வெள்ளி, 21 நவம்பர், 2014

வரலாறு

அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.

தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு (2006) முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்விடுமுறையை நீட்டித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக