வெள்ளி, 21 நவம்பர், 2014

ஆவணித் திருவிழா

ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஒன்றாம் திருவழா ஆரம்பமாகிறது. திருவழா நாட்களில் அன்பர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எப்பொழுதும் போல் தின வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. ஒன்றாம் திருவிழா அன்று அதிகாலை ஒன்பது மணியளவில் தலைமை அடிகளார் அவர்களால் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகின்றது. அப்பொழுது வாண வேடிக்கைகள் நடைபெறுகின்றன.
     ஒன்றாம் திருவிழா முதல் ஏழாம் திருவிழா வரை ஏழு ஊர்களிலிருந்து சாதி, மத, இன வேறுபாடுகளின்றி வீடுகள் தோறும் பிச்சை எடுத்து ( யுகார குரு பிச்சை ), அப்பொருட்களைக் கொண்ட எட்டாம் திருவிழா அன்று பெரிய உகப்படிப்பு என்னும் வழிபாட்டுப் பாடலைப் படித்து மகா அன்னதானம் நடைபெறுகின்றது ( எட்டாம் திருவிழா அன்று நடைபெறும் அன்னதானத்திற்குப் பிச்சையாக அரிசி, நெல், காசு, காய்கறிகள் என தங்களிடம் இருப்பதைக் காணிக்கையாக எல்லா இன, சாதி, மத மக்களும் அளிக்கின்றனர்).
     திருவிழா தினங்களில் தொட்டில் வாகனம், காளை வாகனம், அன்ன வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், அனுமார் வாகனம், இந்திர விமான வாகனம், நாற்காலி பவனியும் முதலிய வாகனப் பவனிகள் நடைபெறுகின்றன. இவ்வாகனப் பவனிகள் காலை, மாலை வேளைகளில் நடைபெறுகின்றன. அய்யா வகான பவனி வருதல் தினமும் சங்கொலியுடனும், வெண்கல மணியொலியுடனும் நடைபெறுகின்றது. அய்யாவின் வாகனப் பவனிக்குப் பின்னரே ஏனை வாகனகங்கள் பவனி வருகின்றன.
     முதல் நாள் திருவிழா வாகனப் பவனியின்போது தொட்டில் வாகனப் பவனியும், இரண்டாம் நாள் திருவிழா அன்று நாற்காலி பவனியும், மூன்றாம் நாள் திருவிழா அன்று அன்ன வாகனப் பவனியும் நிகழ்கின்றது.
     அன்ன வாகனப் பவனிக்கு வாகனத்தை வெண்மை வண்ண மலர்களால் அலங்கரிக்கின்றனர். நான்காம் நாள் திருவிழா அன்று சர்ப்ப வாகனப் பவனியும், ஐந்தாம் நாள் திருவிழா அன்று அய்யா வைகுண்டர் வாகனப் பவனி  நடைபெறுகின்றது. இவ்வாகனப் பவனிக்கு வாகனத்தை பச்சை வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர்.
     ஆறாம் திருவிழா அன்று நாக வாகனப் பவனியும், ஏழாம் திருவிழா அன்று கருட வாகனப் பவனியும் நடைபெறுகின்றது. கருட வாகனப் பவனிக்கு வாகனத்தைச் சிவப்பு வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர்.
     எட்டாம் திருவிழாவை மிக முக்கியத் திருவிழாவாக அய்யா வழி அன்பர்கள் கருதுகின்றனர். எட்டாம் திருவழா அன்று குதிரை வாகனப் பவனி சிறப்பாக நடைபெறுகின்றது. இவ் வாகனப் பவனி நிறைவு பெற்றவுடன் அய்யா வைகுண்டர் முத்திரிக் கிணறு வந்து கலியை வேட்டையாடும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு அம்பையும் வில்லையும் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு பக்தர்கள் முத்திரிக் கிணற்றின் புனித நீரை அருந்துகின்றனர்.
     பின்னர் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, சோட்டாபணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் போன்ற ஊர்களை நோக்கி ஊர்வலம் நடைபெறுகின்றது. இவ் ஊர்வலத்தின்போது தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் கூடியிருக்கும் மக்கள் அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை பொருட்களை வைத்துச் சிறப்பிக்கின்றனர். ஊர்வலம் இறுதியாக தலைமைப் பதியின் வடக்கு வாசலை வந்தடைந்தவுடன் ஊர்வலம் நிறைவடைகின்றது. அதன் பின்னர் மகா அன்னதானம் நடைபெறுகின்றது.
     ஒன்பதாம் திருவிழா அன்று அனுமான் வாகனப் பவனி நடைபெறுகின்றது. பத்தாம் திருவிழா அன்று இந்திர வாகனப் பவனி நடைபெறுகின்றது. இவ்வாகனப் பவனிகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதால் இதனைப் பார்க்க அதிகமான பக்தர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
     பத்தாம் திருவிழா அன்று நள்ளிரவு, இந்திர வாகனப் பவனி நடைபெறுகின்றது. இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிகழ்வதால் அய்யா வழி அன்பர்களால் இத்திருவிழா சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது. இவ்வாகனப் பவனியின்போதும் மிகுதியான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
     பதினொன்றாம் திருவிழா அன்று இரதத் திருவிழா நடைபெறுகின்றது. அன்று சுவாமித்தோப்புப் பதியின் இரதம் மிகவும் அழகாக அலங்கரிக்கின்றனர். மதியம் பன்னிரண்டு மணிக்கு வாகனப் பவனி ஆரம்பமாகிறது. அனைத்துத் தெருக்களிலும் வாகனப் பவனி நடைபெறுகின்றது. இவ்வாகனப் பவனி சரியாக ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக