திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

இராம அவதாரம்*****
என்று அரனார் சொல்ல எம்பெருமாள் அச்சுதரும்
அன்று எம்பெருமாள் ஆலோசனையாகி 
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரம்கேட்டு உலகில் தவமிருக்க
அன்னுகத்தில் உள்ள அரசன் தினகரனும்
பொன்னுத் திருவைப் பிள்ளை என வந்துதிக்க
நிட்டையாய் அரசர் நெடுநாள் தவமிருக்க
சட்டம் அதைப் பார்த்துதான் அனுப்பும் ஈசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
---------
உரை
---------
உடனே, மாயன் வேறு என்ன வழி உண்டென்று சிந்தனையில் ஆழ்ந்தார், பிறகு ஈசரிடம், "நான் ஆண் குழந்தையாகப் தனக்குப் பிறக்க வேண்டும் என்று தசரதரும் , இலட்சுமி பெண் குழந்தையாகத் தனக்குப் பிறக்க வேண்டும் என்று தினகரனும், முன்பே வரம் கேட்டு உலகில் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியே தவ நிலையில் அவர்கள் பல காலமாக அமர்ந்து இருக்கிறார்கள்.
எனவே ஈசுரரே, முன் சட்டத்தைப் பார்த்து என்னைப் பூலோகத்தில் அவதாரம் எடுக்க அனுப்ப வேண்டும்" என்று மாயன் ஈசரைப் பார்த்துக் கூறி விட்டு, மேலும் தொடர்ந்து கூறினார்.
---------------------



*மாயனும் ஈசரும் ஆலோசித்தல்*****
தள்ளினால் தேவரையும் தற்காக்க ஆருமில்லை
என்ன வசமாய் எடுப்போம் சொரூபமது 
தன்னிகர் இல்லாதவரே சாற்றுவீர் என்றனராம்
மாயன் இது உரைக்க மறையோன் அகம் மகிழ்ந்து
தூயவரும் அங்கே சொல்லுவார் அம்மானை
பாவி அரக்கனுக்குப் பண்டு நாம் ஈந்தவரம்
தாவிப் பறிக்கத்தான் ஆகாது என்னாலே
---------
உரை
---------
"நாம் முடியாது என்று ஒதுக்கி விட்டால் அவர்களைக் காத்துக் கொள்ள வேறு யாருமிலர். எனவே, இராவணனை அழிக்க என்ன விதமான உருவம் எடுக்க வேண்டும்? அதற்கு ஒரு வழியினைத் தனக்கு நிகரில்லாதவரே, நீர் அருளல் வேண்டும்." என்றார் மாயன். இவற்றை எல்லாம் மாயன் கூற, ஈசர் மனம் மகிழ்ந்து சொல்லலுற்றார். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
"மாயனே, இராவணன் என்னும் அரக்கனுக்கு முன்னாளில் நாம் கொடுத்த வரங்களை இப்பொழுது திரும்பப் பெறுவதற்கு இப்பொழுது திரும்பப் பெறுவதற்கு என்னால் முடியாதே!" என்று ஈசர் மாயனிடம் கூறினார்.
---------------------



மாயனும் ஈசரும் ஆலோசித்தல்*****
அபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியை மிகப்போற்றி 
சோதி திருமால் சொல்லுவார் அம்மானை
பத்துத் தலையையுடைய பாவி அரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததனால்
தேவரையும் மூவரையும் தெய்வேந்திரன் வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டான் அம்மானை
ஆனதால் தேவர் அபயமிடும் ஒலியை
ஈனமாய் கேட்டிருக்க முடிவதில்லை
பள்ளி உறக்கம் பரிவாய் வருவதில்லை ...
---------
உரை
---------
அபய ஒலியை நீக்க வேண்டி வேதனாகிய மாயன் கயிலைக்குச் சென்று ஆதி பரமனாகிய சிவனின் பாதங்களை நன்றாகப் போற்றி வணங்கி, தாம் வந்த காரணத்தைச் சோதி மயமாகிய திருமால் சொல்லலுற்றார்.
"ஈசுரரே, பத்துத் தலைகளுடைய இராவணனுக்குப் பலகோடி வரங்களைத் தாங்கள் கொடுத்த காரணத்தால் தேவரையும், மூவரையும், தேவேந்திரன்வரை அவனுடைய நான்கு அரசாண்டான். எனவே, தேவர்கள் அபயம் இடும் ஒலியைப் புறக்கணிக்கத்தக்கதாய் நினைத்து ஒதுக்கிவிட்டு, அவ்வொலியைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. அக்காரணத்தால் நான் பள்ளி கொள்ளும்போது எனக்கு நிறைவான தூக்கம் வருவது இல்லை."
---------------------




தேவர்கள் அபய ஒலி*****
அப்படியே அரக்கன் ஆண்டிருக்கும் அவ்வளவில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே 
தேவாதி தேவர் தினம் ஏவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்காமல் பாவி ஊழியங்கள் கொண்டதனால்
பொறுக்க முடியாமல் பூலோகத்தார்கள் எல்லாம்
தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்கு அபயம் அபயம் என
அபயமிடும் ஒலியை அச்சுதரும்தாம் அமர்த்தி
---------
உரை
---------
அப்படியே இராவணன் அரசாண்டு இருக்கும் சமயத்தில் முன் பிறவியில் விட்ட கர்மவினை முடிவாகும் சமயத்தில், தேவர்களும் மூவர்களும் ஏவல், ஊழியம் முதலியன செய்திட இராவணன் தனது ஆணவத்தால் அவர்கள் செய்யும் ஊழியங்களை ஏற்று வந்தான். எனவே, பூலோகத்து மக்களும், தெய்வக் கன்னிகளும், அய்யாவாகிய திருமாலை நோக்கி 'அபயம்', 'அபயம்', என்னும் ஒலியை எழுப்பினார்கள். இந்த ஒலியைத் திருமால் கேட்டு அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார்.



*இராவணன் கொடுமை*****
இவ்வுகத்தில் உள்ள ராசாதி ராசரெல்லாம்
முன்னுகமும் கப்பம் இங்கே முன்னாடி தராட்டால் 
நெருப்பு எடுத்து இட்டிடுவேன் நேரே கொண்டு வராவிட்டால்
எரிப்பேன் ஓர் அம்பால் இராசாதி இராசரையும்
இப்படியே பாவி இந்திரலோகம் வரையும்
அப்படியே அரக்கன் அடக்கி அரசாண்டிருந்தான்
---------
உரை
---------
"இவ்வுலகத்தில் ஆட்சி புரிந்து வருகின்ற மாமன்னர்கள் எல்லாரும் முன்புள்ள பாக்கிக் கப்பத்தையும், இப்பொழுதுள்ள கப்பத்தையும், சேர்த்து வரும் மொத்தக் கப்பத்தையும் கால தாமதமின்றி முன்னரே தராவிடில் நெருப்பெடுத்துச் சுட்டிடுவேன்; கப்பத்தைக் கட்டப் பிந்திய அரசர்கள் நேரடியாகக் கொண்டு தரவில்லையெனில், அவர்களை அம்பினால் எரித்து அழித்து விடுவேன்", என்று கூறுவான்
இப்படியாக இராவணன் என்னும் பாவி இந்திர லோகம்வரை அவனுக்கு உகந்த வகையில் சட்டம் இயற்றி அப்படியே அவன் எல்லாரையும் அடக்கி அரசாண்டு வந்தான்.
---------------------




*இராவணன் கொடுமை*****
... வானவர்கள் எல்லாம் மலர் எடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்து நில்லாதே இருந்தால் 
சாகும் வரைக்கும் தடி இரும்பில் இட்டு அவரை
வேகும்படிக்கு வேள்வியதில் இட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்து என்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசர் கண்ணால் எரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் எமனையும் காலனையும்
துன்னுடைய வல்ல தூதனையும் நான் எரிப்பேன் ...
---------
உரை
---------
"வானவர்களாகிய தேவர்கள் எல்லாரும் பூக்களை எடுத்து என் பாதங்களில் தானமாகப் போட்டுப் பணியாவிட்டால் சாகும்வரை அவர்களை விலங்கில் போட்டு வைப்பேன்; பிறகு அவர்களை வேள்வியில் இட்டு வேகும்படி செய்வேன்" என்பான்;
"எமன், தூதன், காலன் ஆகிய மூன்று எமலோகத்தவர்களும் பணிந்து வந்து என் சொல் கேட்டு அதன்படி நடக்காவிட்டால், காமனை ஈசன் நெற்றிக் கண்ணால் எரித்ததைப் போல, என்னுடைய கண்களால் அம்மூவரையும் எரித்து விடுவேன்" என்பான்;
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக