அவதார புருஷர்கள், காலத்தின் குழந்தைகள்.
இவர்கள் மக்களின் சமூக, சமய நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கும்
மகாத்மாக்களாக மண்ணில் மலர்கிறார்கள். அவர்கள் தமக்கென வாழாமல் பிறருக்கென
வாழ்கிறார்கள். குணமென்னும் குன்றில் வீற்றிருக்கிறார்கள். யான், எனது
என்னும் செருக்கறுத்து வையத்துள் வாழ் வாங்கு வாழ்வதால் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். பகவான் வைகுண்டர், கி.பி., 1809ம் ஆண்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் என்னும் ஊரில் பொன்னு நாடர்,
வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்
முத்துக்குட்டி என்பதாகும். தன் வீட்டிலேயே திருமால் கோயில் வைத்து
வைணவராகத் தம் ஆன்மிக வாழ்வைத் தொடங்கிய அவர், 1833 மார்ச் முதல்நாள்
வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் கடலுள் மூழ்கி ஞானம் பெற்று, மூன்று நாள்
கழித்து (மாசி 20-ம்தேதி) வைகுண்டசுவாமியாக வெளிப்பட்டார். பின்னர் தீவிர
சமய வாழ்வில் ஈடுபட்டார். சாதியில் பெயரால் ஒரு மத மக்கள் பிரியக்கூடாது
என்றும்; ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்குள் பகைமை கூடாது. இதை மக்களுக்குத்
தெளிவாக உணர்த்தி, சாதி சமய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார் வைகுண்டர்.
அவர் வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும், சைவத்தையும் தழுவி, சிவ
சிவ அரஹர என்ற வழி பாட்டுப் பாடலை இயற்றி மக்களிடையே பழக்கத்துக்குக்
கொண்டு வந்தார்.
ஒரு முறை இவர் திருவிதாங்கூர் அரசால் கைது
செய்யப்பட்டு 110 நாட்கள் சிறைவாசம் செய்து பல அற்புதங்கள் புரிந்து பின்
விடுதலை பெற்றார். அவருக்கு ஏற்பட்ட சிறைச் சோதனைகள் பல.அதனால் அவர் புகழ்
பெருகிவிட்டது. விடுதலைக்குப் பின் அவர் பணி தீவிரமடைந்து ஓர் இயக்கமாகவே
உருவாகிவிட்டது. வைகுண்டரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் என்ற புதுப்
பெயரால் அழைக்கப்பட்டனர். கல்வி வளம் பெறாத ஏழை எளிய மக்களிடையே ஆன்மிகப்
பணிபுரிந்த வைகுண்ட சுவாமி தனக்குத் துணைப் பணியாளர்களாக ஐந்து சீடர்களைத்
தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பாண்டவர் எனப் பெயரிட்டு அழைத்தார்.
அவர்களில் தர்மசீடர் எனப் புகழ் பெற்ற சிவனாண்டி என்பவரும், அரிகோபாலன்
சீடர் என்ற இயற்பெயர் உடைய சகாதேவன் சீடரும் வைகுண்டர் கொள்கைகளைப் பரப்பப்
பெரிதும் உழைத்துள்ளனர். தர்மசீடரின் திருவுருவம் கோயிலிலேயே சிறப்பாக
அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் அரிகோபாலன் சீடர். இத்
தொண்டர்களின் துணையோடு வைகுண்டர் நாட்டுமக்கள் மனதில் சமய உணர்வை
நிறைக்கவும், ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் துவையல் பந்தி என்ற துறவுக்
குழுவை அமைத்தார். அக்காலத்திலேயே சாதி பேதங்களை மறந்து 700 குடும்பங்கள்
துவையல் பந்தியில் பங்கேற்றனர். முற்றிலும் சைவத் துறவு நிலையை மேற்கொண்ட
இக் குடும்பங்கள் வைகுண்ட சுவாமியின் தலைமையில் கன்னியாகுமரிக்கு 2 கி.மீ.
வடக்கே கடற்கரையில் அமைந்துள்ள வாகைப்பதி என்ற இடத்தில் தனிக்குடியிருப்பு
அமைத்து துறவுப் பயிற்சி பெற்றன. இவர்களே பின்னாளில் வைகுண்டர் நெறி பெரு
வளர்ச்சி பெறக் காரணமாயினர். ஏழை எளிய மக்களின் பக்தி வளர்ச்சியோடு கல்வி
வளர்ச்சிக்கும் பணிபுரிய விரும்பிய வைகுண்டர் நிழல் தாங்கல் என்ற புதிய
அமைப்பொன்றை உருவாக்கினார். நிழல் தாங்கல் என்பது மரநிழலில் அமைந்த
வழிபாட்டு இடமாகவும், கல்வி நிலையாகமாவும் திகழ்ந்தது. மக்களுக்கு
இதிகாச-புராணங்களும் சமய உண்மைகளும் கற்பிக்கப்பட்டன. இவ்வமைப்பின் மூலம்
அய்யாவழி ஆல்போல் தழைத்துவிட்டது.
வைகுண்டர் ஒப்பற்ற தவஞானியாக விளங்கினார்.
சாமித்தோப்பில் ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்தார். தவ ஆற்றலால் செய்த
அற்புதங்கள் பல. மண்ணும் தண்ணீரும் கொடுத்தே மக்களின் நோய் நொடி
தீர்த்தார். குறை களைந்து நிறைபுகழ் எய்தினார். இந்து சமய மக்களின்
கட்டுக்கோப்புக் குலைந்துவிடாமல் இருப்பதற்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காவும்
சுவாமிகள் பல இடங்களில் பெரிய கோயில்களையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
அக்கோயில்கள் பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இப்பதிகளும்,
தாங்கல்களும் 150 வருடங்களாக இந்து சமயத்தின் அரண்களாகவும், வைகுண்டர்
நெறியின் கேந்திரங்களாகவும் விளங்கி வருகின்றன. இந்து சமயத்தின் ஒரு
மறுமலர்ச்சி இயக்கமாக விளங்கும் வைகுண்டர் நெறியை பல லட்சம் மக்கள்
பின்பற்றுகின்றனர். வைகுண்டர் 1851 ஜூன் 2ல் சமாதியானார். தம் இறுதியை
இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே சீடர்களுக்கு வெளிப்படுத்தினார்.
வைகுண்டரின் வரலாற்றுப் புராணமாக அவர் சீடர் அரிகோபாலன் படைத்துள்ள அகிலத்
திரட்டு அம்மானை 1841ல் படைக்கப்பட்டது. அந்நூல் 1851 ஜூன் 2ம் தேதி வரை
நடைபெற்ற நிகழ்ச்சிகளை யாவரும் வியக்கும்படி விளக்கிக் காட்டுகிறது.
இந்நூல் மற்றொரு வகையிலும் தனிச்சிறப்பு உடையது. தமிழில் உள்ள அம்மானைகளில்
பெரியது. சுவைகளில் தன்னிகரற்றது. வைகுண்டர் சமாதியடைந்த பின் அவர்
பென்மேனிக் கூட்டைப் பொதிந்து மணிக்கோயில் செய்து நாராயணசுவாமி கோயிலாகப்
பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கோயிலில், அவர் பயன்படுத்திய
திரும்பிரம்பு, சுரைக்குடுக்கை, கடயம் என்ற கைக்காப்பு முதலியன புனிதமாகக்
காக்கப்பட்டு வருகின்றன. சுவாமித் தோப்பில் உள்ள நாராயணசுவாமி
கோயிலில்,வைணவக் கோயில் சம்பிரதாயங்கள் யாவும் வழுவாமல்
பின்பற்றப்படுகின்றன. தமிழில் பெரிய அம்மானை இக்கோயில் தலபுராணமாக
அமைந்திருப்பது போல தமிழகத்தில் பக்தர்களால் சுமக்கப்படும் வாகனங்களில்
பெரியதான இந்திர விமான வாகனம் இங்குதான் உள்ளது. மாசி 20 ல் நடக்கும்
வைகுண்டர் ஜெயந்தி விழாவும், ஆவணி, தை, வைகாசி மாதங்களில் நடைபெறும்
பதினொரு நாள் திருவிழாக்களும் முக்கிய விழாக்களாகும். சுவாமித் தோப்பு
அய்யா வழிபாடுசக்தி மிக்க வழிபாடாக விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக