வெள்ளி, 21 நவம்பர், 2014

போதிப்பு

ஒவ்வொரு  மத்த்தவர்களும் வழிபாட்டின்போது தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப கடவுளை வழிபடுவர். அய்யா வைகுண்டரும் தனது அன்பர்களுக்குச் சில வழிபாட்டு முறைகளைக் கூறியுள்ளார். அது போதிப்பு என அழைக்கப்படுகின்றது.
     வழிபாட்டின்போது தரையில் விழந்த வணங்குவது முக்கியமானதும், கட்டாயமானதுமான வழிபாடாகப் பக்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறு தரையில் விழுந்து வணங்கி எழுந்தபின் சில வழிபாட்டு முறைகளைக் குனிந்த நிலையிலும், நிமிர்ந்து நின்ற  நிலையிலும் கூறவேண்டும்.
     நிமிர்ந்து நின்று கூறுகின்றபோது கண்களின் பார்வை மூக்கின் நுனியைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
     போதிப்பின்போது அய்யா வைகுண்டரின் முன்னிலையில் நாம் நிற்பதாக எண்ணிக் கொண்டு, தெளிந்த உள்ளத்தோடு, எந்தவித உலக நினைவுகளும் குறிக்கிடா வண்ணம் இருக்க வேண்டும்.
     பதியில் பணிவிடை புரிகிறவர் தீபத்தை அமைதியோடு ஏற்றுகின்றார். அப்போது ஐந்து முறை திருச்சங்கு ஒலிக்கப்படுகின்றது. திருச்சங்கு ஒலித்து முடிந்தவுடன் எல்லாம் வல்ல அய்யா வைகுண்டரின் முன்பாக நிற்கும் நாம் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும் ( உடலின் எட்டு உறுப்புகளும் மண்ணில் படும்படி விழுந்து வணங்குதல் ), பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் ( கால் மூட்டுப் பகுதியைத் தரையில் ஊன்றி, உடலின் ஐந்து உறுப்புகள் மண்ணில் படும்படி வணங்குதல் ) செய்ய வேண்டும்.
வழிபாட்டின்போது அதிக ஆண், பெண்க் கூட்டம் காணப்படின் ஆண், பெண் இருவருமே பஞ்சாங்க வணக்கம் மட்டும் செய்கின்றனர். பின்னர் எழும்பிச் சற்றுக் குனிந்து ஐந்து முறை வாயில் அடித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு,
     அய்யா
       நாங்கள்
அறிந்தும் அறியாமல் செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும்
                                                     ( அருள். பக். 7 )
இதனைக் கூறும்போது குனிந்து நின்ற வண்ணம் தொடர்ந்து ஐந்து முறை  கூறுவதோடு, வாயிலும் ஐந்து முறை அடித்துக் கொள்கின்றனர். (இவ்வாறு செய்வது அய்யா வைகுண்டரிடம் தாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருவது போன்றாம் )
     “அய்யா பொறுத்து
      அய்யா மாப்பு தந்து
       அய்யா வைத்து இரட்சித்துக் கொள்ளணும்
        --------------------------------------
       ---------------------------------------
       ---------------------------------------
       அய்யா வைத்து இரட்சித்துக் கொள்ளணும்
                                           ( அருள். பக். 8 )
     இத் தினப் போதிப்பினைத் தங்கள் வீடுகளிலோ, தாங்கல்களிலோ வைத்தும் சொல்லிக் கொள்ளலாம்.
     உகப்படிப்புப் ( யுகப்படிப்பு ) பாடல் படித்து வழிபடுகிறபோது இத்தினப் போதிப்பை அதன் முன்னும் பின்னும் கூற வேண்டும். ஆனால் உச்சிப்படிப்பு வழிபாட்டிற்கு முன்பாக இப்போதிப்பைக் கூற வேண்டும் என்பன போன்ற வழிமுறைகளும் உள்ளன.  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பின் தினப்போதிப்பை ஒருவர் முதலில் சொல்ல ஏனையோர் அதைக் கேட்டு அவ்வாறே கூறுகின்றனர்.
வீடுகளிலும் இப்போதிப்பை அனுதினமும் கூறுகின்றனர். மேலும் ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இப்போதிப்பைக் கூறினால்  அவர்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும் சகல விதமான செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்றும் நம்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக