வியாழன், 16 ஏப்ரல், 2015

இறைவன் இரக்கமுள்ளவரா? நீதியுள்ளவரா?

மான்களையும் முயல்களையும் படைத்த இறைவன் தான் சிங்கம்,புலிகளையும் படைத்தார். தவளையை படைத்த இறைவன் பாம்புகளையும் படைத்து கீரி ,மயில், பருந்து, மற்றும் கழுகுகளையும் படைத்தார். எலியை படைத்து , பூனையையும் நாயையும் படைத்தார். மீனை படைத்ததுடன் கொக்கு மற்றும் நாரையையும் படைத்தது இறைவன் தானே?
உண்ண முடியாத அளவு செல்வம் படைத்த செல்வந்தரையும், கஷ்டப்பட்டு உழைத்து வயிற்றை மட்டும் சமாதானபடுத்தும் அன்றாடங்காய்ச்சியையும் வயிற்றுக்கு உணவு தேடி பிச்சை எடுக்கும் பிச்சைக் காரனையும் ஒரே இறைவன் தானே படைத்தார். அழகான உருவங்களையும் அருவருக்கத்தக்க உருவங்களையும் படைத்தவன் நாம் எந்நாளும் வணங்கும் இந்த இறைவன் தானே?
ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள் ? ஏன் இத்தனை துயரங்கள்?
தனது படைப்புகள் கஷ்டபடுவதை பார்த்து ரசிக்கும் கல்நெஞ்சம் கொண்டவனா இறைவன்?
அவரது கட்டுபாட்டில் இருக்கும் பஞ்ச பூதங்களையும் ஏவி விட்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் இந்த இறைவன் தானே? சுனாமி, புயல், பூகம்பம், வெள்ளம் வறட்சி, எரிமலை குழம்புகள் என்று தான் படைத்த உயிரினங்களை கொள்வதற்கு வித வித மான, வித்தியாசமான வழி முறைகளை கையாண்டு அதனை வேடிக்கை பார்ப்பவன் தானே இந்த இறைவன்.
ஊனமுற்றோர்களையும், மன வளர்ச்சி குன்றியவர்களையும் ,நோயாளிகளையும் படைத்தது விதி என்னும் பழி சொல்லி தான் தப்பித்து கொள்ளும் பயந்தான்கொள்ளியா இறைவன்?
ஆசைகளை கொடுத்து அது நிறைவேறாமல் தான் பெற்ற மக்களையே துடிக்க வைத்து துன்பங்களை கொடுக்கும் மோசக்கார அப்பன் தானே இந்த இறைவன்?
எல்லாம் வல்லவனாக இருந்தும் எதனையும் தேவையான நேரத்தில் செய்யாத உதவாக்கறையா இறைவன்? இல்லை சோம்பேறியா இறைவன்?
தன்னை வணங்குவோர்களை காப்பாற்றுவேன் என்று தற்பெருமைக்கு ஆசைபடும் இறைவன் அதனை கூட பல சமயங்களில் ஒழுங்காக செய்வதில்லையே?
இப்படிப்பட்ட இறைவனை வணங்குதல் அவசியமா?
வணங்குவதன் பலன் என்ன? பயன் தான் என்ன?
இறைவன் இந்த உலகத்தை பொருத்தவரையில் ஒரு பாசமுள்ள தாயாகவோ இல்லை தந்தையாகவோ நடந்து கொள்வதில்லை. மாறாக ஒரு நல்ல விவசாயியாகவே நடந்து கொள்கிறார். கடமையை செய் பலனை எதிர் பாராதே என்று கீதையில் சொன்ன இறைவன் தனது கடமைகளை மட்டும் செய்துகொண்டிருக்கிறார். அவரது கடமை நமக்கு நன்மை பயக்கும் போது அவரை தாயாகவும் தந்தையாகவும் பார்க்கிறோம். அவரது கடமை நம்மை தண்டிக்கும் விதமாய் இருந்தால் நாம் அவரை வி(ரோ)தியாக பார்க்கிறோம்.
படைப்பதும், காப்பதும்,அழிப்பதும் ஒரே இறைவன் என்பதை நாம் உணரவேண்டும். எனவே தான் பல சமயங்களில் நமது வேண்டுதல்கள் நிறைவேறாமல் போகிறது. காரணம் இறைவனில்லை. இறைவனை நோக்கிய நமது அணுகுமுறை தவறானது அவ்வளவு தான்.
நாம் கேட்பதை மட்டும் கொடுப்பது இறைவனின் தொழில் இல்லை. அவன் நாம் கேட்டதையும் கொடுப்பான். கேட்காததையும் கொடுப்பான். ஏனென்றால் மனம் இறைவனிடம் நன்மையை மட்டுமே கேட்கும் சுபாவம் உடையது. ஆனால் இறைவன் நன்மை ,தீமை இரண்டின் உறைவிடமாய் இருக்கிறான். கஷ்டங்கள் வந்தால், புலம்புவதும் , இறைவனை விடாப் பிடியாக வேண்டுவதும் அவை தீர்ந்தபின் இறைவனை மறந்து விடுவதும் மனதின் இயல்புதான்.
உலகத்தை சம நிலையில் இயக்குவதற்காக முப்பொருளும் ஒருபொருளாய் இருக்கும் இறைவன் நடத்தும் மேற்கண்ட திருவிளையாடல்கள் நம் மனதை பண் படுத்துவதற்காகவே யன்றி புண் படுத்துவதற்கு அல்ல. விதி என்னும் வலையில் சிக்கி விடுபட முடியாமல் தவிக்கும் நமக்கு பல நேரங்களில் இறைவனின் வார்த்தைகள் (வேதங்கள் ) வழிகாட்டி, வலி நீக்கி , வலையினின்றும் விடுபட வைக்கின்றன.
இந்த கஷ்டங்களை கண்டு நாம் மனம் தளரக்கூடாது என்பதற்காக த்தான் இறைவன் அவ்வப்போது மனித அவதாரமெடுத்து நம்மை விட அதிகமான கஷ்டங்களை நம் கண்முன்னே அனுபவிக்கிறான். அன்பாலும் பொறுமையாலும் அத்தனை சோதனை களையும், வேதனைகளையும்,வென்றும் காட்டுகிறான்.
வைகுண்டரே இந்த பூலோகத்தில் சான்றோரை காப்பதற்காக மனிதனாய் அவதரித்ததால் அவருக்கு கலி அரசனால் ஏற்பட்ட சோதனைகள் ஏராளம். துன்பங்களை கண்டு துவண்டு விடாத மனம் தான் பக்தியின் விளைவாக இருக்க வேண்டும்.எது நடந்தாலும் பொறுமையுடன் தாங்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை வேதங்களை படித்தாலும் மன உறுதி இல்லாதவர்கள் இறைவனை உணரவே முடியாது.
பொறுதி மகனே பெரியோர் ஆகுவது
உறுதி மகனே உலகமதை ஆளுவது
- அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்தை படிப்போம் .மன உறுதியை வளர்ப்போம். இறைவனை இறைவனாக பார்ப்போம்.இன்ப துன்பத்தை சமமாக ஏற்போம்.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக