வெள்ளி, 21 நவம்பர், 2014

துவையல் பந்தி

அய்யா வைகுண்டர் மனிதர்களின் மனதைச் சுத்தம் செய்யவும், உடலைச் சுத்தம் செய்யவும், மனதின் சகலவிதமான பாவங்களைப் போக்கவும், மனிதர்கள் தங்களுக்குள்ளே காணப்படும் பகைகளைக் களைந்து சகோதரத்துவத்தையும், நட்பையும் ஏற்படுத்திட, ஏற்படுத்திய வழிபாட்டு முறையே துவையல் பந்தி வழிபாடு எனப்படுகின்றது.
அய்யா வைகுண்டர் தவத்தின் ஐந்தாவது வருட கடைசியில் கன்னியாகுமரிக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள வாகை பதியில் தனத தவம் நிறைவடையும் வண்ணம் தனது சீடர்களிடம் துவையல் பந்தி வழிபாட்டை நடத்துமாறு கூறினார்.
     எனவே அய்யா வைகுண்டர் கூறியபடி துவையல் பந்தி வழிபாட்டை நடத்திட சுமார் எழு±று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாகை பதி சென்று துவையல் பந்தி வழிபாட்டை மேற்கொண்டனர். இத்துவையல் பந்தி வழிபாடு ஆறு மாதங்கள் நடைபெற்றது. துவையல் பந்தியில் கலந்து கொண்டவர்கள் அய்யா வைகுண்டர் கூறியபடி கடலில் காலை, மாலை நீராடுவதையும், காலை, நண்பகல், மாலை வேளை தங்கள் ஆடைகளை சுத்தம் செய்து உடுத்துவதையும் முறையாகத் தவறாமல் செய்து வந்தனர். அத்தோடு நண்பகல் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொண்டும் வந்தனர்.
அரிசியும், சிறபயறும் கலந்து, கடல் வெள்ளத்தில் வேக வைத்த கஞ்சியே அவர்களது ஒரு நேர உணவாக இருந்தது. வாகை பதியில் குழுமியிருந்த மக்கள் அனைவரும் கடலில் நீராடி வழிபாடு முடித்த பின்னரே உணவு உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
     இவ்வழிபாட்டால் அய்யா பக்தர்களுக்கு வியாதியும், சிலர் மரணமடையவும் நேரிட்டது. இதனால் பக்தர்கள் அய்யா வைகுண்டரிடம் முறையிட்டனர். உடனே அய்யா வைகுண்டர் அவர்களது கனவில் தோன்றி முட்டப்பதிக்குச் செல்லும்படிக் கூறினார்.
     அய்யா வைகுண்டர் கூறியபடி அன்பர்களும் முட்டப்பதி சென்று அதே  வழிபாடுகளை மேற்கொண்டனர். முட்டப்பதியில் உணவு சமைக்கவும் குளிக்கவும் உமைடயைச் சுத்தம் செய்யவும் நல்ல தண்ணீரைப் பயன்படுத்தும்படி அய்யா வைகுண்டர் கூறினார். அதன்படி அன்பர்களும் செய்து வந்தனர். அன்பர்களது இவ்வழிபாடு நிறைவேறக் கூடாது என எதிரிகள் பல தடைகளையும் ஏற்படுத்தினர். அத்தடைகளை எல்லாம் அய்யா வைகுண்டர் தவிடு பொடியாக்கி துவையல் பந்தி வழிபாடு நிறைவேற வழிவகை செய்தார். அன்பர்களும் அய்யா வைகுண்டரின் அருளால் துவையல் பந்தி வழிபாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
     கலியனிடமிருந்து மக்கள் தங்கள் மனதினைக் காத்துக் கொள்ளும்படியே அய்யா வைகுண்டர் தம் மக்களிடம் இவ்வழிபாட்டை மேற்கொள்ளச் சொன்னார் எனலாம். இத்தவத்தின் பின்னரே அய்யா வைகுண்டர் நெற்றியில் நாம்ம் அணியும் வழக்கத்தை மேற்கொண்டார்17 என இசக்கிமுத்து கூறுகின்றார்.
 முத்திரிக் கிணறு
     தலைமைப் பதியின் வட மேற்குப் பகுதியில் முத்திரிக்கிணறு அமைந்துள்ளது. தலைமைப் பதியின் புகழ் பெற்ற தீர்த்தத் தலமாக இது விளங்குகின்றது. அய்யா வைகுண்டரின் காலத்தில் பொது இடத்தில் தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை இல்லை. அதை மீறி தண்ணீர் எடுப்பவர்கள் கடுமையாகதட் தண்டிக்கப்பட்டனர்.
     அக்கொடுமைகளுக்கு எதிராகவே அய்யா வைகுண்டர் இக்கிணற்றினை உருவாக்கினார். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து மக்களும் முத்திரிக் கிணற்றினைப் பயன்படுத்த அய்யா வைகுண்டர் அனுமதித்தார். இது மக்களிடையே நாம் அனைவரும் ஒன்று என்னும் உணர்வை ஏற்படுத்தியது.
     இதனைப் பொறுக்க முடியாத ஆதிக்கச்சாதிகள் கிணற்றிவ் விஷத்தைக் கலந்தனர். அய்யா வைகுண்டர் அவ்விஷத்தினை முறியடித்து மக்கள் பருகும்படியும் பயன்படுத்தும்படியும் செய்தார். விஷம் கலந்திருப்பது தெரிந்ததும் அய்யா வைகுண்டர் என்னை நம்புபவர்கள் குளித்துத் தண்ணீர் அருந்தும்படிக் கூறினார். அவரை நம்பிய மக்கள் குளித்துத் தண்ணீர் அருந்தினர். விஷம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அய்யா வைகுண்டரை நம்பாதவர்கள் மயக்கம் அடைந்தனர்.
     மயக்கமடைந்தவர்களைக் காப்பாற்றும்படி அன்பர்கள் வேண்ட அய்யா வைகுண்டர் முத்திரிக் கிணற்றின் தண்ணீரை எடுத்து மயக்கம் அடைந்தவர்களின் முகத்தில் தெளிக்க அவர்கள் #ங்கி எழுகின்றவர்கள் போல் எழுந்தனர்13.
     முத்திரிக் கிணற்றின் தண்ணரைக் குடிப்பதன் மூலமும், அத்தண்ணீரில் குளிப்பதன் மூலமும் தோல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் குணமடைவதாய் பக்தர்கள் நம்புகின்றனர். இக்கிணற்றில் குளிப்பதைப் “பதம் விடுதல் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை முத்திரிக் கிணற்றில் குளிப்பதைப் புண்ணியமாக்க் கருதுகின்றனர்.
உண்டியல் முறை
    அனைத்து மதங்களிலும் காணிக்கை, உண்டியில் போன்ற முறைகள் காணப்படுகின்றன. ஆனால் அய்யா வழிபாட்டில் உண்டியல், காணிக்கைகள் போன்ற நடைமுறைகள் கண்டிப்பாகக் கூடாது. அகிலத்திரட்டில் அய்யா வைகுண்டர் காணிக்கை போடும் வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். அய்யா பதிகளில் மட்டுமல்லாது, பிற ஆலயங்களிலும் காணிக்கை இடக்கூடாது என்கின்றார்.
     மேலும் கேளிக்கை நிகழ்வுகள், பலி இடுதல் போன்றவை கூடாது என்றும் அய்யா வைகுண்டர் தனது பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே அனைத்துப் பதிகளும், தாங்கல்களும் செயல்படுகின்றன.
காவி வண்ணம்
     காவி வண்ணம் தியானத்தின், அமைதியின், சமத்துவத்தின் அடையாளம். மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு. ஆகவே மனிதர்களில் வேறுபாடில்லை என்பதனை அடையாளப்படுத்தவே அய்யா வைகுண்டர் காவி வண்ணத்தைத் தமது இயக்கத்தின் குறியீடாகக் கொண்டார் என்று பக்தர்கள் கூறுகின்றனர்14
       பள்ளியறையில் நாமவேல் குறியிட்ட காவி வண்ணத் துணி அலங்காரமாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. பதிகளிலுள்ள குடைகள், தாங்கல்களிலுள்ள குடைகள் மற்றும் கொடி மரத்தின் கொடியும் காவி வண்ணம் கொண்டவையாகவே உள்ளன. பணிவிடைக்காரர்களும் காவி வண்ண உடையையே அணிந்துள்ளனர். தலைப்பாகையும் காவி வண்ணமே.
     பள்ளியறை மேடையில் நாம வேல் ( வேல் போன்று ) ஒன்று காவித்துணியாலோ அல்லது பட்டுத் துணியாலோ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேல் அறிவின் குறியீடு என்கிறார் தரவாளர் கேபாலகிருஷ்ணன் என்பவர்15
ஐந்து என்னும் எண்
    அய்யா வழி பக்தர்களுக்கும் ஐந்து என்னும் எண்ணுக்கும்  நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உதாரணமாக அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐந்து பேர், சீவாயுமார்கள் ஐந்து பேர்.  அது போன்று குளிக்கும்போது பனை ஓலையாலான பட்டையால் ஐந்து முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். தற்போது இதற்கு அலுமினிய வாளியைப் பயன்படுத்துகின்றனர்.
     முத்திரிப்பதத்தை ஐந்து முறை சிறங்கை அளவு கோரிக் குடித்தல். அய்யா சிவசிவா அரகரா என உச்சரித்தபடி ஐந்து முறை பதியை வலம் வருதல். கொடி மரத்தை ஐந்து முறை வலம் வருதல் போன்றவற்றைக் கூறலாம்.
     இதற்கான காரணம் பெரும்பாலான பக்தர்களுக்குத் தெரியவில்லை. முன்னோர்கள் கூறியபடி அவ்வாறு செய்து வருகிறொம் என்றெ கூறுகின்றனர். இது அய்யா வைகுண்டரின் ஐந்து வார்த்தை மந்திரமாக இருக்கலாம். காரணம் அய்யா சிவசிவா அரகரா என்னும் ஐந்து வார்த்தைகளைப் பக்தர்கள் கூறுவதைக் கூறலாம்.
ஒளி வழிபாடும் கண்ணாடி வழிபாடும்
    தமிழர்களின் வழிபாட்டில் முச்சுடர் வழிபாடு முக்கித்துவம் வாய்ந்தது. பகவத்கீதையில் கிருஷ்ணர் “ மதியில் ரவியில் ஒளியும் யான்16 என்றும், “தீயின் ஒளியும் ஆகின்றேன் என்றும் கூறுகின்றார்17
     ¯தத்தாழ்வார் நாரயணரை “ ஒளியுருவம் நின்னுருவம் என்கிறார்11 . அகிலத்திரட்டு திருமாலை “ சோதியே வேதச்சுடரே ( அகிலம். தொகு. 1 பக் 112) என்றும், வைகுண்டரை “ சிவ சோதி உமக்கபயம் ” ( அகிலம். தொகு. 2 பக். 98 ) என்றம் கூறுகின்றது.
     திருமாலும் வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்த செய்திகளும் ( அகிலம். தொகு. 2 பக். 32, அருள். பக். 66 ) இடம் பெற்றுள்ளன. ஒளி வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தவே திருமாலும், வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்தார் எனலாம். வைகண்டசுவாமியின் பதிகளின் பள்ளியறையில் ஒரு நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டு அதன் இரு பக்கங்களிலும் திருவிளக்கும் வைத்துத் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
     தெளிந்த மன உணர்வுடன் வழிபாடு அமைய வேண்டும் என்பதன் குறியீடாக கண்ணாடி வழிபாடு அமைகிறது எனலாம்.  ஒவ்வொரு மனிதர்களும் தம்மில் குடி கொண்டுள்ள நன்மைகளையும், உண்மைகளையும், கருணை மனதையும் கண்டு கொள்ளவே  அய்யா வைகுண்டர் கண்ணாடி வழிபாட்டினையும், ஒளி வழிபாட்டினையும் ஏற்படுத்தினார் எனலாம். கண்ணாடி வழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அய்யா வைகுண்டரையே சாரும்.
     “அகம் பிரம்மாஸ்மி ”  ( நானே பிரம்மம்) எனும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் அய்யா வைகுண்டரின் கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் அமைந்துள்ளது.  மேலும் கடவுளையும், மனிதனையும் பிரித்து வைத்திருந்த ஆன்மீக, மதச் சுவர்களை உடைத்தெறிந்து நானே கடவுளின் அம்சம். எனதுள்ளில் கடவுள் ஒளியாக ஒளிர்கிறார். அவரைத் தன்னுள் கண்டு கொள்வதே மனித வாழ்வின் பேரின்பம் என்பதே இவ்வழிபாட்டின் தத்துவமாகும்.
     மனிதர்களில் ஆண், பெண் வேறுபாடு இருப்பினும், ஆத்மாவில் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளின் முன் ஆத்மா சமமானதே. ஆத்மாவிற்கு இன்பம், துன்பம் எதுவுமில்லை என்பதை அடையாளப்படுத்தி, மனிதர்களில் வேற்றுமை நிலவுவதை உடைத்தெறியும் நோக்கத்தோடு இவ்வழிபாடு அய்யா வழி மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றது.
     ஒவ்வொரு மனிதர்களும் சென்று கண்ணாடியில் பார்க்கும்போது அவரவர் முகம் மட்டுமே காட்டும் கண்ணாடி போன்று, கடவுளும், அவரவர் மனதில் அவரவர் போன்றே  காட்சியளிப்பார் என்பதை நிறுவும் வண்ணம் அமைக்கப்பட்டது கண்ணாடி வழிபாடு.
     மத வழிபாட்டில் புதியதொரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி, மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க அய்யா வைகுண்டர் வழி செய்ததையே இவ்வழிபாடு வெளிப்படுத்துகிறது. கண்ணாடியின் முன் திருவிளக்கு ஏற்றி, அது ஒளிர்ந்து இருளை அகற்றி வெளிச்சம் தருவது போன்று, மனிதர்களும் தங்களுக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி, நன்மை என்னும் அக ஒளியை ஏற்றி ஆத்ம ஞானத்தை அடைய இவ்வழிபாடு உதவுகின்றது எனலாம்.
     தன்னுடைய உருவத்தை வரைந்து வழிபட முனைந்த பக்தர்களை அய்யா வைகுண்டர் நான் உங்களுக்குள்ளேயே குடி கொள்ளுகிறேன். உங்களது உருவத்திலேயே என்னைப் பாருங்கள். உங்களை என்னைப் போல் உயர்த்த வேண்டும். சுத்தமான மனதுள்ளவர்களாக  இருந்தால் மட்டுமெ இது சாத்தியப்படும்என்று அறிவுறுத்தினார்18.
     அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் போன்று அவரது வழிபாட்டு முறைகளும் முற்போக்குத் தன்மை கொண்டு விளங்குவதையே கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் அமைகின்றன எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக