வெள்ளி, 21 நவம்பர், 2014

வாரப் பணிவிடை

வாரத்திற்கு ஒருமுறை சிறப்பாக பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு வாரம் ஒருமுறை நடைபெறும் வழிபாட்டை வார வழிபாடு என்று கூறுகின்றனர்.
     பதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வழிபாட்டை வார வழிபாடு என்று அழைக்கின்றனர். அன்று வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டர் திருமாலின் அவதாரமாக அவதரித்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யா வழி மக்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர். இந்நாளை அவர்கள் புனிதமான நாளாகவும் கருதுகின்றனர்.
     அதிகாலை மூன்று மணிக்கு திருநடை திறக்கப்படுகின்றது. தின வழிபாட்டைப் போன்றே ஒருவர் சங்கொலியை முழக்கிய படியும், வெண்கல மணியை அடித்தபடியும் பதி தெருக்களில் வலம் வருகின்றார். அவரோடு அதிகமான மக்களும் ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர்.
     பின்னர் தின வழிபாட்டில் நடைபெறுவது போன்ற சடங்கு முறைகள் நடைபெறுகின்றன. தின வழிபாட்டை விட இவ் வார வழிபாட்டில் அன்பர்கள் அதிகமாகக் கலந்து கொள்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகின்றது. அய்யா வைகுண்டர் பதிகளில் நடைபெறும் அன்ன தருமம் எவ்வித சாதி, மத, பொருதார வேறுபாடுகள் இன்றி சமபந்தி போஜனமாக நடைபெறுகின்றது.
     அம்பலப்பதியில் மட்டும் செவ்வாய்க்கிழமையையும் சிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.  அதற்குக் அவர்கள் கூறும் காரணம் அம்பலப்பதியில் அய்யா வைகுண்டரோடு வீற்றிருக்கும் அம்மைக்குச் செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்கின்றனர் என்று கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக