வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்:

திருக்கல்யாணம்:
===============
வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன்
வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக
ஊருமிக அறிவதற்கு ஓலை தானும்
உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர்
பாருடனே சங்கமது திரண்டு கூடிப்
பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க
சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு
தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற் றன்றே
விளக்கம்:
கன்னியர் திருமணத்திற்கு முன் ஏற்பாடுகள்:
-----------------------------------------------------------------------------
கன்னிகளே, நாளை இரவு வாருங்கள் என்று வழி அனுப்பிவிட்டு மாயனாக நின்ற வைகுண்டர், வருணனுக்கும், வாயுவுக்கும், வானலோகத்தாருக்கும் உடனடியாக அழைப்பு எழுதி அனுப்பினார். உடனே, வானோர்கள் வானலோகக் கூட்டத்தாருடன் திரண்டு வந்தனர். பாவாணர்கள் கீதங்களை முறையாகப் பாடினர். அப்பொழுது கதிரவன் மேற்கில் அடைந்தான். மீண்டும் அடுத்த நாள் காலையில் சூரியன் உதித்து மாலையில் அடைந்ததும் இரவு வந்தது, வெள்ளியும் தோன்றியது.
அகிலம்:
=======
தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது
துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும்
கூன்றிருஷி தேவரிஷி வேத மானக்
குணயிருஷி கிணயிருஷி குலமா மாது
தான்றுசர சோதிபக வதிமா மாது
சதாகோடி தேவரம்பை சங்க மாக
மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி
மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே
விளக்கம்:
========
அவ்வாறு வெள்ளி தோன்றியபொழுது வானோர்கள், பார்வதி, ஈசர், விநாயகர், பிரம்மன், பூமாதேவி, கூன்றுரிஷி, தேவரிஷி, வேதம் கற்ற குணரிஷி, கிணரிஷி, சோதிமயமான பகவதி பல தேவரம்பைகள் ஆகியோர் ஒரே கூட்டமாகக் கூடியவண்ணம், இவ்வுலகம் புகழும் நாராயணர்க்கும், தெய்வக் கன்னிகளுக்கும் இன்று திருமணம் என்று சொல்லி அங்கே வந்தடைந்தனர்.
அகிலம்:
=======
வானமதில் டம்மான முழக்கத் தேவர்
மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற
நாரிமார் குரவையிட நமனு மாற
தானமுறை மாமடவார் சமனங் கூறத்
தரணிதனில் நாரணர்க்குந் தைய லான
மேனமுகில் மாதருக்கு மணமா மென்று
மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார்
விளக்கம்:
========
வானத்தில் இடம்மான மேளம் முழங்கியது, தேவர்கள் மலர் மாரியும், நறுமணம் நிறைந்த தண்ணீர் மாரியும் தூவினர். நான்முகனாகிய பிரம்மன் வேத முறையான நல்ல நேரம் பார்த்துக் கூறினார். பெண்கள் குரவை இட்டனர். மங்களகரமான அவ்விடத்திலிருந்து நமன மாறி நின்றான். தான முறையை உடைய மாமடவார், சமனம் கூறினர். பூவுலகில் நாராணர்க்கும் மேன்மையான மேகத்தைப் போன்ற கருங்கூந்தலையுடைய ஏழு கன்னிப்பெண்களுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்று சொல்லி விண்ணில் உள்ளவர்கள் மேலோகத்தில் அமைப்பதைப் போன்ற சிறந்த பந்தலைப் பூவுலகத்தில் அமைத்தனர்.
அகிலம்:
=======
பந்தலுக்கு நமனாதி கால தாகப்
பக்கம்பதி னைந்தும்வளை பரப்ப தாகச்
சந்தமுடன் மேற்கட்டி மறைய தாகச்
சாருமேல் மேய்ந்ததுவே சமய மாக
அந்தமுறை சூரியனும் விளக்க தாக
அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச்
சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத்
தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே
விளக்கம்:
========
இவ்வாறு விண்ணில் அமைப்பதைப் போன்று அமைக்கப்பட்ட பந்தலுக்கு, நமன் முதலியோர் பந்தல் கால்களாகவும், சந்திரனுடைய பதினைந்து திதிகளும் பரப்பப்பட்ட வளைகளாகவும், வேதங்கள் அழகுடன் கட்டப்பட்ட மேல் கட்டாகவும், சமயங்கள் வேயப்பட்ட சாரங்களாகவும் அமைக்கப்பட்டன. அந்த முறையில் சூரியனை விளக்காகவும், அலங்கார வானக்காயாகவும், எல்லாருக்கும் சொந்தமுள்ள சிவத்தைப் பீடமாகவும் ஆக்கி தேவர்கள் எல்லாரும் சேர்ந்து பந்தல் செய்து சிறப்பித்தனர்.
அகிலம்:
======
சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம்
திருமாலி னடிபணிந்து சொல்வா ரப்போ
பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்துப்
பேணியமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும்
உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன்
உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம்
நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும்
நிசவேலை யின்னதென நிகழ்த்து வீரே
விளக்கம்:
========
சிறப்பாகப் பந்தல் அமைத்தோம் என்று கூறி உயர்வான தேவர்கள் எல்லாரும் வைகுண்டர் பாதங்களைப் பணிந்து எங்கள் பெருமாளே, பசியினை ஆராய்ந்து பேணி அமுது அளித்து உயிர் அனைத்தையும் காக்கும் மன உறுதியான திருமாலே, அய்யாவே, உமது உதவியால் பந்தலின் மேற்கட்டுவரை செய்து முடித்து விட்டோம், இனி நாங்கள் இத்திருமண விழாவிற்குச் செய்ய வேண்டிய தேவையான வேலைகள் ஏதாவது இருந்தால் சொல்லுவீராக என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக