றேதான் தூதன் இவை உரைக்கச் சூரனுந்தான் ...
---------
உரை
---------
தேவர்கள், தெய்வக்கனியர், மூவர்கள் ஆகியோரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவர்கள் அனுபவித்துவரும் தொல்லைகளையும் தீர்த்து, உனது ஆயுதங்கள், படைகள் எல்லாவற்றையும் அழித்து, கோட்டைகளைத் தூள் தூளாக்கி எங்கள் கந்தசுவாமி ஆகிய ஆறுமுகவேலவன் இங்கு ஆட்சி புரிவார்" என்று தூதன் உரைதான்.



வீரவாகுதேவர் தூது*****
...உன்றனுட கந்தன் உயரமது நான் அறிவேன்
என்றனுட உயரம் இனி நீ அறிவாயோ 
ஆனதால் என்னுடைய ஆங்காரம் அத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக்கே உரை நீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அறையாமல் அச்சூரனுக்கு ஏதுரைப்பான்
நீயேதான் எங்கள் நிமலன்தமக்கு எதிரி
பேய் ஓரி நாய் நரிகள் பிய்த்துப் பிடுங்கி உன்னைக்
கண்ட இடத்தில் கழுகுகள் மிகப்பிடுங்கிக்
கொண்டு ஓடித் தின்ன வேலாயுதம் கொண்டு வந்தார் ...
---------
உரை
---------
உன்னுடைய கந்தசுவாமியின் சக்தியை நீ இப்பொழுது அறிந்து கொண்டாய்.
எனவே என்னுடைய மூலப்பலத்தை எல்லாம் காட்டில் வாழும் கந்தனுக்கு நீ விளக்கிச் சொல்லி விடு" என்று ஆணவத்துடன் சூரன் பேசினான்.
உடனே, அந்தத் தூதன் அஞ்சாமல் அமைதியாகப் பதில் உரைக்கலுற்றான். "நீதான் எங்களுடைய மாசற்ற கந்தனுக்கு எதிரியாவாய். பேய்களும், ஆண் நரிகளும், நாய்களும், பெண் நரிகளும், கழுகுகளும் உன்னைக் கொண்டுபோய்ப் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் உணவாக்கக் கந்தசுவாமி வேலாயுதம் கொண்டு வந்துள்ளார்.
---------------------


வீரவாகுதேவர் தூது*****
...ஆரடா நீதான் அறியாயோ என்பெலங்கள்
பாரடா உன்றன் கந்தன் படுகிறதை 
ஈசுரனும் என்றனக்கு இருந்த இடமும் அருளி
மாயனிடம் போய் அலையில் வாழ்ததுவும் கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திர லோகம்வரையம்
நவகோளும் நான் அல்லவோ நாட்டம் அறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்ற தேவாதிகளும்
நாற்பத்து நாற்கோடி ரிஷி நமக்கு என்று அறிந்திலையோ
அறியாதவனோகாண் ஆண்டிக்குத் தூது வந்தாய்
சிறியன் என்று இராதே என்சிரசு உடம்பு கண்டிலையோ ...
---------
உரை
---------
இவ்வாறு கூறிய சூரன், தூதுவனை நோக்கி, "யாரடா நீ? என்னுடைய பலத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா? உன்னுடைய கந்தன் படும் துன்பத்தை எல்லாம் இனி நீ பார்ப்பாய், ஈசன்கூட எனக்கு அவன் இருந்த கயிலையை அளித்து விட்டு மாயன் இருக்கின்ற அலையில் போய் வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா? எமலோகம், வானலோகம், இந்திரலோகம் முழுவதையும், நவக்கோள்களையும் நானல்லவா ஆட்சி புரிகின்றேன். என் சக்தியை நீ அறியவில்லையா? `முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து நாலுகோடி ரிஷிகளும் எனக்குக் கீழ் அடங்கி வாழுகின்றார்கள் என்பதையும் நீ அறியவில்லையா? இவற்றை அறியாத நீயா அந்த ஆண்டிக்காகத் தூது வந்தாய்? நான் சிறியவன் என்று எண்ணாதே, என் சிரசுகளையும் உடம்பின் நிலையையும் நீ இன்னும் காணவில்லையா?
---------------------



வீரவாகுதேவர் தூது*****
... தூதன் மிகநடந்தான் சிவனே செயல் எனவே
காதம் ஒன்றுதான் கடந்து கண்டானே சூரனையும் 
கந்தசுவாமி கருத்தாய் உரைத்தது எல்லாம்
அந்த அசுரனுக்கு அத்தூதன்தான் உரைத்தான்
சூரா கேள் கந்தசுவாமி அருள் என்றுரைக்க
ஏறாத பாவி இகழ்த்தினான் அப்போது
தூதன் என்றோன் போகாமல் தொடர்ந்து மிகப்பிடித்துப்
பாதப் பெருவிலங்கில் பாவியை வை என்றுரைத்தான் ...
---------
உரை
---------
"இவை எல்லாம் சிவனுடைய செயல்" என்று எண்ணித் தூதன் சூரனை நோக்கி நடந்து சென்றான். தூதன் ஒரு காத தூரம் நடந்து சென்று சூரனைக் கண்டான்; கந்தசுவாமி கூறிய உரைகளை எல்லாம் அந்தச் சூரனுக்கு எடுத்துரைத்தான். "சூரனே, இது கந்தசுவாமியினுடைய அருள் வாக்காகும், இதை நீ கவனமாக கேட்டு அதன்படி நடப்பாயாக" என்று தூதுவன் கூறினான். உண்மைத் தன்மையைப் புரியாத பாவியான சூரன் சுவாமியை இகழ்ச்சியுடன் பேசினான். பிறகு தூதனைத் திரும்பிப் போக விடாமல் பிடித்து "பாதங்களில் பாதவிலங்கு இட்டு, இந்தப் பாவியைச் சிறையில் வையுங்கள்." என்று கட்டளை இட்டான்.
---------------------


*வீரவாகுதேவர் தூது*****
சந்து மிகச்சொல்லித் தாம் விட்டார் சூரனுக்கு
சூரன் இடத்தில் தூதா நீ சென்று ஏகி 
பாரமுள்ள கயிலை பருவதமும் தேவருட
சிறை அகற்றி வானோர் தேவரையும் நீ அனுப்பித்
திறவனாகச் சீமை அரசாளும் என்று
இப்படியே ஆகாட்டால் இன்று கழித்து எட்டாம் நாள்
அப்படியே என்றுதான் கூறிவா எனவே
சண்டை என்றுதான் கூறிவா எனவே
அண்டர்பிரான் தூதுவனை அனுப்பினார் அம்மானை ...
---------
உரை
---------
அங்கிருந்து சூரனுக்கு ஒரு தூதுவனை அனுப்பினார். அந்தத் தூதுவனிடம், "தூதுவனே, நீ சென்று, சக்தி வாய்ந்த கயிலை மலையில் உள்ள தேவர்களையும் வானோர்களையும், கயிலைக்கு அனுப்பிவிட்டு உன் நாட்டைத் திறமையுள்ளவனாக அரசாள வேண்டும். அப்படி நீ செய்யாவிட்டால் இன்று கழித்து எட்டாவது தினத்தில் உனக்கும் கந்த சுவாமிக்கும் யுத்தம் நடக்கும். நீ தயாராக இரு என்று கூறி வா" என்று தூதுவனிடம் கந்தன் கூறி அனுப்பினார். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக