திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*தெய்வகியும் ரோகிணியும் கற்பழிதல்*****
காலில் சிவச்சக்கரமும் கையில் மால்சக்கரமும்
மேலில் சத்திச்சக்கரமும் விழி சரசுச்சக்கரமும் 
வாயு பகவான் வடிவு மிகப்போலே
ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர் போல்
கண் கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழுகு
விண் கொள்ளாக் காட்சி மெல்லியரே இம்மதலை
இம்மதலை தன்னை எடுத்து நாம் தாலாட்டிப்
பொன்மதலை தன்னைப் போட்டு வைத்துப் போவோம் நாம்
என்று சொல்லி மாதர் இருபேரும் சம்மதித்து
வண்டு சுற்றும் மெல்லி வந்தெடுத்தார் அம்மானை
மதலைதனை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்து
குதலை மொழி அமர்த்திக் கோதை இரு மாமயிலும்
---------
உரை
---------
(அக்காள் தெய்வகி தங்கை ரோகிணியைப் பார்த்து...)
அக்குழந்தையின் காலில் சிவச் சக்கரமும், கையில் திருமால் சக்கரமும், உடம்பு முழுவுதும் சக்திச் சக்கரமும், விழிகளில் சரசுவதிச் சக்கரமும் சுழன்று கொண்டிருப்பதைப் போன்றும், வாயு பகவானின் அழகு வடிவத்தைப் போன்றும்; இக்குழந்தையின் அழகு,ஆகாயத்தில்கூட அடக்க முடியாத அளவு பிரகாசிக்கின்றது. எனவே, இந்தக் குழந்தையை நாம் எடுத்துத் தாலாட்டி, அமர்த்தி விட்டுச் செல்லுவோம்" என்றாள். அக்கருத்தை இருவரும் சம்மதித்து, வண்டுகள் சுற்றும் மணம் பொருந்திய கன்னியர் இருவரும் அக்குழந்தையை எடுத்துத் தமது மார்போடு சேர்த்து அணைத்து, அதன் அழுகையைப் பாலூட்டி அமர்த்தி விட்டு, கயிலையை நோக்கிச் சென்றனர்.
---------------------



*தெய்வகியும் ரோகிணியும் கற்பழிதல்*****
மேலோகம் தன்னில் மிகுந்த தெய்வக் கன்னியரில்
வான மேலோகமான வாய்த்த கன்னி தெய்வகியும் 
ரோகிணியாள் என்னும் நுதல் மடவார் இரண்டுபேரும்
புரோகன்யமான பொய்கை நீர் தாமாடி
அக்காளும் தங்கையுமாய் அவர்கள் இரு மாமயிலும்
மிக்கான பட்டு உடுத்து மேவி வழிதான் வரவே
மாயன் சிறு மதலை வடிவெடுத்துத் தான் அழவே
ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்
தெய்வகியும் பார்த்துச் செப்புவாள் தங்கையிடம்
நெய் நிதிய கன்னி நெடிய விழி ரோகிணியே
இன்னா அழுது இதில் கிடக்கும் ஆண் மதலை
பொன்னான சீமையிலும் பெண்ணே நான் கண்டதில்லை
---------
உரை
---------
இங்கே இப்படி இருக்க, மேலோகமாகிய தெய்வலோகத்தில் உள்ள தெய்வக் கன்னிகளில் தெளிவாகி, ரோகினியாள் ஆகிய இருவரும், புகழ் பெற்ற பொய்கையில் நீராடினார். பிறகு அக்காளும் தங்கையுமாகிய அவ்விரு பெண்களும் அழகான பட்டாடை உடுத்தி, கயிலைக்குத் திரும்பும் வழியில் மாயன் சிறு குழந்தையாக உருவெடுத்து அவ்வழியில் அழுது கொண்டிருந்தார்.
மாயனின் மாயக் கோலத்தை அவர்கள் அறியாது அக்காள் தெய்வகி தங்கை ரோகிணியைப் பார்த்து "அழகு பொருந்திய திரவியம் போன்ற நீண்ட விழிகளுடன் கூடிய கன்னிப் பெண்ணாகிய ரோகினியே, இதோ! இந்த இடத்தில் அழுது கொண்டிருக்கும் இந்த ஆண் குழந்தையின் அழகு இலட்சணத்தைப் பொன்னாலாகிய கயிலையில்கூட நான் கண்டதில்லை.
---------------------


கஞ்சன் கொடுமை*****
சண்டனைக் கண்டது யார் என்பான் தன்னைப் பாவித்திருப்பான்
எம்மைப் படைக்க ஏலுமோ மற்றோர்க்கு 
நம்மைப் படைத்ததுவும் நான்தான் என உரைப்பான்
இப்படியே கஞ்சன் எதிரி இல்லை என்று சொல்லி
அப்படியே கூறி ஆண்டான்காண் அம்புவியை
---------
உரை
---------
தீயவனை ஆதரித்து, "அவன் அநியாயத்தை யார் கண்டார்கள்?" என்று கூறி, தனது வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்வான். "என்னை உருவாக்க யாராலும் முடியாது" என்று வீம்பு பேசி "என்னை உருவாக்கியது நானே" என்று ஆணவமாகப் பேசுவான். இப்படியாகக் கஞ்சன் "தனக்கு வேறு எதிரி இலர்" என்று சொல்லி நீதியை மீறி அரசாட்சி புரிந்தான்.
---------------------


கஞ்சன் கொடுமை*****
ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள் வையான்
சாலயங்கள் செய்யான் தர்ம சிந்தனைகள் செய்யான் 
அந்தணர்க்கும் ஈயான் அன்ன தானங்கள் இடான்
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக்கு அளியான்
ஆவுதனை அடைத்து அதுக்கு இரைகள் போடாமல்
கோவுகளைக் கொல்லுவான் கொடும்பாவி நிஷ்டூரன்
கண்ட வழக்கு உரையான் கைக்கூலி கேட்டு அடிப்பான்
---------
உரை
---------
ஆலயங்கள், கோவில்கள் அழிந்து போன மடங்கள் இவற்றைப் புதியதாக ஏற்படுத்த மாட்டான்; குளங்களைப் பெரிது படுத்தி நன்மை செய்ய மாட்டான்; தரும சிந்தனை சிறிதுகூட இல்லாதாவனாக இருந்தான்; அந்தணர்களுக்கு எதுவும் தானமாகக் கொடுக்கமாட்டான்; ஏழைகளுக்கு உணவுகூட அளிக்க மாட்டான்; தாகத்தோடு வந்த பக்தர்களுக்குப் பந்தலிட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டான்; பசுக்களை அடைத்து அவைகளுக்கு இரை போடாமல் கொன்றிடுவான் பாவி; தான் கண்ட உண்மையான நீதி வழியில் வழக்கை உரைக்க மாட்டான்; கைக்கூலி கேட்டு மக்களைத் துன்புறுத்துவான்.
---------------------


கஞ்சன் கொடுமை*****
தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே
வைப்பேன் பிடித்து வா எனவே ஆள்விடுவான் 
வருணனொடு வாயுவையும் வலுவிலங்கிலே போட்டு
அருணன் முதலாய் அந்தி வரும்வரையும்
வேலையவன் கொண்டிடுவான் அவன் தொழிலாய்
மாலை நினையான் மறையை மிக நினையான்
---------
உரை
---------
அந்த மகா பாவியானவன், "எனக்குத் தெய்வக்கன்னியர் உயர்வான கவரி வீச வேண்டும். அவர்களைப் பிடித்து வாருங்கள்" என்று ஏவலர்களை அனுப்புவான். அவனுக்கு ஏவல் தொழில் செய்வதற்காக வருண பகவானையும், வாயு பகவானையும். கடுமையான விலங்கிலே போட்டிடுவான். சூரிய பகவானை மாலை வரும்வரை தனது நாட்டில் வேலை செய்ய வைத்திடுவான்; பிறகு அவன் தொழிலுக்காக அனுப்பி வைப்பான். திருமாலை நினைத்துப் பார்க்க மாட்டான்; நான்கு வேதங்களையும் சிறிதுகூட ஆராயமாட்டான்.
---------------------



கஞ்சன் கொடுமை*****
கஞ்சன் அவன் பிறந்து கடிய கொடுமையதால்
வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும் 
சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு
இறை மிகுதி வேண்டி இராச்சியத்தை ஆண்டனனே
ஆனதால் அவனுடைய அம்புவியில் உள்ளவர்கள்
ஈனத் துன்பமாகி இருந்தார் பயமடைந்து
தேவரையும் வானவரையும் தெய்வேந்திரன் வரையும்
மூவரையும் சற்றும் முனியாமலே மாபாவி
---------
உரை
---------
பூலோகத்தில் கஞ்சன் பிறந்து அதிக கொடியவனாகவும், வஞ்சகத் தன்மை உள்ளவனாகவும் இருந்தான். தன்னைப் பெற்ற தாய் தந்தையரைச் சிறையில் வைத்துக் கொண்டு. அதிகமான வரி விதித்து நாட்டை ஆண்டான்.
எனவே, அவன் நாட்டில் உள்ளவர்கள் அதிகமான துன்பமடைந்து கஞ்சனைக் கண்டு பயந்து வாழ்ந்தனர். தேவர்களையும், ஏனைய வானலோகத்தோரையும், தெய்வேந்திரனையும் மூவர்களையும் உயர்ந்தவர்கள் என்று சற்றும் எண்ணிப் பார்க்காமல் வேலை வாங்கினான்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக